ஜூன் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல்


ஜூன் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல்
x
தினத்தந்தி 21 Dec 2018 10:30 PM GMT (Updated: 2018-12-21T22:45:22+05:30)

இந்திய ஜனநாயக அமைப்பில் உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில், மக்களோடு நேரடியான தொடர்பில் உள்ளவர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக் கப்பட்ட பிரதிநிதிகள்தான்.

ந்திய ஜனநாயக அமைப்பில் உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில், மக்களோடு நேரடியான தொடர்பில் உள்ளவர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தான். பொதுமக்கள் குறைதீர்க்கும் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகாலம் கடந்த 2016–ம் ஆண்டு அக்டோபர் 24–ந்தேதியோடு முடிவடைந்த நிலையில், அதற்குப்பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாமல், தனி அதிகாரிகள் நிர்வாகத்திலேயே இருக்கிறது. இதற்கு காரணம், உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடத்தாததுதான். தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள்,

12,524 கிராம ஊராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள் இருக்கின்றன. இதிலிருந்து 1,19,270 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். 

இந்தநிலையில், வார்டுகள் மறுவரையறை செய்யவேண்டும் என்ற காரணத்தைக்காட்டி, இதுவரை உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இவ்வாறு தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதால் பொது மக்களுக்கு மட்டும் பாதிப்பில்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரவேண்டிய நிதிகளும் மத்திய அரசாங்கத்தால் ஒதுக்கப்படாமல் இருக்கிறது. 14–வது நிதிக்குழு பரிந்துரையின்படி, உள்ளாட்சி அமைப்பு களுக்கு தேர்தல் நடந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருந்தால்தான், மத்திய அரசாங்கத்தின் மானியம் அவர்களுக்கு வழங்கப்பட முடியும். தேர்தல் நடத்தாததால் அந்த மானியம் இல்லாமல், உள்ளூர் வரிகள் மூலம் கிடைக்கும் சொற்ப தொகையை வைத்து தான் அடிப்படை வசதிகளை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தநிலையில், மத்திய அரசாங்கம் அடிப்படை மானியம் என்ற வகையில், ரூ.1,608 கோடியும், செயல்பாட்டு மானியம் என்ற வகையில் ரூ.560 கோடியும் உள்ளாட்சி அமைப்பு களுக்கு வழங்க வேண்டிய பாக்கியாக இருக்கிறது. ஆனால் நாடாளுமன்றத்தில் பஞ்சாயத்து ராஜ் ராஜாங்க மந்திரி, அ.தி.மு.க. உறுப்பினர் கே.பரசுராமன் கேள்விக்கு பதில் அளிக்கும்போது, ‘தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்துகள் இல்லாததால், இந்த தொகை வழங்கப்படவில்லை’ என்று உறுதிபட கூறிவிட்டார். ஆக, இனி உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் மத்திய அரசாங்கத்திடமிருந்து எந்த நிதியும் பெறமுடியாது.

தற்போது அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை பணி முடிவடைந்து, அதன்படி இடஒதுக்கீடு, சுழற்சிமுறை செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்பு பட்டியல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை ஐகோர்ட்டில், இன்னும் உள்ளாட்சி அமைப்புகளில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான வார்டு ஒதுக்கீடு முடிக்கப்படவேண்டும். அதற்கு 6 வாரகாலம் ஆகும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித் துள்ளது. ஆக, இன்னும் இந்த வேலை முடிவடையும் நேரத்துக்குள், அடுத்த மாதம் 10–ந்தேதிக்கு முன்பாக புதுவாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டு விடும். அந்த பட்டியலோடு இந்த வார்டு வரையறைகளை இணைக்க வேண்டும். இந்த பணியை தேசிய தகவல் மையம்தான் செய்ய வேண்டும். அவர்கள் குறைந்தது 95 நாட்கள் கால அவகாசம் கேட்கிறார்கள். இந்த சூழ்நிலையில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை மே 1–ந்தேதி வெளியிட்டு, ஜூன் மாதத்தில் தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் நடவடிக்கை எடுப்பார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மேலும் தாமதம் வேண்டாம். உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடத்தப்படாமல், தேர்ந்தெடுக்கப்பட பிரதிநிதிகள் இல்லாமல், மக்கள் அடைந்து கொண்டிருக்கும் இன்னல் போதும், அடிப்படை வசதிகளுக்காக மத்திய அரசாங்கத்தின் மானியம் இல்லாமல் உள்ளாட்சி அமைப்புகள் அவதிப்பட்டது போதும். 

Next Story