பிரதமர் மோடியின் தீபாவளி பரிசு


பிரதமர்  மோடியின் தீபாவளி  பரிசு
x
தினத்தந்தி 4 Nov 2018 10:30 PM GMT (Updated: 4 Nov 2018 11:49 AM GMT)

‘தீபாவளி பண்டிகை’ என்பது நன்மைகள் பெருக்கெடுத்து ஓடவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் கொண்டாடப்படும் சுபதினமாகும்.

‘தீபாவளி பண்டிகை’ என்பது நன்மைகள் பெருக்கெடுத்து ஓடவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் கொண்டாடப்படும் சுபதினமாகும். இந்த நல்லநாளில் வேலைபார்க்கும் இடங்களிலிருந்தும், குடும்ப தலைவர்களிடமிருந்தும் ஏராளமான நன்மைகள் கிடைப்பது வழக்கமான ஒன்றாகும். அதுபோல, பிரதமர் என்ற முறையில், மத்திய அரசாங்க குடும்பத்தின் தலைவரான நரேந்திரமோடி நாட்டிலுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு 12 அறிவிப்புகளை தீபாவளி பரிசாக அள்ளித் தந்திருக்கிறார். நாட்டில் விவசாயத்துக்கு அடுத்து அதிகமாக வேலைவாய்ப்பு தருவது இந்த நிறுவனங்கள்தான். இந்தியாவில், தற்போது 6 கோடியே 33 லட்சத்து 88 ஆயிரம் நிறுவனங்கள் இந்த பட்டியலில் உள்ளன. இதன்மூலம் 11 கோடியே 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். 

தமிழ்நாட்டிலும் தற்போதைய நிலையில் 5 லட்சத்து 26 ஆயிரத்து 947 குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பதிவு பெற்றுள்ளன. இந்த நிறுவனங்களுக்கு ரூ.1 கோடி வரையிலான கடன் உதவிக்கான உத்தரவு இணையதளத்தில் விண்ணப்பித்த 59 நிமிடங்களுக்குள் வழங்கப்பட்டுவிடும் என பிரதமர் அறிவித்துள்ளார். இந்த கடன் உதவிகளெல்லாம் பெற சரக்கு சேவைவரி கட்டுவதற்காக பதிவுசெய்த நிறுவனங்களே தகுதியுடையதாகும். 2 சதவீதம் வட்டி தள்ளுபடி செய்யப்படும். ஏற்றுமதி செய்பவர்களுக்கு கப்பலில் ஏற்றுமதி செய்வதற்கு முன்போ அல்லது பின்போ 3 சதவீதமாக இருந்த வட்டி தள்ளுபடி, தற்போது 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல, அதிகாரிகள் ராஜ்யத்திலிருந்து நிவாரணம் அளிப்பதற்காக புதிய திட்டத்தை பிரதமர் அறிவித்துள்ளார். அதிகாரிகள் நினைத்த நிறுவனங்களுக்கு சோதனைக்கு செல்லமுடியாது. கம்ப்யூட்டர் ஒதுக்கீடு செய்யும் நிறுவனங்களுக்கு மட்டுமே செல்லமுடியும். அவ்வாறு சோதனை செய்த அறிக்கையை 48 மணி நேரத்திற்குள் அந்த அதிகாரி இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். 

இத்தகைய நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனைக்கு சந்தையையும் பிரதமர் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டார். அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் கண்டிப்பாக இத்தகைய நிறுவனங்களின் தயாரிப்புகளை தங்கள் தேவைகளுக்காக 25 சதவீதம் கொள்முதலை, இத்தகைய நிறுவனங்களிடமிருந்தே பெற்றுக்கொள்ளவேண்டும். இதில் 3 சதவீதம் பெண்கள் நடத்தும் நிறுவனங்களிடமிருந்தே கொள்முதல் செய்யவேண்டும். இதுமட்டுமல்லாமல், தொழிலாளர் சட்டம், சுற்றுச்சூழல் அனுமதி மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் அடுத்த 100 நாட்களுக்கு 100 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். தேர்தலை மனதில் வைத்து வெளியிடப்பட்ட அறிவிப்பு என்று விமர்சனம் எழுந்தாலும், நிச்சயமாக இந்தத்திட்டம் ரூபாய் மதிப்பு இழப்பினாலும், சரக்கு சேவை வரியினாலும் பெரும் பாதிப்புக்கு உள்ளான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பெரிதும் நன்மை பயக்கும். இதன்மூலம் உற்பத்தியும், வேலைவாய்ப்பும் பெருகும். 100 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிறைய வாய்ப்பு இருப்பதால் தமிழக அரசு உடனடியாக தமிழ்நாட்டில் அதிக மாவட்டங்களில் நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளை கேட்டுபெற முயற்சி எடுக்கவேண்டும். இது ஒரு நல்லவாய்ப்பு. இதை தமிழக அரசும் தவற விட்டுவிடக்கூடாது. பிரதமர் அறிவித்தபடி, இந்த 12 அறிவிப்புகளும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும்.

Next Story