அன்று கலைஞர் அழைத்தார்; இன்று ஸ்டாலின் முன்மொழிந்தார்


அன்று கலைஞர் அழைத்தார்; இன்று ஸ்டாலின் முன்மொழிந்தார்
x
தினத்தந்தி 17 Dec 2018 9:30 PM GMT (Updated: 17 Dec 2018 5:22 PM GMT)

நேற்றுமுன்தினம் அண்ணா அறிவாலயத்தில் நடந்த மறைந்த தலைவர் கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துவிட்டது.

தமிழக அரசியல் வரலாற்றில் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோர் ஆற்றியபங்கு அளப்பரியதாகும். இந்த தலைவர்கள் அனைவரின் சிலையும் அண்ணா சாலையில்தான் அமைந்துள்ளது. சென்னை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றபோதுதான் மாநகராட்சி சார்பில் 9–10–1961 அன்று பெருந்தலைவர் காமராஜர் சிலையை நேரு திறந்து வைத்தார். 1–1–1968 அன்றுதான் உலகத்தமிழ் மாநாட்டையொட்டி, எம்.ஜி.ஆர். வழங்கிய அண்ணா சிலையை, சர்.ஏ.ராமசாமி முதலியார் திறந்து வைத்தார். கலைஞர் கருணாநிதிக்கு சிலை அமைக்கவேண்டும் என்று முதலில் சொன்னது தந்தை பெரியார்தான். இது அவர் இன்று, நேற்று சொன்னதல்ல. 28–5–1968 அன்றே அவர் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை விடுதலையில் வந்திருக்கிறது. மீண்டும் 1971–ம் ஆண்டு இதை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டார். 

14–8–1971 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படும் என்று தந்தை பெரியார் அறிவித்தவுடன், பெரியார் சொன்னதை தட்டமுடியாமல் அப்படியானால் தி.மு.க. சார்பில் முதலில் தந்தை பெரியாருக்கு சிலை அமைத்து திறப்போம் என்று கருணாநிதி கூறி, அண்ணா சாலை சிம்சன் அருகே தி.மு.க. சார்பில் பெரியாருக்கு சிலை அமைக்கப்பட்டு 17–9–1974–ல் திறக்கப்பட்டது. அதன்பிறகு, திராவிடர் கழகத்தின் சார்பில் கருணாநிதிக்கு சிலை நிறுவப்பட்டு, அண்ணாசாலை தர்கா அருகில் 21–9–1975–ம் ஆண்டு அன்னை மணியம்மையார் தலைமையில் குன்றக்குடி அடிகளாரால் திறக்கப்பட்டது. 1987–ல் எம்.ஜி.ஆர். மறைந்த அன்று அந்த சிலை தகர்க்கப்பட்டது. ஆனால், அப்போது கருணாநிதி மிகவும் பெருந்தன்மையுடன், ‘‘என் சிலையை உடைத்த தம்பி என் முதுகில் குத்தாமல் மார்பில் தானே குத்தினான்’’ என்று புறநானூற்று தாயின் உணர்வை வெளிப்படுத்தினார். 

இந்தநிலையில், கருணாநிதி மறைந்தவுடன் அவர் யாரை தன் உயிர் மூச்சாக கொண்டிருந்தாரோ, அந்த அண்ணாவின் சமாதி அருகிலேயே, அவரது உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதே அண்ணாசாலையில் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் அண்ணா சிலை அருகே அவருடைய சிலையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அன்று தி.மு.க., மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட காமராஜர் சிலையை நேரு திறந்து வைத்தார். இப்போது, கருணாநிதி சிலையை நேரு குடும்பத்தில் வழி வந்த சோனியாகாந்தி திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் மற்றொரு சிறப்பு என்னவென்றால், 1980–ம் ஆண்டு சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் இந்திராகாந்தியை பிரதமராக அழைக்கும் வகையில், ‘நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக’ என்று கருணாநிதி முழக்கமிட்டார். தொடர்ந்து 2004–ம் ஆண்டு சென்னையில் நடந்த கூட்டத்தில், சோனியாகாந்தியை குறிப்பிடும்போது, ‘இந்திராவின் மருமகளே வருக, இந்தியாவின் திருமகளே வெல்க’ என்று பறைசாற்றினார். இப்போது 2018–ம் ஆண்டில் அதே கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில், கலைஞர் மகனான மு.க.ஸ்டாலின், நேருவின் கொள்ளுப்பேரனான ராகுல்காந்தியின் பெயரை பிரதமர் வேட்பாளராக முன்மொழியும் வகையில், ‘ராகுல்காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சி தருக’ என்று பிரகடனம் செய்துள்ளார். ஆக, நேற்று முன்தினம் நடந்த விழாவில் ஒரு பெரிய அரசியல் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.

Next Story