அந்தமானில் இருந்து தென்னங்கன்றுகள்


அந்தமானில்  இருந்து தென்னங்கன்றுகள்
x
தினத்தந்தி 2 Dec 2018 10:30 PM GMT (Updated: 2018-12-02T17:05:43+05:30)

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களிலும், திருச்சி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் சில பகுதிகளிலும் 11 லட்சத்து 22 ஆயிரத்து 686 மரங்கள் சேதமடைந்திருக்கிறது.

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களிலும், திருச்சி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் சில பகுதிகளிலும் 11 லட்சத்து 22 ஆயிரத்து 686 மரங்கள் சேதமடைந்திருக்கிறது. சரியாக இதே எண்ணிக்கையில் மரக்கன்றுகளை புதிதாக நட்டால், எத்தனை மரக்கன்றுகள் வளரும் என்று சொல்லமுடியாது. ஏனெனில், நட்ட மரக்கன்றுகள் அனைத்தும் வளர்ந்துவிடுவதில்லை. எனவே, குறைந்தது 15 லட்சம் மரக்கன்றுகளையாவது நடவேண்டும். அதையும் போர்க்கால அடிப்படையில் நடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். இதில் ஏராளமான மரங்கள் சாலையோரங்களில் இருந்த மரங்களாகும். எனவே, உடனடியாக சீரமைப்பு பணிகளில் ஒருபகுதியாக மரக்கன்றுகளை நடும்பணிகளை தொடங்கவேண்டும். 15 லட்சம் மரக்கன்றுகள் வேண்டுமென்றால் அதற்கான முன்னேற்பாடுகள் நர்சரிகளில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும். இதில் வனத்துறையின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். உடனடியாக வனத்துறை நர்சரிகளில் மரக்கன்றுகளை வளர்க்கும் பணிகளில் தீவிர வேகம் தேவை. 

இதுபோல, 45 லட்சத்திற்கும் மேல் தென்னை மரங்கள் சேதமடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் எத்தனை மரங்களை மீண்டும் நடலாம் என்பதை அதன் வேர்கள் பட்டுப்போகும்முன்பே கணக்கெடுத்து அரசே நடுவதற்கான பணிகளில் ஈடுபடலாம். ஏனெனில், இதுபோன்ற மரங்களை திரும்பநடுவது என்றால் கிரேன், புல்டோசர் மற்றும் 4 பேரின் துணை இல்லாமல் விவசாயிகள் தன்னந்தனியாக செய்துவிடமுடியாது. இவ்வளவு அதிகமான சேதத்துக்கு இது முழுமையான சாத்தியமும் இல்லை. 45 லட்சம் மரங்கள் சேதமென்றால், அங்கும் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட தென்னை மரக்கன்றுகள் தேவை. தற்போது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 3 இடங்களில் அதாவது, கோவையிலுள்ள பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் தென்னைமர நர்சரி மற்றும் ஆழியாரில் உள்ள தென்னைமர நர்சரி, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வேப்பங்குளம் ஆகிய இடங்களிலுள்ள தென்னைமர நர்சரிகளில் இருந்து விவசாயிகளுக்கு தென்னை மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. இந்த நர்சரிகளில் இருந்து ஒரேநேரத்தில் நிச்சயமாக வழங்கமுடியாது. 

இதுமட்டுமல்லாமல், வேப்பங்குளம் நர்சரியும் புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அங்கு உடனடியாக மரக்கன்றுகளை வளர்க்கும் நிலை இல்லை. இதுமட்டுமல்லாமல், 60 லட்சம் தென்னை மரக்கன்றுகளை நிச்சயமாக உடனடியாக ஒரே நேரத்தில் விவசாயிகளுக்கு வழங்க முடியாது. புயல் சேத பகுதிகளை பார்வையிட்ட மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், ‘தமிழக அரசிடம் போதுமான தென்னங்கன்றுகள் இல்லையென்றால், கர்நாடகா, ஆந்திரா, ஒடிசாவில் இருந்தும் தேவைப்பட்டால் அந்தமானில் இருந்து கப்பல்கள் மூலமும் தென்னங்கன்றுகளை கொண்டுவர தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தென்னை வளர்ச்சி அதிகாரியை தமிழக அரசுடன் ஆலோசனை நடத்த அனுப்பி வைக்கிறேன்’ என்று உறுதியளித்துள்ளார். இது பெரிதும் வரவேற்புக்குரியது. எனவே, தேவையான மரக்கன்றுகளையும், தென்னை மரக்கன்றுகளையும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியபடி, வெளிமாநிலங்களிலிருந்தும், தேவைப்பட்டால் வெளிநாடுகளிலிருந்தும் உடனடியாக வாங்கி நடுவதற்கு வேளாண்மைத்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் ஏற்பாடு செய்யவேண்டும். இதற்கு ஏற்பாடு செய்யவேண்டுமென்றால், விழுந்த மரங்களை முழுவீச்சில் அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும். எவ்வளவு மரங்கள், தென்னை மரங்கள் என்று துல்லியமாக கணக்கிடும் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும். இவ்வளவு புயலிலும் எல்லா மரங்களும் கீழே விழுந்தநிலையில், பனைமரங்கள் மட்டும் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கின்றன. எனவே, மரக்கன்றுகள் நடும்பணியில் பனை மரக்கன்றுகளையும் அரசு நிலங்களில் நடுவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

Next Story