ஏற்றுமதிக்கு இன்னும் சலுகைகள்


ஏற்றுமதிக்கு இன்னும் சலுகைகள்
x
தினத்தந்தி 25 Nov 2018 10:30 PM GMT (Updated: 2018-11-25T22:47:22+05:30)

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்றுமதி–இறக்குமதி பெரும்பங்கு வகிக்கிறது. ஏற்றுமதிக்கும்–இறக்குமதிக்கும் உள்ள வித்தியாசமே நடப்பு கணக்கு உபரி அல்லது நடப்பு கணக்கு பற்றாக்குறை என்று அழைக்கப்படுகிறது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்றுமதி–இறக்குமதி பெரும்பங்கு வகிக்கிறது. ஏற்றுமதிக்கும்–இறக்குமதிக்கும் உள்ள வித்தியாசமே நடப்பு கணக்கு உபரி அல்லது நடப்பு கணக்கு பற்றாக்குறை என்று அழைக்கப்படுகிறது. இறக்குமதியைவிட ஏற்றுமதி அதிகமாக இருந்து அதன்மூலம் அன்னிய செலாவணி அதிகமாக கிடைக்கும்பட்சத்தில் நடப்பு கணக்கு உபரி என்று அழைக்கப்படுகிறது. அந்தநிலையில், அன்னிய செலாவணி கையிருப்பு அதிகமாக இருக்கும். ஏற்றுமதியைவிட, இறக்குமதி மற்றும் பணபரிமாற்றங்கள் உள்பட அதிகமாக இருந்தால் நடப்பு கணக்கு பற்றாக்குறை என்று அழைக்கப்படுகிறது. இந்த பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) ஒரு சதவீதமாக கணக்கிடப்படுகிறது. நடப்பு கணக்கு பற்றாக்குறை விகிதம் அதிகரித்துக்கொண்டே போகும்போது, அதனால் பணமதிப்பும் பாதிப்பு அடைகிறது. அதாவது நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும் நேரத்தில் ரூபாய் மதிப்பு குறைகிறது. 

நாடு சுதந்திரம் அடைந்தபிறகு, முதல்முறையாக வாஜ்பாய் பிரதமராக இருந்தநேரத்தில்தான் 2003 மற்றும் 2004–ம் ஆண்டுகளில்தான் நடப்பு கணக்கு உபரியாக இருந்தது. சில நோய்களுக்கு டாக்டர்கள் கொடுக்கும் மருந்து கசப்பாக இருக்கும் என்றாலும், குணமடைவதற்கு அதை உட்கொண்டுதான் ஆகவேண்டும். அதுபோல பெட்ரோலுக்கும், டீசலுக்கும் வழங்கப்பட்ட மானியத்தை வாஜ்பாய் நிறுத்தினார். ஏழைகள் பயன்படுத்தும் மண்எண்ணெய்க்கு மட்டும் மானியம் வழங்க உத்தரவிட்டிருந்தார். அதற்குப்பின்பு இந்தநிலை மாறிவிட்டது. இந்தநிலையில், இந்த நிதி ஆண்டில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையில் மொத்தம் 30,832 கோடி டாலர் அதாவது, 22,17,650.87 கோடி ரூபாய் அளவுக்கு பொருட்களும், சேவைகளும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் கடந்த ஆண்டைவிட ஏற்றுமதியில் 17.1 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதேகாலக்கட்டத்தில் இறக்குமதி அளவு 30,247 கோடி டாலர் ஆகும். ரூபாய் மதிப்பு 20,97,058.41 கோடி ரூபாய் ஆகும். கடந்த ஆண்டைவிட இறக்குமதியும் அதிகமாகி இருக்கிறது. நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 12 கோடி டாலர் குறைந்து இருந்த நிலையில், தற்போது 57 கோடி டாலர் அதிகரித்துள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் நிச்சயமாக இறக்குமதியை இன்னும் குறைத்து, ஏற்றுமதியை உயர்த்தவேண்டும் என்ற நிலையை தெள்ளத்தெளிவாக காட்டுகிறது. 

தற்போது ரெடிமேட் ஆடைகள், தங்க ஆபரணங்கள், மசாலா பொருட்கள், மின்னணு பொருட்கள், தோல் பொருட்கள் மட்டுமல்லாமல், விவசாய விளைபொருட்களும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதுமட்டுமல்லாமல், இன்னும் என்னென்ன பொருட்களை ஏற்றுமதி செய்யமுடியும்? என்பதில் கவனம் செலுத்தவேண்டும். ஏற்றுமதி செய்வதற்கு சின்னஞ்சிறு தொழில் அதிபர்களுக்கும்கூட அனைத்து உதவிகளையும் செய்து அதன் வழிமுறைகளை விளக்கவேண்டும். பல பெரிய விவசாயிகள், சிறு தொழில்அதிபர்கள் எல்லாம் தங்கள் உற்பத்தி பொருளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யலாம் என்றநிலையை தெரியாமல் இருக்கிறார்கள். அவர்கள் உள்நாட்டு சந்தையையே நாடுகிறார்கள். இதுபோன்ற தொழில்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் அமைத்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய கற்றுக்கொடுக்கவேண்டும். ஏற்றுமதிக்கு கூடுதல் சலுகைகளை அளித்து ஊக்குவித்தால் நிச்சயமாக ஏற்றுமதி உயரும். இதுபோல, இறக்குமதி செய்யும் பொருட்களில் எந்தெந்த இறக்குமதி பொருட்களை உள்நாட்டு உற்பத்தி மூலம் தவிர்க்கமுடியும். எந்தெந்த இறக்குமதி பொருட்களின் தேவையை குறைக்கமுடியும் என்பதில் அதிக கவனம் செலுத்தி, வரும்காலங்களில் நடப்பு கணக்கு உபரி என்றநிலையை ஏற்படுத்தும் வகையில் ஏற்றுமதியை உயர்த்தி, இறக்குமதியை குறைக்கவேண்டும்.

Next Story