சட்டசபையில் தனி தீர்மானம்


சட்டசபையில் தனி தீர்மானம்
x
தினத்தந்தி 5 Dec 2018 10:30 PM GMT (Updated: 5 Dec 2018 5:13 PM GMT)

ஆண்டாண்டு காலமாக காவிரி தண்ணீர் திறந்துவிடப்படுவது குறித்து தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் இடையே தாவா இருந்து வருகிறது.

ண்டாண்டு காலமாக காவிரி தண்ணீர் திறந்துவிடப்படுவது குறித்து தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் இடையே தாவா இருந்து வருகிறது. கர்நாடகம் ஆண்டுதோறும் தமிழ்நாட்டிற்கு 192 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு 177.25 டி.எம்.சி.யாக குறைத்து ஆண்டுதோறும் தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. 

2015–16–ம் ஆண்டில் 96.67 டி.எம்.சி. தண்ணீரும், 2016–17–ம் ஆண்டில் 62.21 டி.எம்.சி. தண்ணீரும், 2017–18–ம் ஆண்டில் 113.20 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே மேட்டூர் அணைக்கு திறந்துவிடப்பட்டது. ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு குறைந்தளவு தண்ணீர் வந்துகொண்டி ருக்கும் நிலையில், அவ்வாறு திறந்துவிடப்படும் தண்ணீரும் தமிழ்நாட்டிற்கு தேவைப்படும் நேரங்களில் திறந்துவிடப்படுவதில்லை. கர்நாடக மாநிலத்தில் தேக்கி வைக்கமுடியாத சூழ்நிலையில், அணைகளில் தண்ணீர் நிரம்பி வேறு வழியில்லாமல்தான் திறந்து விடுகிறார்கள் என்ற குறையும் உண்டு. கர்நாடகா தரப்பில் எங்களுக்கு பருவமழை பொய்த்துவிட்டது. எங்களுக்கே தண்ணீர் இல்லை. நாங்கள் எப்படி 177.25 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட முடியும் என்று கூறினார்கள். இந்தநிலையில் தமிழ்நாடு, கர்நாடகா எல்லை அருகே காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டவேண்டும் என்று கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. 

1981–ம் ஆண்டு ஜனவரி 1–ந்தேதி அப்போதைய கர்நாடக முதல்–மந்திரி குண்டுராவ் மேகதாதுவில் புதிதாக அணை கட்டப்போகிறேன், இது கன்னட மக்களுக்கு எனது புத்தாண்டு பரிசு என்றும் அறிவித்த நிலையில், மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆரின் முயற்சியால் அந்த திட்டம் செயல்படுத்தப்பட முடிய வில்லை. தொடர்ந்து கர்நாடக அரசு முயற்சி செய்வதும், தமிழக அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் ஒரு வாடிக்கையாக போய்விட்டது. ஆனால் இப்போது மேகதாது பிரச்சினை பெரிய விசுவரூபம் எடுத்துவிட்டது. மத்திய நீர்வள ஆணையம் மேகதாது அணை கட்டுவதற்கு சாத்தியக்கூறு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்து, விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க ஒப்புதல் அளித்துவிட்டது. காவிரி நீர் மேலாண்மை கூட்டத்தில் தமிழக அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சாதகமான பதில் இல்லை. மத்திய நீர்வள ஆணைய தலைவரே மேலாண்மை ஆணைய தலைவராகவும் இருப்பதால், அவர் போட்ட உத்தரவை அவரே மேலாண்மை ஆணையத்தில் ரத்து செய்வார் என்று எதிர்பார்க்க முடியாது. இந்தநிலையில், இன்று தமிழக சட்டசபையில் சிறப்புக்கூட்டம் கூட்டி, இதற்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் ஒரு தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. ஆனால், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவதால் மட்டும் எந்த பலனும் கிடைக்காது. ஏற்கனவே இரண்டுமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. 27–3–2015–ல் காவிரி பிரச்சினையில் மேகதாதுவில் கர்நாடக அரசு எந்த வொரு திட்டத்தையும் நிறைவேற்ற மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது என்று ஒரு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு இருந்தது. ஆக, வெறும் தீர்மானத்தை மட்டும் நிறைவேற்றிவிட்டால் எந்த பயனும் இல்லை. எனவே, ஒருபக்கம் தீர்மானம் நிறைவேற்றினாலும், மறுபக்கம் அனைத்து தமிழக எம்.பி.க்களும் கட்சி வேறுபாடின்றி கடந்தமுறை பிரதமர் மோடியை சந்தித்து பேசியதுபோல, உடனடியாக பிரதமரை சந்திக்கவேண்டும். அதேநேரத்தில் நேற்று தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்பட உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் விரைவுபடுத்தவேண்டும். இறுதித்தீர்வு சுப்ரீம் கோர்ட்டில்தான் கிடைக்கும். 

Next Story