காங்கிரஸ் உற்சாகம்; பா.ஜ.க. தொய்வடையவில்லை


காங்கிரஸ்  உற்சாகம்; பா.ஜ.க. தொய்வடையவில்லை
x
தினத்தந்தி 18 Dec 2018 10:30 PM GMT (Updated: 2018-12-18T22:36:43+05:30)

2014–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 44 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தைகூட பெறமுடியாமல் இருக்கிறது.

2014–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 44 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தைகூட பெறமுடியாமல் இருக்கிறது. அடுத்த 4, 5 மாதங்களில் 2019 நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. இந்த நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய இந்தி பேசும் மாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலமான மிசோரமிலும், தென்னிந்தியாவில் தெலுங்கானா மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடந்தது. 2013–ம் ஆண்டு ஒருங்கிணைந்த ஆந்திரா உள்பட இந்த 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் ஏற்கனவே 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை பிடித்தது. ராஜஸ்தானில் காங்கிரசிடம் இருந்த ஆட்சியை பா.ஜ.க. தட்டிப்பறித்தது. மிசோரம் மாநிலத்தில் காங்கிரசும், தெலுங்கானாவை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த ஆந்திராவில் பா.ஜ.க. அணியில் இருந்த சந்திரபாபு நாயுடுவும் வெற்றிபெற்றனர். இந்த வெற்றிதான் 2014 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெறுவதற்கு ஒரு உத்வேகமாக இருந்தது. 

அதே உற்சாகமான மனநிலையில், இப்போது காங்கிரஸ் இருந்தாலும், இந்த தோல்வியைக் கண்டு பா.ஜ.க. தொய்வடைந்துவிடவில்லை. தோற்றுவிட்டோமே என்று முடங்கி உட்கார்ந்துவிடவில்லை. இந்தி பேசும் மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றிருந்தாலும், ஓட்டு எண்ணிக்கையில் இரு கட்சிகளுக்கும் இடையேயுள்ள வித்தியாசம் மெல்லிய இழை போன்றுதான் இருக்கிறது. தேர்தல் முடிவுகள் வந்தவுடனேயே, பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவும், பிரதமர் நரேந்திரமோடியும் உடனடியாக கட்சி நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில தலைவர்களை டெல்லிக்கு அழைத்து தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, 2019 நாடாளுமன்ற தேர்தலில் இந்த குறைபாடுகள் இருக்கக்கூடாது என்று ஊக்கம் அளித்துள்ளனர். அதேநேரத்தில், ராகுல்காந்தியும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்று, சரியாக முதலாம் ஆண்டில் கிடைத்த மிகப்பெரிய பரிசுதான் இந்த 3 மாநிலங்களின் வெற்றி என்ற வகையில், 3 மாநிலங்களிலும் முதல்–மந்திரி தேர்வை நடத்தினார். 3 மாநிலங்களிலுமே முதல்–மந்திரி பதவிக்காக அனுபவம் பெற்றவர்களும் காத்திருந்தனர். கட்சிப் பணியில் துருதுருவென பணியாற்றிய இளைஞர்களும் காத்திருந்தனர். இந்தநிலையில், ராகுல்காந்தி தன் டுவிட்டர் செய்தியில், ரஷிய தத்துவஞானி லியோ டால்ஸ்டாய் கூறிய பழமொழியான ‘‘பொறுமையும், காலமுமே மிகஅபரிமிதமான சக்திவாய்ந்த போர் வீரர்கள்’’ என்பதை பதிவிட்டிருந்தார். இந்த ஒரு செய்தியின் மூலம் அவர் இளைய சமுதாயத்தினர் பதவிக்காக காத்திருக்கவேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார். 

மத்தியபிரதேசம் மாநிலத்தை எடுத்துக்கொண்டால், இந்திராகாந்தியிடம், என்னுடைய 3–வது மகன் என்று பெயர்பெற்ற 72 வயதுடைய தொடர்ந்து ஒரே தொகுதியில் 9 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட கமல்நாத் முதல்–மந்திரி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் முதல்–மந்திரி பதவிக்கும், சச்சின் பைலட் துணை முதல்–மந்திரி பதவிக்கும் ராகுல்காந்தியால் தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றுள்ளனர். சத்தீஷ்கார் மாநிலத்தில் பூபேஷ் பாகேல் தான் முதல்–மந்திரி என்று சுமுகமான முறையில் முடிவு கண்டுவிட்டார். ஆக, பா.ஜ.க., காங்கிரஸ் இரு கட்சிகளிலுமே இப்போது பந்தயம் நாடாளுமன்ற தேர்தல்தான். அடுத்த 3, 4 மாதங்களிலும், இந்த இரு கட்சிகளுக்கும் இடையே அரசியல் பரபரப்புகளுக்கு பஞ்சம் இருக்காது.

Next Story