பா.ஜ.க.வுக்கு சறுக்கல்


பா.ஜ.க.வுக்கு சறுக்கல்
x
தினத்தந்தி 12 Dec 2018 10:30 PM GMT (Updated: 2018-12-12T18:54:36+05:30)

அடுத்த 4, 5 மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் சூழ்நிலையில், மக்கள் மனதில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களில் ஜெயிக்கப்போவது யார்? என்பதே பரபரப்பான எதிர்பார்ப்பாக இருந்தது.

டுத்த 4, 5 மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் சூழ்நிலையில், மக்கள் மனதில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களில் ஜெயிக்கப்போவது யார்? என்பதே பரபரப்பான எதிர்பார்ப்பாக இருந்தது. அதிலும் இந்தி பேசும் மாநிலங்களான ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் தேர்தல் முடிவுகள் உன்னிப்பாக பார்க்கப்பட்டது. ஏனெனில், இந்த 3 மாநிலங்களில்தான் பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் நேரடி போட்டி இருந்தது. மேலும் 2014–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்த 3 மாநிலங்களிலும் மொத்தம் உள்ள 65 இடங்களில் பா.ஜ.க. 62 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் கடந்த 15 ஆண்டுகளாக பா.ஜ.க.தான் ஆட்சி அமைத்திருந்தது. 1998–ல் இருந்து ராஜஸ்தானில் ஒவ்வொரு தேர்தலிலும், மாறி–மாறி பா.ஜ.க.வும், காங்கிரசும் வெற்றி பெற்றுக்கொண்டிருந்தன. மிசோரமில் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியும், புதிதாக உருவான தெலுங்கானாவில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சியும் இருந்த நிலையில், நேற்று முன்தினம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

பா.ஜ.க. ஆண்டுகொண்டிருந்த சத்தீஷ்கார், ராஜஸ்தான், மத்தியபிரதேச மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. மிசோரம் மாநிலத்தில் இந்தமுறை காங்கிரஸ் தோல்வியடைந்து, மிசோ தேசிய முன்னணிகட்சி வெற்றி பெற்றிருக்கிறது. தெலுங்கானாவில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கிறது. மத்தியபிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 இடங்களில் காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. பெரும்பான்மைக்கு இன்னும் 2 இடங்கள் தேவைப்பட்டநிலையில், 3 சுயேச்சைகளும், 2 இடங்களில் வெற்றிபெற்றிருந்த பகுஜன் சமாஜ் கட்சியும் ஆதரவுக்கரத்தை நீட்டியுள்ளது. இந்தத்தேர்தல் முடிவுகள், பா.ஜ.க.வுக்கு பெரிய சறுக்கல் என்பதை யாரும் மறுத்துவிடமுடியாது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில், 2017–ம் ஆண்டு டிசம்பர் 11–ந் தேதிதான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக ராகுல்காந்தி பதவியேற்றார். சரியாக ஒரே ஆண்டில் அதே 11–ந்தேதியில் காங்கிரசுக்கு கிடைத்துள்ள இந்த வெற்றி அவரது தலைமைக்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாகும். 

கடந்த 10–ந் தேதிதான் பா.ஜ.க.வை எதிர்க்க, காங்கிரஸ் உள்பட 21 கட்சிகள் ஓரணியில் நின்று கூட்டம் நடத்தியது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ்யாதவின் சமாஜ்வாடி கட்சியும் அந்தக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இப்போது பகுஜன் சமாஜ் கட்சி மத்தியபிரதேசத்தில் காங்கிரசுக்கு ஆதரவு என்று அதுவும் இந்த அணிக்கு வந்துவிட்டது. இந்த வெற்றியினால் சமாஜ்வாடி கட்சி மற்றும் சில கட்சிகளும் எதிர்க்கட்சிகளின் அணிக்கு வரவாய்ப்பு இருக்கிறது. இந்தி பேசும் மாநிலங்களிலேயே பா.ஜ.க. வரமுடியாததற்கு, 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூபாய் நோட்டு செல்லாது என்று வெளியிட்ட அறிவிப்பால், இந்த மாநிலங்களிலுள்ள விவசாயிகள் மற்றும் நடுத்தர சாமானிய மக்கள் அடைந்த பெரியபாதிப்பு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதுபோல வியாபாரிகள், சிறுதொழில் வைத்திருப்பவர்கள், சரக்குசேவை வரியால் பெரும்பாதிப்பு அடைந்திருக்கிறார்கள். மேலும், வடமாநிலங்களில் வெங்காயம், வெள்ளைப்பூண்டு மற்றும் விவசாயிகளின் விளைபொருட்கள் அனைத்திற்கும் உரியவிலை கிடைக்காததால் விவசாயிகளின் வாழ்வில் பெரும்துயரம் ஏற்பட்டுள்ளது. கிராமப்புற மக்களின் பெருந்துயரும், நகர்ப்புற மக்களின் கோபமுமே பா.ஜ.க.வின் சறுக்கலுக்கு முக்கியமான காரணம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Next Story