பரபரப்பான நாடாளுமன்றக்கூட்டம்


பரபரப்பான நாடாளுமன்றக்கூட்டம்
x
தினத்தந்தி 4 Dec 2018 10:30 PM GMT (Updated: 2018-12-04T22:43:06+05:30)

அடுத்த சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. மே மாதத்துக்குள் தேர்தல் நடக்க இருப்பதால், அதற்கு முன்பு முழுமையான பட்ஜெட்டை மோடி அரசாங்கத்தால் தாக்கல் செய்ய முடியாது.

டுத்த சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. மே மாதத்துக்குள் தேர்தல் நடக்க இருப்பதால், அதற்கு முன்பு முழுமையான பட்ஜெட்டை மோடி அரசாங்கத்தால் தாக்கல் செய்ய முடியாது. இடைக்கால பட்ஜெட்டைத்தான் தாக்கல் செய்யமுடியும். இந்த நிலையில், கடைசியான ஒரு முழுமை நாடாளுமன்ற கூட்டத்தொடர் வருகிற 11–ந்தேதி கூடுகிறது. முதல் நாள் கூட்டத்தில் மறைந்த மத்திய மந்திரி அனந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, அத்துடன் அன்றையக்கூட்டம் ஒத்திவைக்கப்படும். இந்த கூட்டத்தொடர் 11–ந்தேதி முதல் ஜனவரி மாதம் 8–ந்தேதி வரை நடக்கும். இந்த இடைப்பட்ட நாட்களில் 20 நாட்கள் வேலைநாட்கள் என்பதால், 20 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றக்கூட்டம் நடக்கும். இது குளிர்கால கூட்டத்தொடர் என்று அழைக்கப்படுகிறது. பெயருக்குத்தான் குளிர்கால கூட்டத்தொடரே தவிர, இந்த கூட்டத்தொடரில் குளுமை இருக்காது. அனல் பறக்கும். காரசார விவாதங்கள் நடக்கும் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். 

ஏனெனில், நடந்துவரும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், மிசோரம், தெலுங்கானா மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள் 11–ந்தேதி அறிவிக்கப்பட்டிருக்கும். தற்போது மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வந்தது. மிசோரமில் காங்கிரஸ் ஆட்சியும், தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சியும் நடந்து வந்தது. இந்த தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கிறதோ, அந்தக்கட்சியின் குரல் ஓங்கி ஒலிக்கும். மேலும் பா.ஜ.க. அல்லாத எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்து, 

2019 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவேண்டும் என்ற முயற்சி தொடங்கியபிறகு நடக்கும் கூட்டத்தொடர் என்பதால், விவாதங்களில் இந்த கட்சிகளின் ஒற்றுமை எப்படி இருக்கிறது என்பதும் தெரிந்துவிடும். பா.ஜ.க. நிச்சயமாக தன் அரசின் சாதனைகளையெல்லாம் பதிவுசெய்யும். எதிர்க்கட்சிகளும் அரசை தாக்கும் வகையில் தன் வாதங்களை மேற்கொள்ளும். இந்த கூட்டத்தொடரில் பா.ஜ.க. அரசாங்கம் திட்டமிட்ட பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட முயற்சிகள் மேற் கொள்ளப்படும். முத்தலாக் சட்டம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஆனால் மாநிலங்கள வையில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. முத்தலாக் தொடர்பாக அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில், மாநிலங்களவையில் இந்த சட்டம் நிறை வேற்றப்பட்டால்தான் உண்மையான சட்டமாகும். இல்லையெனில், காலாவதியாகிவிடும்.

தமிழ்நாட்டில் இருந்து 39 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இப்போது இருக்கிறார்கள். இதில் 

37 பேர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள். ஒருவர் பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மற்றொருவர் பா.ம.க.வை சேர்ந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ். மாநிலங்களவையில் அ.தி.மு.க., தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த கூட்டத்தொடரில் தமிழக உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக ‘கஜா’ புயலுக்கு அதிக அளவில் மத்திய அரசாங்க உதவிக்கிடைக்க வாதாடி போராடி முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் துயரத்தைப்போக்க மத்திய அரசாங்கத்திடம் தமிழக அரசு கோரிய நிதிகளை பெறவேண்டும். இதுபோல, நிலுவையிலுள்ள தமிழக அரசின் கோரிக்கைகளை தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி பட்டியலிட்டு, அனைத்துக்கட்சி உறுப்பினர்களுக்கும் அனுப்பவேண்டும். அவர்கள் மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தவேண்டும். 

Next Story