உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தை மூடக்கூடாது


உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தை மூடக்கூடாது
x
தினத்தந்தி 11 Dec 2018 10:30 PM GMT (Updated: 2018-12-11T19:06:11+05:30)

விவசாய விளைபொருட்களுக்காக இப்போது ஒவ்வொரு விளைபொருளுக்கும் ஒரு ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது.

விவசாய விளைபொருட்களுக்காக இப்போது ஒவ்வொரு விளைபொருளுக்கும் ஒரு ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. இந்த ஆராய்ச்சி நிலையங்கள் விவசாயிகளுக்கு மிகவும் பயன்தரத்தக்கவகையில் இருக்கிறது. புதிய புதிய ரகங்கள், அதிலும் குறிப்பாக அதிக விளைச்சல் தரும் ரகங்கள் குறைந்த தண்ணீரை பயன்படுத்தி சாகுபடி செய்யும் ரகங்கள், பூச்சிமருந்து கொல்லிகள், உரங்கள் என்று பல கண்டுபிடிப்புகள் இந்த ஆராய்ச்சி நிலையங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. விவசாயிகளுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. 

இந்தியாவிலேயே 2 இடங்களில், நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் முத்தொரையிலும், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரிலும் உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. முத்தொரையில் இயங்கிவரும் மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையம் 1957–ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஊட்டியில் ஏறத்தாழ 5 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் உருளைக்கிழங்கு பயிரிடப்படுகிறது. நீலகிரி மலையின் தட்பவெப்பநிலை உருளைக்கிழங்கு சாகுபடிக்கு மிகவும் ஏற்றது. உலகிலேயே 3 பருவங்களிலும் உருளைக்கிழங்கு சாகுபடி செய்வதற்கும், புதிய புதிய ரகங்களை உருவாக்குவதற்கும் நீலகிரிதான் ஏற்ற இடம். இதுமட்டுமல்லாமல் இந்த ஆராய்ச்சி நிலையத்தில் பல புதிய வகையான பூச்சிமருந்து கொல்லிகளும் கண்டுபிடிக்கப்பட்டது. நோய்களை எதிர்க்கும் சக்திகொண்ட குப்ரி ஹிமாலினி, குப்ரி சூர்யா, குப்ரி சக்யாத்ரி ஆகிய உருளைக்கிழங்கு வகைகளை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. நீலகிரி மலைப்பகுதியில் மட்டுமல்லாமல் திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு போன்ற மாவட்டங்களிலும் உருளைக்கிழங்கு சாகுபடிக்கு இந்த ஆராய்ச்சி நிலையம் பெரும் உதவியாக இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, தென் மாநிலங்கள் முழுமைக்கும் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப உருளைக்கிழங்கு விதைகளை இந்த நிலையம்தான் சாகுபடி செய்து விவசாயிகளுக்கு வழங்குகிறது. விதைகள், பூச்சிமருந்து கொல்லிகள் மட்டுமல்லாமல், நவீன சாகுபடி மற்றும் உருளைக்கிழங்கை காப்பாற்றும் பல தொழில்நுட்பங்கள் இந்த ஆராய்ச்சி நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு நிச்சயமாக பாதுகாப்பு அரணாக இருக்கிறது. 

தற்போது இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் ஒவ்வொரு பயிருக்கும் ஒரு ஆராய்ச்சி நிலையம் இருந்தால் போதும். அதற்குமேல் உள்ள ஆராய்ச்சி நிலையங்களை மூடிவிடலாம் என்று முடிவெடுத்து, அதில் ஒரு அம்சமாக ஊட்டியில் உள்ள உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தை மூடிவிட மத்திய அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. இது தமிழகத்தில் மட்டுமல்ல, தென்மாநில உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த ஆராய்ச்சி நிலையத்தை மூடக்கூடாது என்று நீலகிரி உருளைக்கிழங்கு மற்றும் காய்கறி பயிரிடுவோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த ஆராய்ச்சி நிலையத்தை மூடக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்து பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் ஊட்டியில் உள்ள உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தை மூடும் திட்டத்தை கைவிடவேண்டும் என்று மத்திய அரசாங்கம் உத்தரவிட வேண்டும். ஒருவேளை அப்படி மத்தியஅரசாங்கம் மூடிவிட முடிவெடுத்தால் தமிழக அரசு தன் அதிகாரத்துக்குட்பட்டு, அந்த ஆராய்ச்சி நிலையத்தை தொடர்ந்து தமிழக அரசே ஏற்று நடத்த முடியுமா? என்பதையும் பரிசீலிக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் ஊட்டியில் உள்ள உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையம் மூடப்பட்டு விடக்கூடாது.

Next Story