கோரதாண்டவம் ஆடிய ‘கஜா’ புயல்


கோரதாண்டவம் ஆடிய ‘கஜா’ புயல்
x
தினத்தந்தி 16 Nov 2018 10:15 PM GMT (Updated: 16 Nov 2018 6:49 PM GMT)

இயற்கையின் அருளையும், சீற்றத்தையும், மனிதர்களால் உருவாக்கவும் முடியாது, தடுக்கவும் முடியாது. அது மனித சக்திக்கு அப்பாற் பட்டது.

இயற்கை எப்போது தன்னுடைய கைகளை அகலவிரித்து விரல்களால் தழுவிக் கொள்ளும் என்றோ, கோர நகங்களால் கீறி காயப் படுத்தும் என்றோ, யாரும் அறுதியிட்டு சொல்ல முடியாது. நமது ஆற்றலுக்கு, அறிவுக்கு அப்பாற்பட்டது இயற்கை. பலநேரங்களில் தென்றலாக வருகிற காற்றே புயலாக புறப்படும்போது ஏராளமான சேதங்களை ஏற்படுத்திவிடும். எனவே, இயற்கையை அனுசரித்து அதை சமாளிப்பதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதும், அதை எதிர்கொள்ள தயார்நிலையில் இருப்பதும் மட்டுமே சேதங்களை கட்டுப்படுத்த உதவும். ஏற்கனவே இந்த பாடங்களை சுனாமி ஏற்பட்டபோதும், வார்தா, தானே, ஒகி ஆகிய புயல்களும், சென்னை பெரு வெள்ளமும் நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது. தற்போது ‘கஜா’ புயல் கோரதாண்டவம் ஆடி, பெரிய சேதங்களை ஏற்படுத்தி விட்டது. நாகை மாவட்டம் முழுவதையுமே புரட்டிப் போட்டுவிட்டது. திருவாரூர், தஞ்சை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் பல மாவட்டங்களில் அதன் கொடிய விளையாட்டை விளையாடி இருக்கிறது. ‘கஜா’ புயல் வருகிறது என்றவுடனேயே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள்-உயர் அதிகாரிகள் கூட்டத்தைக்கூட்டி தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க சிறப்பான ஏற்பாடுகளை செய்தது பாராட்டுக்குரியதாகும்.

உடனடியாக மாவட்டங்களுக்கு அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் ‘கஜா’ புயல் நாகை மாவட்டத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டது. 21,000 மின்கம்பங்கள், ஏராளமான மரங்கள் சாய்ந்துவிட்டன. 112 துணை மின்நிை-லையங்கள், 495 மின்கடத்திகள், 100 மின்மாற்றிகள் சேதம் அடைந்துள்ளன. பலர் வீடு இழந்திருக்கிறார்கள். 40-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். பலர் காயம் அடைந்திருக்கிறார்கள். விவசாய பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. நிவாரண முகாம்களில் 81,948 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சேதமதிப்பு கணக்கிடப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி உதவியும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், சிறுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். புயல் தாக்கிய நேற்றுமுன்தினம் சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் உதயகுமார், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சத்யகோபால், டாக்டர் அதுல்ய மிஸ்ரா, ராஜேந்திர ரத்னு ஆகியோரும், ஊழியர்களும் இரவு-பகலாக 24 மணி நேரமும் இருந்து நிலைமைகளை தொடர்ந்து கண்காணித்ததும் பாராட்டத்தக்கது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்திய தமிழக அரசு, அதே வேகத்தைவிட அதிக மாக இனிவரும் நாட்களில் சேதங்களை மதிப்பிடுவதி லும், சீர்செய்வதிலும், நிவாரணம் அளிப்பதிலும் போர்க் கால அடிப்படையில் வேகம் காட்ட வேண்டும். அரசு முதலில் மின்கம்பங்களை மாற்றி அமைத்து, மின்சார வசதி மற்றும் தொலைத்தொடர்பு வசதி செய்து கொடுக்க வேண்டும். இதுபோல, சேதங்களை மிகவேக மாக மதிப்பிட்டு, ஓரிரு நாட்களில் சேதவிவரம் மற்றும் தேவையான நிதிஉதவி குறித்து அறிக்கையை மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பி, அங்கிருந்து மத்தியகுழு இந்த சேத நிலைமைகளை நேரடியாக பார்வையிட உடனடியாக வரவழைக்க வேண்டும். மத்திய அரசாங் கத்திடம் கணிசமான நிதியைப் பெற்று பணிகளை மேற் கொள்ள வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக் கையை சிறப்பாக செய்து காட்டியதுபோல தமிழக அரசு, சீரமைப்பு பணிகளிலும் தன் வேகத்தை காட்ட வேண்டும். இந்த மாவட்டங்களில் இயல்பு வாழ்க் கையை ஒரு சில நாட்களில் திரும்ப கொண்டு வரவேண்டும்.

Next Story