2 ஆண்டுகளில் என்ன பயன்?


2 ஆண்டுகளில் என்ன பயன்?
x
தினத்தந்தி 9 Nov 2018 10:30 PM GMT (Updated: 9 Nov 2018 5:16 PM GMT)

நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமரால் அறிவிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகின்றன.

நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமரால் அறிவிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகின்றன. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. 2016–ம் ஆண்டு நவம்பர் மாதம் 8–ந்தேதி இரவில் திடீரென பிரதமர் நரேந்திரமோடி டெலிவி‌ஷனில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் அன்று நள்ளிரவு முதல் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார். ஊழல், கருப்பு பணம், கள்ளநோட்டுகள், பயங்கரவாதத்தை ஒழித்து, நாட்டை தூய்மைப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. சில நாட்கள் இதனால் ஏற்படும் சிரமத்தை தாங்கிக்கொள்ள மக்கள் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

அடுத்த நாள் முதல் பரம ஏழைகளிலிருந்து செல்வந்தவர்கள் வரை தங்களிடம் உள்ள பணத்தை வங்கிகளில் போடுவதற்கும், அன்றாட செலவுகளுக்காக ஏ.டி.எம்.களில் கொஞ்ச பணத்தை எடுப்பதற்கும் கால்கடுக்க ‘கியூ’வில் நின்றனர். வணிக நிறுவனங்கள், சிறுதொழில் நிறுவனங்கள் எல்லாம் கையில் பணப்புழக்கம் இல்லாமல் பெரும் பாதிப்புக்குள்ளாகின. வேலைவாய்ப்புகளில் நிறைய பாதிப்பு ஏற்பட்டது. கட்டிடவேலை, விவசாய வேலையைப்போல அன்றாட கூலி வேலைசெய்யும் கோடிக்கணக்கான மக்கள், அவர்களுக்கு வேலை கொடுப்போர் கையில் பணம் இல்லாததால் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். இந்தநிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு 

2 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டுள்ளது என்று நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறுகிறார். இல்லை... இல்லை... நாட்டின் பொருளாதாரம் இந்த நடவடிக்கையால் சீர்குலைந்து விட்டது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் உள்பட பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 

2016–ம் ஆண்டு நவம்பர் 8–ந்தேதி ரூபாய்நோட்டு மதிப்பிழப்பு அறிவித்தபோது, நாட்டில் 15.41 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் இருந்தது. இதில் ரூ.15.31 லட்சம் கோடி மீண்டும் செல்லாத நோட்டுகள் என்ற வகையில் ரிசர்வ் வங்கிக்கே வந்துவிட்டது. ரூ.10,720 கோடி மட்டும் திரும்ப வரவில்லை. ஆக, 99.3 சதவீதம் ரூபாய் நோட்டுகள் திரும்ப வந்துவிட்ட நிலையில், இந்த ரூ.10,720 கோடிதான் கருப்பு பணமாக இருந்து இருக்கிறது. குறைந்தது ரூ.3 லட்சம் கோடியாவது கருப்பு பணமாக இருக்கும். அந்த பணம் ரிசர்வ் வங்கிக்கு வராமல் அப்படியே செல்லாத நோட்டுகளாக மூழ்கிபோய்விடும் என்று எதிர்பார்த்த நிலையில், இவ்வளவு ரூபாய் மீண்டும் ரிசர்வ் வங்கிக்கு வந்தது மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறும்போது, வருமானவரி வசூல் உயர்ந்து இருக்கிறது. பணப்புழக்கம் முழுவதையும் வங்கி கணக்குக்கு கொண்டு வந்ததன் மூலம் பொருளாதாரம் முழுவதையும் கண்காணிப்புக்குள் கொண்டு வந்திருக்கிறோம் என்றெல்லாம் பெருமைப்பட பேசினாலும், இந்த ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, உற்பத்தி பெருமளவில் உயர்ந்து விடவில்லை. சாதாரண மனிதனின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்துவிடவில்லை. பிரதமர் கூறியபடி எவ்வளவு ஊழல், கருப்பு பணம், கள்ளநோட்டுகள், பயங்கரவாதம் இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் குறைந்துள்ளது என்ற பட்டியலைத்தான் நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதை தெரிவித்தால்தான் நாம் அனுபவித்த சிரமங்களுக்கு பலன் கிடைத்துள்ளது என்று பொதுமக்கள் மனநிறைவு கொள்ள முடியும். 

Next Story