பாரம்பரிய நெல் விதைகள்


பாரம்பரிய நெல் விதைகள்
x
தினத்தந்தி 7 Dec 2018 10:30 PM GMT (Updated: 2018-12-07T22:46:13+05:30)

‘பூத்துக்குலுங்கி சோற்று பிரச்சினையை தீர்க்கும் அரியவகை புல்தான் நெற்பயிர்’. அரிசி என்கிற தமிழ் வேர் சொல்லில் இருந்தே ரைஸ் என்கிற ஆங்கில சொல்லும், ஒரைசா என்கிற லத்தீன் சொல்லும் உருவாகின என்று அறுதியிடுகிறார்கள் அறிஞர்கள்.

‘பூத்துக்குலுங்கி சோற்று பிரச்சினையை தீர்க்கும் அரியவகை புல்தான் நெற்பயிர்’. அரிசி என்கிற தமிழ் வேர் சொல்லில் இருந்தே ரைஸ் என்கிற ஆங்கில சொல்லும், ஒரைசா என்கிற லத்தீன் சொல்லும் உருவாகின என்று அறுதியிடுகிறார்கள் அறிஞர்கள். முக்கிய உணவாக அரிசி இருந்த காரணத்தால் இந்தியா முழுவதும் எண்ணற்ற நெல் வகைகள், அதில் ஆளுயரம் வளரும் நெல்லும் உண்டு. கால் உயரம் வளரும் நெல்லும் உண்டு. ஆயிரக்கணக்கான ரகங்கள் வட்டாரத்துக்கு தகுந்தவாறு உருவாகி சிறந்தன. புத்தர் மெய்ஞானம் பெறுவதற்கு முன்பு, சுஜாதா என்ற பெண்மணி கொடுத்த சோறு ‘காலா நமக்கு’ என்கிற நெல் வகையை சார்ந்தது என்று சொல்கிறார்கள். இப்படி தட்பவெட்பத்துக்கு ஏற்பவும், மண்ணுக்கு ஏற்பவும், தேவைக்கு ஏற்பவும், நம்மிடம் இருந்த நெல் ரகங்கள் விஞ்ஞான வளர்ச்சி என்கிற பெயரால் அறிமுகப்படுத்தப்பட்ட அதிக விளைச்சல் ரகங்களால் அழிந்துபோயின. நமது முன்னோர்கள் பலவகை நோய்களுக்கு, ‘உணவே மருந்து’ என்றுதான் வாழ்ந்தார்களேதவிர, மருந்தே உணவு என்று வாழவில்லை. குறிப்பாக, பல்வேறு வகையான பாரம்பரிய நெல் வகைகளை ஆயிரக்கணக்கில், நம் முன்னோர்கள் தமிழ்நாட்டில் பயிரிட்டு வந்திருக்கிறார்கள். 

ஒவ்வொரு ஊரிலும் பல வகையான நெல் பயிர்கள் பயிரிடப்பட்டு இருந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, புற்றுநோயாளிகளுக்கு குள்ளங்கார், நீரிழிவு நோயாளிகளுக்கு கருப்பு கவுனி, வெள்ளத்தையும் சமாளித்து வளரக்கூடிய காட்டுயானம், உவர்நிலத்திலும் விளையக்கூடிய பூங்கார், குழியடிச்சான், அசைவ உணவு சமைப்பதற்கு கருங்குருவி, திருமணமான தம்பதிக்கு சமைத்துபோட மாப்பிள்ளை சம்பா, நல்ல சத்து தருவதற்காக குடவாலை, கவுனி, மோசானம், 

60 நாட்களில் அறுவடை செய்கின்றவகையில் அற்புதம் குறுவை என்று பல்வேறு வகையான ரகங்களில் நெல் பயிரிட்டிருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்புவரை இயற்கை விவசாயத்தை வளர்க்கவேண்டும் என்ற பிரசாரத்தை மேற்கொண்டார் நம்மாழ்வார். அவருடைய முக்கிய சீடராக விளங்கியவர்தான் ஜெயராமன். 

2006–ல் நம்மாழ்வார் கல்லணை முதல் பூம்புகார் வரை இயற்கை விவசாயத்தை பிரசாரம் செய்வதற்காக பாதயாத்திரை சென்றபோது, அவருடன் ஜெயராமனும் சென்றிருக்கிறார். வழியில் தலைஞாயிறு என்ற ஊரை அடைந்தபோது, அங்கு வயதான விவசாயி வடுகூர் ராமகிருஷ்ணன், ‘தன்னிடமிருந்த காட்டுயானம் என்ற பாரம்பரிய நெல் ரகத்தை கொடுத்து, இதுபோல இந்தப்பகுதியில் பல விவசாயிகளிடம் பாரம்பரிய நெல் ரகங்கள் இருக்கிறது. அதை நீங்கள் பெற்றுக்கொண்டு பிரபலமாக்கவேண்டும்’ என்று கூறினார். உடனே நம்மாழ்வார் அந்த நெல்லையும் வாங்கி, அதுதவிர பால்குடவாலை, பூங்கார், குடவாலை போன்ற 7 நெல் ரகங்களை சேகரித்து ஜெயராமனிடம் கொடுத்து, இன்று முதல் நெல் ஜெயராமன் என்று உனக்கு பெயர் சூட்டுகிறேன். இதுபோல, நெல் ரகங்களை மீட்டெடுத்து விவசாயிகள் பயிரிட உதவியாக இருக்க கேட்டுக்கொண்டார். அதை தன் தலையாய கடமையாக ஏற்றுக்கொண்டு, 174 பாரம்பரிய நெல் ரகங்களை கண்டறிந்து, ஆண்டுதோறும் தேசிய அளவிலான நெல் திருவிழாக்களை நடத்தி விவசாயிகளுக்கு வழங்கினார் நெல் ஜெயராமன். அவர் இப்போது மறைந்துவிட்டாலும், அவர் சார்ந்திருந்த, ‘நமது நெல்லை காப்போம் இயக்கம்’ தொடர்ந்து பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து விவசாயிகள் பயிரிட உதவியாக இருக்கவேண்டும். அவர் நடத்தியதுபோல ஆதிரெங்கம் என்ற ஊரில் ஆண்டுதோறும் நெல் திருவிழாக்கள் நடத்தப்படவேண்டும். 

Next Story