விவசாயிகளின் துயர் தீர்க்கப்படுமா?


விவசாயிகளின்  துயர் தீர்க்கப்படுமா?
x
தினத்தந்தி 9 Dec 2018 10:30 PM GMT (Updated: 9 Dec 2018 5:18 PM GMT)

வாயில்லா பூச்சிகளாக இருந்த விவசாயிகள் தங்கள் துயரங்களெல்லாம் தாங்கமுடியாமல், இப்போது வீதிக்கு வந்தால்தான் தங்கள் குறைகள் தீரும், அரசாங்கத்தின் கவனத்துக்கு கோரிக்கைகளை கொண்டு செல்லமுடியும் என்றவகையில், மாநிலங்களில் ஆங்காங்கு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

வாயில்லா பூச்சிகளாக இருந்த விவசாயிகள் தங்கள் துயரங்களெல்லாம் தாங்கமுடியாமல், இப்போது வீதிக்கு வந்தால்தான் தங்கள் குறைகள் தீரும், அரசாங்கத்தின் கவனத்துக்கு கோரிக்கைகளை கொண்டு செல்லமுடியும் என்றவகையில், மாநிலங்களில் ஆங்காங்கு போராட்டங்களை நடத்தி வந்தனர். மத்திய அரசாங்கத்தின் கதவுகளை தட்டவேண்டும் என்றால், தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தினால்தான் முடியும் என்றநிலையில், சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் 2 நாட்கள் விவசாயிகள் பேரணியாக சென்றனர். நாடு முழுவதிலும் உள்ள 207 விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து, ‘கிசான் முக்தி மோர்ச்சா’ என்றபெயரில் இந்த 2 நாள் போராட்டத்தை நடத்தினர். 

24 மாநிலங்களை சேர்ந்த 1 லட்சம் விவசாயிகள் இந்த பேரணியில் கலந்துகொண்டனர். அவர்களுடைய முக்கியமான கோரிக்கைகளாக விவசாயிகளின் தங்கள் பிரச்சினைகளை பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க 21 நாட்கள் சிறப்புக்கூட்டம் நடத்தவேண்டும். விவசாயக் கடன்களை ரத்து செய்யவேண்டும். விளைபொருட்களுக்கு உரியவிலை கிடைக்கவேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் கமி‌ஷன் அறிக்கையை நிறைவேற்றவேண்டும். விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடந்தது. பேரணிக்கு பிறகு நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசிய செயலாளர் டி.ராஜா, தேசிய மாநாடு கட்சித்தலைவர் பரூக் அப்துல்லா, லோக் தந்ரிக் ஜனதாதள தலைவர் சரத் யாதவ், டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட பா.ஜ.க.வுக்கு எதிரான பல அரசியல் கட்சித்தலைவர்கள் ஒரேமேடையில் நின்று விவசாயிகளுக்கு ஆதரவாக பேசினர். அரசியல் ரீதியாகவும் இந்த மேடையை எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக்கொண்டன. விவசாயிகளை பொறுத்தமட்டில், தங்களுக்கு அரசியல் தேவையில்லை. ஆனால், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்பதுதான் முக்கிய நோக்கம். 

பா.ஜ.க. அரசாங்கத்தை பொறுத்தமட்டில், 2022–ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தது. இதுமட்டுமல்லாமல், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு அவர்கள் உற்பத்தி செலவைவிட 50 சதவீதம் லாபம் கிடைக்கவும், மலிவான விலையில் இடுபொருட்கள் கிடைக்கவும், உடனடியாக கடன்வசதி கொடுக்கவும், விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தவும், அதிக விளைச்சல் தரக்கூடிய விதைகளை வழங்கவும், 100 நாள் வேலைதிட்டத்தை விவசாயத்தோடு இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும், 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகள், சிறு–குறு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் ஆகியோருக்காக நலத்திட்டங்கள் கொண்டுவரப்படும் என்பது உள்பட பல்வேறு உறுதிமொழிகளை அளித்திருந்தது. கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசாங்கம் மண்வள கார்டு, பயிர்க்காப்பீட்டு திட்டம், நீர்ப்பாசன திட்டங்கள், மின்னணு தேசிய மார்க்கெட், ஒப்பந்த விவசாய சட்டம், இயற்கை விவசாயம், பண்ணை கடன், குறைந்தபட்ச ஆதாரவிலை உயர்வு என்பதுபோன்ற பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினாலும், இவையெல்லாம் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரியவிலை கிடைக்கும் இலக்கையோ, தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளையோ அடையவில்லை என்பது நிதர்சனமான உண்மையாகும். அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே இருப்பதால், மத்திய அரசாங்கம் உடனடியாக விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றிடும் வகையிலும், தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றிடும் வகையிலும், வேகமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கூறியதுபோல, விவசாயத்துக்கு என தனியாக ஆண்டுக்கொள்கை வகுத்து அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Next Story