‘கஜா’ புயலை காரணம் காட்டி தேர்தலை ஒத்தி வைக்கக்கூடாது


‘கஜா’ புயலை காரணம் காட்டி தேர்தலை ஒத்தி வைக்கக்கூடாது
x
தினத்தந்தி 29 Nov 2018 10:30 PM GMT (Updated: 2018-11-29T19:07:49+05:30)

தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதில், திருவாரூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் திருப்பரங்குன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அ.தி.மு.க.வை சேர்ந்த போஸ் ஆகியோர் கடந்த ஆகஸ்டு மாதத்தில் காலமானதையொட்டி, அந்த தொகுதிகள் உறுப்பினர் இல்லாமல் காலியாக இருக்கிறது.

மிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதில், திருவாரூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் திருப்பரங்குன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அ.தி.மு.க.வை சேர்ந்த போஸ் ஆகியோர் கடந்த ஆகஸ்டு மாதத்தில் காலமானதையொட்டி, அந்த தொகுதிகள் உறுப்பினர் இல்லாமல் காலியாக இருக்கிறது. இதுதவிர, அரூர், ஆண்டிப்பட்டி, பெரம்பூர், அரவக்குறிச்சி, பாப்பிரெட்டிபட்டி, பெரியகுளம், பூந்தமல்லி, பரமக்குடி, மானாமதுரை, சோளிங்கர், திருப்போரூர், ஒட்டப்பிடாரம், தஞ்சாவூர், நிலக்கோட்டை, ஆம்பூர், சாத்தூர், குடியாத்தம், விளாத்திகுளம் ஆகிய தொகுதிகளின் உறுப்பினர்களான டி.டி.வி.தினகரனின் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்களையும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18–ந்தேதி தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார். இதுதொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டு, சபாநாயகரின் நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பளித்த நிலையில், அந்த தொகுதிகளும் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் ஒரு ஆண்டுக்கும் மேலாக காலியாக இருக்கிறது. 

மக்களின் அத்தியாவசிய பணிகளுக்கு சட்டமன்ற உறுப்பினரின் சேவை மிகமிக முக்கியம். தங்கள் தொகுதியில் ஒரு குறை என்றால் மக்கள், சட்டமன்ற உறுப்பினரைத்தான் நாடுவார்கள். இதுமட்டுமல்லாமல், சட்டமன்றத்தில் அந்த தொகுதிகளிலுள்ள குறைகளையும், மக்கள் தேவைகளையும் தெரிவித்து, அரசின் கவனத்தை ஈர்த்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றால், அந்த தொகுதி மக்களின் பிரதிநிதியான சட்டமன்ற உறுப்பினர் இருந்தால்தான் முடியும். இந்தநிலையில், நாளை பதவியிலிருந்து ஓய்வு பெறப்போகும் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கடந்த 19–ந்தேதி பத்திரிகையாளர்களிடம், ‘பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இந்த 20 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்படும்’ என்று கூறியிருந்தார். அதே ஓ.பி.ராவத், ‘தந்தி டி.வி. செய்தியாளர் சலீமுக்கு கடந்த 26–ந்தேதி அளித்த பேட்டியில் ‘கஜா’ புயல் பாதிப்பையொட்டி, தமிழகஅரசு 20 தொகுதிகளிலும் தேர்தலை ஒத்திவைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டால், அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்’ என்று ஒரு மழுப்பலான பதிலை கூறியிருக்கிறார். இதேநாளில் திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கு உடனடியாக தேர்தல் நடத்தவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், தேர்தல் ஆணையம் திருவாரூர் தொகுதியில் பிப்ரவரி 7–ந்தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும், திருப்பரங்குன்றம் தொகுதியை பொறுத்தமட்டில், நிலுவையிலுள்ள வழக்கின் தீர்ப்பை பொறுத்தே தேர்தல் நடத்துவதுபற்றி முடிவு எடுக்கப்படும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

‘கஜா’ புயலுக்கும், இந்த 20 தொகுதிகளுக்கும் ஒட்டுமொத்தமாக எந்த சம்பந்தமும் இல்லை. திருவாரூர், தஞ்சாவூர் தொகுதிகளில் மட்டும் ‘கஜா’ புயலால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மற்ற தொகுதிகள் எல்லாம் ‘கஜா’ புயலால் பாதிக்காத மாவட்டங்களில்தான் இருக்கிறது. ‘கஜா’ புயல் பாதித்த 2 தொகுதிகளில்கூட இப்போதுதான் சட்டமன்ற உறுப்பினரின் பணி அத்தியாவசியமானது. எனவே, 20 தொகுதிகளிலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே, தேர்தல் கமி‌ஷன் தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும். தமிழகஅரசும் தேர்தலை தள்ளிப்போட வேண்டும் என்று கேட்கக்கூடாது. அரசியல் ரீதியாகவும் 20 தொகுதிகளின் தேர்தல் முடிவு பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதால், எல்லோராலும் தேர்தல்தான் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்கும் சுனில் அரோரா, இதை செய்வார் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Next Story