இவர்களால் தமிழ்நாட்டுக்கு பெருமை


இவர்களால் தமிழ்நாட்டுக்கு பெருமை
x
தினத்தந்தி 10 Dec 2018 10:00 PM GMT (Updated: 10 Dec 2018 12:30 PM GMT)

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அதன் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில்தான் அமைந்துள்ளது. இந்த இலக்கை நோக்கித்தான் மத்திய–மாநில அரசுகளால் பல திட்டங்கள் தீட்டப்படுகின்றன. பொருளாதார கொள்கைகள் வகுக்கப்படுகின்றன.

அரசுக்கு ஆலோசனை சொல்ல பல்வேறு துறைகளும், அமைப்புகளும் இருக்கின்றன. இதில், தலைமை பொருளாதார ஆலோசகர் பங்கு மிகமுக்கியமானதாகும். அவருடைய கடமை நாட்டின் முழுமையான பொருளாதார கொள்கைகளுக்காக அரசுக்கு ஆலோசனை தெரிவிக்கவேண்டும். இந்த வகையில்தான் ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆய்வறிக்கையை தலைமை பொருளாதார ஆலோசகர்தான் தயாரிக்கிறார். இதில், நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை, செல்லவேண்டிய பாதை என்று எல்லாமே முழுமையாக இருக்கும்.

பொருளாதார ஆய்வறிக்கையை தயாரிப்பது என்பது எளிதானதல்ல. நாட்டின் பொருளாதார நிலைமையை ஆய்வு செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல், சர்வதேச பொருளாதார நிகழ்வுகளையும், மாற்றங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, ஒரு திட்டம் தயாரித்து அரசுக்கு தாக்கல் செய்யவேண்டும். இவர் நிதி அமைச்சகத்திற்கு தனது ஆலோசனைகளையும், அறிக்கைகளையும் வழங்கவேண்டும். பொருளாதார விவகார அமைச்சகத்திலுள்ள பொருளாதார பிரிவின் தலைவர், தலைமை பொருளாதார ஆலோசகர்தான். மாதந்தோறும் மொத்த விலைவாசி குறியீடு தொகுப்பதும், தொழில்துறை உற்பத்தி கணக்கீடுகளை தொகுத்து வெளியிடுவதும் இவருடைய பொறுப்பில் வருகிறது. அவரும், அவரது குழுவும் இணைந்துதான் இந்திய பொருளாதாரத்தை பகுத்தாய்வு செய்து, கடந்த காலங்களில் எது சரியாக பலனளிக்கவில்லையோ? அதை நிவர்த்தி செய்து, இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த என்னென்ன சீர்த்திருத்தங்களை செய்யவேண்டும்? என்பதை அரசுக்கு தெரிவிப்பார்கள்.

அந்தவகையில், கடந்த 1956–ம் ஆண்டிலிருந்து இப்போது வரை 17 பேர் இந்தப்பணியில் இருந்திருக்கிறார்கள். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் 1972–ம் ஆண்டு முதல் 1976–வரை தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்திருக்கிறார். இப்போது 17–வது தலைமை பொருளாதார ஆலோசகராக தமிழ்நாட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் மிகமுக்கியமான ஒன்று உண்டு என்றால், அவருக்கு முன்பாக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன், ரகுராம்ராஜன் ஆகியோரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான். ஆக, தொடர்ந்து 3 தமிழர்கள் இந்த பொறுப்பில் இருப்பது தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாகும். இப்போது நியமிக்கப்பட்டிருக்கும் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் வங்கி மற்றும் பொருளாதார கொள்கைகளில் உலகப் புகழ்பெற்றவர். பொதுவாக ரிசர்வ் வங்கிக்கும், தலைமை பொருளாதார ஆலோசகர்களுக்கும் நல்ல உறவு இருக்காது. ஆனால், கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் ரிசர்வ் வங்கியின் பல குழுக்களில் ஒரு அங்கமாக உள்ளவர். இதன் காரணமாக நிச்சயமாக கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியனுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் நல்லுறவு திகழும் என்பதில் ஐயமில்லை. 47 வயதுடைய தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் பொருளாதார ஆய்வில் வல்லவர் மட்டுமல்லாமல், கர்நாடக இசையிலும் கைதேர்ந்தவர். மிக அருமையாக பாடல்களை பாடுவார். இவருடைய உடனடி பணி என்றால், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட இருக்கும் இடைக்கால பட்ஜெட்டுக்கு ஆலோசனை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இன்றைய பொருளாதார நிலையில் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க இவருடைய ஆலோசனை மிகவும் முக்கியமானதாகும்.

Next Story