சரக்கு சேவை வரியை இன்னும் சீரமைக்க வேண்டும்


சரக்கு சேவை வரியை இன்னும் சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 20 Dec 2018 10:30 PM GMT (Updated: 20 Dec 2018 5:14 PM GMT)

கடந்த ஆண்டு ஜூலை 1–ந்தேதி முதல் ஜி.எஸ்.டி. என்று கூறப்படும் சரக்கு சேவைவரி அமலுக்கு வந்தது. அரசு தரப்பில், ‘இந்தியா ஒரே பொதுவான சந்தையாக ஒருங்கிணைக்கப்படும்.

டந்த ஆண்டு ஜூலை 1–ந்தேதி முதல் ஜி.எஸ்.டி. என்று கூறப்படும் சரக்கு சேவைவரி அமலுக்கு வந்தது. அரசு தரப்பில், ‘இந்தியா ஒரே பொதுவான சந்தையாக ஒருங்கிணைக்கப்படும். சரக்கு மற்றும் சேவைகளை வழங்குவதில் உற்பத்தி செய்வது முதல், நுகர்வோருக்கு சென்றடைவதுவரை ஒரேவரி விதிப்பாகும்’ என்று கூறப்பட்டது. இதன்படி, பல பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. 1,211 பொருட்கள், சேவைகளுக்கு 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் என்று 4 விதமான வரி விதிப்புகள் அமல்படுத்தப்பட்டன. இந்தநிலையில், பல பொருட்களுக்கு வரி விதிப்புகள் அதிகமாக இருக்கிறது என்று வர்த்தகம், தொழில்துறை, ஏன் பொதுமக்கள் மத்தியிலும் பெரியகுறை இருக்கிறது. 

நாட்டின் வளர்ச்சியையே பணமதிப்பிழப்பும், சரக்கு சேவைவரியும்தான் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது என்றும் கருத்துக்கள் வருகின்றன. மத்திய நிதி மந்திரி தலைமையிலான சரக்கு சேவை வரி கவுன்சில் கூட்டம் இதுவரை பலமுறை கூடி, பல பொருட்களின் வரிவிகிதங்களை குறைத்துள்ளது. இந்த வரி அமலுக்கு வரும்போது, 226 பொருட்கள் மற்றும் சேவைகள் 28 சதவீத வரி விதிப்பிலிருந்தது. பல கோரிக்கைகள் வந்தநிலையில், இதில் பல பொருட்கள் 18 சதவீத வரிவிதிப்புக்கு மாற்றம் செய்யப்பட்டு, இப்போது 35 பொருட்கள் மட்டுமே 28 சதவீத வரிவிதிப்பில் இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் நடந்த சரக்கு சேவைவரி கவுன்சில் கூட்டத்தில் கூட, பெயிண்டுகள், வார்னிஷ்கள், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வாசனை திரவியங்கள், அழகு சாதன பொருட்கள், குளியலறையில் பயன்படுத்தும் பொருட்கள், ஹேர் டிரையர்கள், சவரம் செய்யும் கருவிகள், கிரைண்டர், வேக்யூம் கிளினர், சிலவகை பேட்டரிகள் போன்ற பொருட்களுக்கு 28 சதவீத வரிவிதிப்பிலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. 

இந்தநிலையில் சரக்கு சேவைவரி கவுன்சில் கூட்டம் நாளை நடக்கிறது. மொத்தம் உள்ள பொருட்கள் சேவை வரியில், 99 சதவீத இனங்களுக்கு 18 சதவீதம் மற்றும் அதற்கு குறைவான வரிதான் விதிக்கப்படும் என்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். இந்த 35 பொருட்களில் ஏர்கண்டி‌ஷனர், சிமெண்ட், டயர்கள், மோட்டார் வாகன உதிரிபாகங்கள், மோட்டார் வாகனங்கள், விமானங்கள், வீடியோ கேமராக்கள், குளிர்பானங்கள், புகையிலை, சிகரெட் மற்றும் பான்மசாலா போன்றவை அடங்கும். சிமெண்ட் போன்ற பொருட்களுக்கு வரியை குறைத்தால், வீடு கட்டுதல் போன்ற கட்டுமானத்தொழில் வளர்ச்சி அடையும். இதனால் வேலைவாய்ப்பும் பெருகும். 28 சதவீத வரியை மட்டும் சீரமைப்பு செய்வதோடு விட்டுவிடக்கூடாது. இதுபோல, 12 மற்றும் 18 சதவீத வரிவிதிப்பில் உள்ள பொருட்களின் வரிகளையும் சீரமைக்கவேண்டும். 5 சதவீத வரிவிதிப்பில் உள்ள பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகள் தமிழக அரசு உள்பட மாநில அரசுகளின் சார்பில் விடப்பட்டுள்ளன. பொதுமக்கள், வர்த்தகர்கள், தொழில் அதிபர்கள் சார்பிலும் பல பொருட்கள், சேவைகளுக்கு வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதையும் பிரதமரும், சரக்கு சேவைவரி கவுன்சிலும் பரிசீலிக்கவேண்டும். மொத்தத்தில், பொதுமக்களுக்கும் சரி, வியாபாரிகளுக்கும் சரி, தொழில் அதிபர்களுக்கும் சரி, சரக்கு சேவைவரி கட்டுவது என்பது வலியை ஏற்படுத்தக்கூடாது, வரி கட்டுகிறோம் என்பதே தெரியாத வகையில் எளிமையாக இருக்க வேண்டும்.

Next Story