அக்னி பரீட்சை


அக்னி பரீட்சை
x
தினத்தந்தி 1 Nov 2018 10:30 PM GMT (Updated: 1 Nov 2018 12:39 PM GMT)

டி.டி.வி.தினகரன், தகுதிநீக்கம் செய்யப்பட்ட தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று வெளியிட்ட அறிவிப்பு, தமிழக அரசியலில் குறிப்பாக அனைத்து கட்சிகளிடமும் ஒரு பெரிய அதிர்வை ஏற்படுத்திவிட்டது.

ம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தகுதிநீக்கம் செய்யப்பட்ட தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று வெளியிட்ட அறிவிப்பு, தமிழக அரசியலில் குறிப்பாக அனைத்து கட்சிகளிடமும் ஒரு பெரிய அதிர்வை ஏற்படுத்திவிட்டது. ஏற்கனவே திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தவேண்டிய நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் இப்போதே தங்கள் பணிகளை தொடங்கிவிட்டார்கள். இந்த 18 எம்.எல்.ஏ.க்கள் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யாவிட்டால், ஜனவரி மாதத்துக்குள் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையர்  ஓ.பி.ராவத் ஏற்கனவே அறிவித்திருந்தார். 

அ.தி.மு.க.வில் தற்போது 116 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதில் 3 பேர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோரும் எந்தநிலையை எடுப்பார்கள் என்று உறுதியாக சொல்லமுடியாத நிலையில், தற்போது அ.தி.மு.க.வின் பலம் 110 ஆகத்தான் இருக்கிறது. எனவே, இந்த 20 தொகுதிகளில் குறைந்தது 8 இடங்களிலாவது வெற்றிபெற்றால்தான் ஒரு முழுமையான மெஜாரிட்டியை காட்டமுடியும். கருணாநிதி மறைவுக்குப்பிறகு, மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் தேர்தல் இது. கடந்த தேர்தலில் விஜயகாந்த் தலைமையில் போட்டியிட்ட ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள், இப்போது தி.மு.க.விடம் தோழமையாக இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடாது என்று தொல்.திருமாவளவன் அறிவித்துவிட்டார். 

தி.மு.க. கூட்டணியில் தற்போது 97 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். தி.மு.க.வை பொறுத்தமட்டில், 20 இடங்களிலும் வெற்றிபெற்று, மேலும் ஒரு எம்.எல்.ஏ.வின் ஆதரவு இருந்தால்தான் ஆட்சி அமைக்க முடியும். ஆனால் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்துவரும் 3 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டால் இந்த கணக்குகளெல்லாம் மாறிவிடும். இந்த 20 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றிபெற்ற 19 தொகுதிகளில் 2016–ம் ஆண்டு தேர்தலின்போது வெற்றிபெற்ற வித்தியாசத்தை பார்த்தால் சற்று வியப்பாக இருக்கிறது. திருப்பரங்குன்றம் தொகுதியில் 40,670 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மற்றபடி ஆண்டிப்பட்டியில் 30,196 வாக்கு வித்தியாசத்திலும், ஆம்பூரில் 28,006 வாக்கு வித்தியாசத்திலும், தஞ்சாவூரில் 26,874 வாக்கு வித்தியாசத்திலும், அரவக்குறிச்சியில் 23,661 வாக்கு வித்தியாசத்திலும் வெற்றிபெற்றது. மற்ற தொகுதிகளில் எல்லாம் வாக்கு வித்தியாசம் அவ்வளவு அதிகமாக இல்லை. ஓட்டப்பிடாரம் தொகுதியில் 493 வாக்கு வித்தியாசத்திலும், பெரம்பூரில் 519 வாக்கு வித்தியாசத்திலும், திருப்போரூரில் 950 வாக்கு வித்தியாசத்திலும் வெற்றிபெற்றது. தி.மு.க.வை பொறுத்தமட்டில், திருவாரூரில் கருணாநிதி 68,366 வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தார். ஆர்.கே.நகரில் வெற்றிபெற்ற டி.டி.வி.தினகரனின் பலமும் இந்த தேர்தலில் தெரிந்துவிடும். கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் உயிரோடு இல்லாதநிலையில், 20 தொகுதிகளின் தேர்தல் என்பது எல்லா கட்சிகளுக்குமே ‘அக்னி பரீட்சை’ என்றவகையில், ஒவ்வொரு கட்சியும் வெற்றி பெறவேண்டும் என்பதில் நிச்சயமாக முழு ஈடுபாடு காட்டும். எனவே, எல்லா கட்சிகளுக்குமே இந்த 20 தொகுதிகளின் தேர்தல் முடிவுதான் அரசியல் எதிர்காலத்தின் பாதையை திறக்கும்.

Next Story