மூடப்பட்டு கிடக்கும் பட்டாசு ஆலைகள்


மூடப்பட்டு கிடக்கும் பட்டாசு ஆலைகள்
x
தினத்தந்தி 19 Nov 2018 10:00 PM GMT (Updated: 2018-11-19T23:39:19+05:30)

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளால் மக்களின் மனஉணர்வுகளை, நம்பிக்கைகளை, வழிபாட்டு முறைகளை, மரபுகளை பாதிக்கும்நிலை ஏற்படும்போது மக்கள் பெரிதும் சஞ்சலப்படுகிறார்கள்.

அமெரிக்க வெள்ளை மாளிகையிலேயே அதிபர் டிரம்ப் மகிழ்ச்சியோடு கொண்டாடிய தீபாவளி பண்டிகை, இந்தியாவில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் பட்டாசுகளை வெடிக்கமுடியாமல் சத்தமில்லா தீபாவளியாக கொண்டாடப்பட்டது எல்லோருக்கும் மிகவும் மனக்குறைவை ஏற்படுத்தியது. ஆண்டு முழுவதும் வீடுகளில் பட்டாசு வெடிப்பதில்லை. தீபாவளி போன்ற ஓரிரு பண்டிகை நாட்களில் மட்டுமே குழந்தைகள் மட்டுமல்ல, குடும்பத்திலுள்ள அனைவருமே மத்தாப்பு கொளுத்தியும், பட்டாசுகளை வெடித்தும் மகிழ்வோடு கொண்டாடுவார்கள். பட்டாசு வெடிப்பது குறிப்பாக சரவெடிகள் வெடிப்பது என்பது மகிழ்ச்சியை, வெற்றியை பிரதிபலிக்கும் ஒரு நிகழ்வாகத்தான் கருதப்படுகிறது.

இந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, தமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவில் 7 மணி முதல் 8 மணி வரையில்தான் பட்டாசு வெடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதிலும் வெடிகள் வெடிக்கக்கூடாது. சரவெடிகள் வெடிக்கக்கூடாது என்று ஏராளமான கட்டுப்பாடுகள். சுப்ரீம்கோர்ட்டு பசுமை வெடிகள்தான் வெடிக்க வேண்டும் என்று ஒரு தீர்ப்பு கூறியிருக்கிறது. ஏற்கனவே இந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு விதித்த கட்டுப்பாடுகளின் எதிரொலியாக 60 சதவீதத்திற்குமேல் பட்டாசு விற்பனை சரிந்துவிட்டது என்று வியாபாரிகள் வேதனைப்படுகிறார்கள். அடுத்த ஆண்டும் இந்தநிலைதான் நீடிக்கும் என்ற அச்சத்தில் பட்டாசு உற்பத்தியாளர்கள் உற்பத்தியை தொடங்காமல் ஆலைகளை மூடிவிட்டார்கள்.

சிவகாசியில் மட்டும் 1,070 பட்டாசு ஆலைகள் மூடிக்கிடக்கின்றன. இந்த தொழிலை நம்பி அந்தபகுதியில் ஏறத்தாழ 10 லட்சம் பேர் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு எல்லாம் வேறு தொழில் தெரியாது. பட்டாசு தொழிற்சாலை மூடப்பட்டால் அவர்கள் எல்லாம் வேலையிழந்து வறுமையில் வாடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். பசுமை பட்டாசு உற்பத்தி செய்யவேண்டும் என்றால், எது பசுமை பட்டாசு?, அதை எவ்வாறு உற்பத்தி செய்ய வேண்டும்? என்பதெல்லாம் தெரியாதநிலையில், என்ன பட்டாசு உற்பத்தி செய்வது? என்று தெரியாமல் உற்பத்தியாளர்கள் திக்குமுக்காடி போயிருக்கிறார்கள். பேரியம் போன்ற ரசாயன பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று கூறினால், வேறெந்த ரசாயனப்பொருட்களை வைத்து பட்டாசுகளை உற்பத்தி செய்வது?, அதன் வழிமுறைகள் என்ன?, அதற்கு இப்போது பட்டாசு தொழிற்சாலைகளில் உள்ள கட்டமைப்பு போதுமா?, சாதனங்கள் போதுமா? என்பதெல்லாம் தெரியாதநிலையில், ஒரு தெளிவு பிறக்கும்வரை பட்டாசு ஆலைகளை திறக்க அதன் உரிமையாளர்கள் தயாராக இல்லை. பேரியம் பயன்படுத்தக்கூடாது என்றால், வெளிச்சம் தரக்கூடிய கம்பிமத்தாப்பு, சாட்டை, தரைசக்கரம், பென்சில்வெடி, புஸ்வாணம் போன்ற வெளிச்சம் காட்டும் எந்த பட்டாசும் உற்பத்தி செய்யமுடியாது. பேரியம் பயன்படுத்தக்கூடாது என்று எந்தநாட்டிலும் தடையில்லை என்கிறார், தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் மாரியப்பன். எனவே, உடனடியாக மத்தியஅரசாங்கம் இதில் தலையிட்டு, பட்டாசு ஆலைகள் திறப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும். சுப்ரீம் கோர்ட்டில், அரசு சார்பிலேயே சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும். டிசம்பர் 11-ந்தேதி இந்த வழக்கு விசாரணை சுப்ரீம்கோர்ட்டில் வரும்போது இந்த தொழிலை காப்பாற்றுவதற்கான அனைத்து கருத்துக்களையும் மத்திய அரசாங்கமும், தமிழக அரசும் தங்கள் வாதத்தின்போது தெரிவிக்க வேண்டும்.

Next Story