காஷ்மீர் மாநில சர்ச்சை


காஷ்மீர் மாநில சர்ச்சை
x
தினத்தந்தி 27 Nov 2018 10:30 PM GMT (Updated: 2018-11-27T18:08:35+05:30)

காஷ்மீர் மாநிலம் அமைதி பூத்துக்குலுங்கும் மாநிலமாக இருக்கவேண்டும் என்று நாட்டு மக்கள் அனைவரும் விரும்பினாலும், அங்கு சர்ச்சைகள், பிரச்சினைகளுக்கு குறைவேயில்லை.

காஷ்மீர் மாநிலம் அமைதி பூத்துக்குலுங்கும் மாநிலமாக இருக்கவேண்டும் என்று நாட்டு மக்கள் அனைவரும் விரும்பினாலும், அங்கு சர்ச்சைகள், பிரச்சினைகளுக்கு குறைவேயில்லை. அங்குள்ள கட்சிகள் எல்லாம் வெவ்வேறு கொள்கையின் அடிப்படையில் இயங்கிவருகின்றன. பொதுவாக பாகிஸ்தானின் ஆதிக்கம் அங்குள்ள மக்களிடையேயும், அரசியல் கட்சிகளிடையேயும் இருக்கிறது என்ற ஒரு சந்தேகம் எல்லோருக்கும் உண்டு. 87 உறுப்பினர்களைக்கொண்ட காஷ்மீர் சட்டசபைக்கு, கடந்த 2016–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 

மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி 28 சட்டசபை தொகுதிகளிலும், பா.ஜ.க. 25 இடங்களிலும், உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி 15 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும், மக்கள் மாநாட்டு கட்சி 2 இடங்களிலும், இதர கட்சிகள் 5 இடங்களிலும் வெற்றிபெற்றன. ஆட்சி அமைக்க 44 இடங்கள் தேவை என்றநிலையில், எந்தக்கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லை. யாரும் எதிர்பார்க்காதவகையில், மக்கள் ஜனநாயக கட்சியும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்தது. காஷ்மீர் மாநிலத்தில் முதல் பெண் முதல்–மந்திரியாக மெகபூபா முப்தி பதவியேற்றார். ஆட்சி அமைத்து 2 ஆண்டுகளில் இரு கட்சிகளுக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு, இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பா.ஜ.க. கூட்டணி அரசாங்கத்திலிருந்து விலகியது. இதன் காரணமாக மெகபூபா முப்தி பதவியை ராஜினாமா செய்தார். கவர்னர் வோரா, கவர்னர் ஆட்சியை அமல்படுத்தினார். கவர்னர் ஆட்சி டிசம்பர் மாதத்தில் முடிய இருக்கிறது. புதிய கவர்னராக சத்தியபால் மாலிக் பதவியேற்று இருக்கிறார். 

இந்தநிலையில், எதிரும், புதிருமாக இருந்த மெகபூபா முப்தியும், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லாவும், காங்கிரசோடு கைகோர்த்து நாங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கிறோம் என்று கவர்னருக்கு பேக்ஸ் மூலம் தகவல் கொடுத்தனர். 2 எம்.எல்.ஏ.க்களை வைத்திருக்கும் மக்கள் மாநாட்டு கட்சி தலைவர் சஜ்ஜத்லோன், தனக்கு பா.ஜ.க.வின் 25 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 18 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருக்கிறது என்று தன்னை ஆட்சி அமைக்க அழைக்கும்படி கோரினார். முப்தி முகமது தனக்கு ஆதரவு இருக்கிறது என்று கோரிய ½ மணிநேரத்தில் சட்டசபையை கவர்னர் சத்தியபால் மாலிக் கலைத்துவிட்டார். இது எல்லோருக்கும் மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. வெவ்வேறு கொள்கைகள் கொண்ட அரசியல் கட்சிகளால் நிலையான ஆட்சியை அமைக்க முடியாது. குதிரைபேரம் மிக அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. இது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது இல்லை என்றெல்லாம் ஆட்சியை கலைத்ததற்கு காரணம் கூறினார் கவர்னர். யாருக்கு மெஜாரிட்டி இருக்கிறது என்பதை உறுதிபடுத்தி அந்தகட்சியை ஆட்சியமைக்க கோருவதுதான் கவர்னரின் வேலை. மாறுபட்ட கொள்கைகளை கொண்ட எதிர்க்கட்சிகள் ஒன்றுசேருகிறது என்று சொல்வது கவர்னருக்கு தேவையில்லாத வி‌ஷயம். யாருக்கு ஆதரவு என்பதை எம்.எல்.ஏ.க்களை நேரடியாக அழைத்து கணக்கிட்டிருக்கலாம். இல்லையென்றால், சட்டசபையை கூட்டச்சொல்லி யாருக்கு மெஜாரிட்டி என்பதை உறுதிபடுத்தியிருக்கலாம் என்று அரசியல் ரீதியாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தநிலையில், மெகபூபா முப்தி கோர்ட்டுக்கு போகப்போகிறார் என்று கூறப்படுகிறது. இனி கோர்ட்டு முடிவு எது என்றாலும், உடனடியாக தேர்தல் கமி‌ஷன் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடவேண்டும். தேர்தல் நடத்துவதே சாலச்சிறந்ததாகும்.

Next Story