அனைத்துக்கட்சி கூட்டம் நல்ல முடிவு எடுக்கட்டும்


அனைத்துக்கட்சி கூட்டம் நல்ல முடிவு எடுக்கட்டும்
x
தினத்தந்தி 14 Nov 2018 10:30 PM GMT (Updated: 14 Nov 2018 1:30 PM GMT)

உலகில் உள்ள ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு பாரம்பரியம் இருக்கிறது. அந்தந்த மதவழிபாட்டு தலங்களில் வழிபாட்டுமுறைகள் தனித்தனியாக இருக்கின்றன.

லகில் உள்ள ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு பாரம்பரியம் இருக்கிறது. அந்தந்த மதவழிபாட்டு தலங்களில் வழிபாட்டுமுறைகள் தனித்தனியாக இருக்கின்றன. சமீபத்தில் முருகன் கோவில்களில் கந்த சஷ்டியையொட்டி சூரசம்ஹாரம் நடந்தது. பொதுவாக கந்த சஷ்டிக்கு பக்தர்கள் 6 நாட்கள் கடும்விரதம் இருப்பார்கள். இதுபோல, சபரிமலைக்கு செல்பவர்கள் 48 நாட்கள் கடும் விரதமிருந்து தலையில் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலையில் நடந்து சென்று சன்னிதானத்தில் 18 படியேறி அய்யப்பனை தரிசிப்பார்கள். இந்த கோவிலில் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கும், 50 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு மட்டுமே பெண்களில் அனுமதி உண்டு. இதற்கு இடைப்பட்ட வயதுள்ள பெண்களுக்கு சபரிமலையில் அனுமதி கிடையாது. இதுதான் காலம்காலமாக, பரம்பரை பரம்பரையாக வழிபடும் முறையாகும். 

ஆனால், கடந்த செப்டம்பர் 28–ந்தேதி திடீரென சுப்ரீம் கோர்ட்டில், சபரிமலைக்கு செல்ல பெண்களுக்கு தடையில்லை. அனைத்து வயது பெண்களும் அங்கு வழிபட செல்லலாம் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதற்கு அய்யப்ப பக்தர்கள் தரப்பில் பெரும் எதிர்ப்பு எழுந்தது. அந்த தீர்ப்புக்குப்பிறகு இரண்டுமுறை நடை திறக்கப்பட்டது. விரதமிருந்து பெண்கள் யாரும் கோவிலுக்கு வரவில்லை. பெண் ஆர்வலர்களும், பெண் பத்திரிகையாளர்களும், மாற்று மதங்களை சேர்ந்த பெண்கள் மட்டுமே கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்தனர். கேரள போலீசார் அவர்களுக்கு எவ்வளவோ பாதுகாப்பு அளித்தும் பக்தர்களின் கடும் எதிர்ப்பால் அவர்களால் சன்னிதானத்துக்குள் போக முடியவில்லை. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 3 ‘ரிட்’ மனுக்களும், 49 சீராய்வு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நேற்றுமுன்தினம் சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்சு, இந்த சீராய்வு மனுக்கள் அனைத்தும் ஜனவரி 22–ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். ஆனால், செப்டம்பர் 28–ந்தேதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்றும் உத்தரவிட்டது. 

இந்தநிலையில், சபரிமலையில் அய்யப்பன் கோவில் மண்டல–மகர விளக்கு பூஜைக்காக நாளை மாலை நடைதிறக்கப்படுகிறது. ஜனவரி 20–ந்தேதிவரை சபரிமலை நடைதிறந்திருக்கும். இந்த நாட்களில் சபரிமலைக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். பெரிய பாதையிலும், சின்ன பாதையிலும் பக்தர்களின் கூட்ட நெரிசலும் அதிகமாக இருக்கும். இந்த சூழலில், பெண்கள் அங்கு செல்வதும், அவர்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிப்பது என்பதும் நிச்சயமாக இயலாத ஒன்றாகும். சீராய்வு மனுக்கள் 22–ந்தேதிக்குதான் விசாரணக்கு வருகிறது. எனவே, மீண்டும் ஏற்கனவே பதிவு செய்த 560 பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயற்சி செய்யலாம். பக்தர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையும் ஏற்படும். மீண்டும் ஒரு குழப்பமானநிலை உருவாகும். இந்த சூழ்நிலையில், இதுகுறித்து என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம்? என்று ஆராய கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன் இன்று அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியிருக்கிறார். இது ஒரு நல்ல முடிவு. அனைத்துக்கட்சி கூட்டத்தில் பக்தர்களின் உணர்வுகளை மதிக்கும்வகையில் முடிவுகள் எடுக்கப்படவேண்டும். அந்த முடிவுகளை அரசாங்கமும் ஏற்று, அதற்கேற்ற வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். ஜனவரி 22–ந்தேதி சீராய்வு மனுக்கள் மீது விசாரணை நடத்தி, இந்த பிரச்சினையில் சுப்ரீம்கோர்ட்டு இறுதி முடிவு எடுக்கும்வரை காத்திருப்பதில் தவறே இல்லை.

Next Story