நாடு உங்களுடன் இருக்கிறது


நாடு உங்களுடன் இருக்கிறது
x
தினத்தந்தி 11 Nov 2018 11:00 PM GMT (Updated: 11 Nov 2018 12:06 PM GMT)

நாகலாந்து மாநில தலைநகரான கொஹிமாவுக்கு செல்பவர்கள் அங்குள்ள போர்வீரர்கள் கல்லறைத் தோட்டத்தை பார்க்காமல் திரும்புவதில்லை.

இந்த இடத்தின் பசுமையை பார்த்து மனநிறைவு கொள்பவர்கள், அதில் எழுதப்பட்டுள்ள வாசகங்களை பார்த்து கண்களில் நீர் ததும்பாமல் திரும்பமுடியாது. ‘நீங்கள் வீட்டுக்கு திரும்பும்போது அங்குள்ளவர்களிடம் எங்களைப்பற்றி சொல்லுங்கள், அவர்களிடம் சொல்லுங்கள், உங்களுடைய நாளைய தினத்துக்காக எங்களுடைய இன்றைய தினத்தை உங்களுக்கு கொடுத்து விட்டோம்’ என்று எழுதப்பட்டு இருக்கும். அந்தவகையில், ராணுவ வீரர்கள் பணி என்பது மிகவும் உன்னதமான பணி. எல்லைப்பகுதியில் பனிபடர்ந்த மலையின்மேல் இரவும்–பகலும் ஓய்வில்லாமல் நாட்டின் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மற்ற அரசு பணிகளில் உள்ளவர்களைப்போல அவர்கள் குடும்பத்தினரோடு ஒன்றாக வாழமுடியாது.

இந்தியா–பாகிஸ்தான் எல்லைப்பகுதிகள், இந்தியா–சீனா எல்லைப் பகுதிகளில் நாட்டுக்காக கையில் துப்பாக்கியுடன் இரவும்–பகலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இதுமட்டுமல்லாமல், பயங்கரவாதிகள் ஊடுருவல், பயங்கரவாதிகள் அட்டகாசங்களை எதிர்த்து போரிடுதல், புயல்–வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளில் ஈடுபடுதல் என்று தியாகப்பணியில் ஈடுபடும் மாவீரர்கள்.

சமீபத்தில் தீபாவளி பண்டிகை வந்தது. எல்லோரும் தங்கள் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக கொண்டாடி னார்கள். ஆனால் எல்லைப்பகுதியில் உள்ள ராணுவ வீரர்கள் மட்டும் இந்த தீபாவளியை குடும்பத்தோடு கொண்டாட முடியாமல் தனிமையில் வாடினர். ஆனால் நீங்கள் தனியாக இல்லை, உங்களோடு இந்த நாட்டு மக்கள் இருக்கிறார்கள் என்று எடுத்துக்காட்டும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்தியா–சீனா எல்லைப்பகுதியில் 7,860 அடி உயரத்தில் உள்ள ஹர்ஷில் கன்டோன் மென்ட் பகுதிக்குச்சென்று அங்கு ரோந்துபணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள், இந்திய–திபெத்திய எல்லை யோர பாதுகாப்பு படைவீரர்களோடு தீபாவளியை கொண்டாடி, அவர்களுக்கு இனிப்புகளை ஊட்டி விட்டார். இதுபோல, மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனும், அருணாசலபிரதேச பகுதியில் உள்ள இந்தியா–சீனா எல்லையில் ராணுவத்தினருடன் தீபாவளியை கொண்டாடினார்.

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை ராணுவ வீரர்களோடு தான் கொண்டாடுகிறார். 2014–ல் சியாச்சின் மலைப் பகுதியிலும், 2015–ல் பஞ்சாப் எல்லைப்பகுதியிலும், 2016–ல் இமாசலபிரதேச எல்லைப்பகுதியிலும், 2017–ல் ஜம்மு–காஷ்மீரிலும் ராணுவ வீரர்களோடு தீபாவளியை கொண்டாடினார். பிரதமர் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடியதும், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் ராணுவ வீரர்களோடு தீபாவளியை கொண்டாடியதும் நிச்சயமாக வரவேற்கத்தக்க வேண்டிய ஒன்று. சென்னை நகரில் தீபாவளி அன்று பணியில் இருந்த போலீசாருக்கு போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இனிப்புகளை வழங்கினார்.

தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் தங்கள் குடும்பத்தோடு கொண்டாட முடியாமல், பணிநிமித்தம் காரணமாக வேலைபார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள போலீஸ், மருத்துவம், பஸ், ரெயில் மற்றும் விமான போக்குவரத்து, தீயணைப்புப்படை போன்ற பல பணிகளிலுள்ள அதிகாரிகள், ஊழியர்களோடு அந்தந்தத்துறை அமைச்சர்கள், உயர்அதிகாரிகள் சற்று நேரம் அவர்களோடு இருந்து அவர்களுக்கு உற்சாகம் ஊட்டினால், ‘நாம் தனி ஆள் இல்லை, இந்த நாடு நம்மோடு இருக்கிறது, இந்த நாட்டு மக்கள் நம்மோடு இருக்கிறார்கள்’ என்று மகிழ்வோடு பணியாற்ற முடியும். பிரதமரும், ராணுவ மந்திரியும் காட்டிய வழியை மற்ற பணிகளிலும் அதிகாரிகளும், அமைச்சர்களும் பின்பற்ற வேண்டும்.


Next Story