‘தொடரட்டும் இந்த அரசியல் நாகரிகம்’


‘தொடரட்டும் இந்த அரசியல் நாகரிகம்’
x
தினத்தந்தி 18 Nov 2018 11:00 PM GMT (Updated: 2018-11-18T23:03:28+05:30)

ஜனநாயகத்தில் ஒவ்வொரு அரசாங்கத்திலும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் என்று உண்டு. தேர்தலில் மெஜாரிட்டி இடங்களில் வெற்றி பெறும் கட்சி ஆளுங்கட்சியாக அரசாங்கத்தை நடத்துகிறது.

 வெற்றி வாய்ப்பை தவற விட்டு அதிக இடங்களை பெற்றகட்சி அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி என்று கருதப்படுகிறது. அதற்கு குறைவான இடங்களை வாங்கும் கட்சிகளும் எதிர்க்கட்சிகளாகவே செயல்படும். அரசாங்கத்தில் மட்டுமல்லாமல், அரசியலிலும் இதேமுறையில்தான் கட்சிகள் செயலாற்றுகின்றன. அரசியல்ரீதியாக கட்சிகளுக்கிடையே மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். கொள்கைகளில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அரசாங்கத்தை நடத்தும்போது, ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் இரட்டைக்குதிரைகள் பூட்டப்பட்ட ‘சாரட்’ வண்டியைப்போல்தான் இயங்க வேண்டும். இரு குதிரைகளையுமே ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சிகளாகவும்தான் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ஆளுங்கட்சி திட்டங்களில் ஏதாவது குறைபாடு இருந்தால், அதை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்ட வேண்டும். ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்க வேண்டும். அதேபோல, ஆளுங்கட்சி நிறைவேற்றும் நல்லத்திட்டங்களை எதிர்க்கட்சிகள் பாராட்டும்போதுதான், ஆளுங்கட்சிக்கும் ஊக்கமளித்து தன்னுடைய கடமையை இன்னும் திறம்பட செயலாற்ற உதவும்.

பழைய காலங்களில் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே அரசியல்ரீதியாக மோதல்கள் இருந்தாலும், அதைத்தாண்டி நல்ல நட்பு இருந்தது. காங்கிரசை எதிர்த்துத்தான் தி.மு.க. வளர்ந்தது. ஆனால் தனிப்பட்டமுறையில் காமராஜருக்கும், அண்ணா, கலைஞருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. தி.மு.க.வை எதிர்த்துத்தான் அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கினார். ஆனால், ஒருபோதும் தன் அமைச்சர்கள் தி.மு.க. தலைவரை கருணாநிதி என்று பெயர் சொல்ல எம்.ஜி.ஆர். அனுமதித்ததில்லை. கலைஞர் என்று சொல்ல வேண்டும் என்றுதான் வலியுறுத்துவார். ம.பொ.சி.யை தமிழ்நாட்டின் மேல்சபை தலைவராக எம்.ஜி.ஆர். அரசு தேர்ந்தெடுத்த நேரத்தில், எதிர்க்கட்சித்தலைவராக இருந்த கலைஞர் அவையிலேயே அரசை மனமுவந்து பாராட்டினார். ஆனால், எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பிறகு, தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டது. ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சிகளை எதிரி கட்சிகளாகவே கருதினர். எதிர்க்கட்சிகளும், ஆளுங்கட்சியை எதிரி கட்சியாகவே கருதின.

இந்தநிலையில், ‘கஜா’ புயல் பாதிப்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு சிறப்பான பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. இதை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் பாராட்டினார்கள். இது தமிழக மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. மு.க.ஸ்டாலின், ‘புயல் குறித்த வானிலை மையத்தின் எச்சரிக்கை வெளியிடப்பட்டவுடன், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட விதம் பாராட்டுக்குரியது’ என்று கூறினார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ‘களப்பணிக்கு அனுப்பப்பட்ட அதிகாரிகளும், வானிலை ஆய்வுமைய அதிகாரிகளும் ஆற்றியபணி பாராட்டத்தக்கவை’ என்று கூறியிருக்கிறார். இதுபோல, தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த், மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் நடிகர் சரத்குமார், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் மற்றும் பல அரசியல்கட்சி தலைவர்கள் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மனமுவந்து பாராட்டியுள்ளது, தமிழ்நாட்டில் அரசியல் நாகரிகம் பட்டுபோய்விடவில்லை, இப்போது துளிர்த்துவிட தொடங்கியிருக்கிறது என்று மனமகிழ்ச்சியடைய செய்துள்ளது. இதை...இதை....இதைத்தான் தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தொடரட்டும் இந்த அரசியல் நாகரிகம்.

Next Story