இயற்கை சீற்றத்தில், இந்தோனேசியா-இலங்கை


இயற்கை சீற்றத்தில், இந்தோனேசியா-இலங்கை
x
தினத்தந்தி 24 Dec 2018 11:17 PM GMT (Updated: 2018-12-25T04:47:17+05:30)

கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டை பெருமளவில் உலுக்கிய சுனாமி பாதிப்பு ஏற்பட்டநாள், நாளை தான். 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி தமிழக கடற்கரை பகுதிகள் எல்லாம் பெரும்பாதிப்புக்குள்ளாக்கிய அந்த கோரசம்பவம் இன்னும் மக்களின் நினைவிலிருந்து அகலவில்லை.

அந்தநாளில் அதிகாலை நேரத்தில் இந்தோனேசியா நாட்டிலுள்ள சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் பெரிய பூகம்பம் ஏற்பட்டது. அந்த பூகம்பத்தின் எதிரொலியாக, கடல் அரக்கனாக சுனாமி பேரலை உருவாகியது. அந்த சுனாமியின் அசுரத்தாண்டவத்துக்கு இந்தோனேசியா மட்டுமின்றி, இந்தியா, இலங்கை, தாய்லாந்து, கிழக்கு ஆப்பிரிக்கா, மலேசியா, மாலத்தீவு, மியான்மர், வங்காளதேசம் உள்பட பலநாடுகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின. இந்தநாடுகளில், மொத்தம் 2 லட்சத்து 39 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் மட்டும் 7,941 பேர் இன்னுயிரை இழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். கடலோர பகுதிகளில் எண்ணற்ற சேதம் ஏற்பட்டது. வீடுகளையும், உடைமைகளையும் இழந்து பலர் நிர்க்கதியாய் தவித்தார்கள். இன்னமும் கடலோர பகுதிகளில் உள்ள மீனவமக்கள் சுனாமி எந்தநேரமும் வந்துவிடுமோ? என்ற அச்சத்தில்தான் இருக்கிறார்கள்.

இந்தநேரத்தில், அதே இந்தோனேசியா நாட்டில், கடந்த செப்டம்பர் 28-ந்தேதி சுலவேசி என்ற தீவு பகுதியில் சுனாமி தாக்கியதால் 2,500பேர் மரணம் அடைந்தனர். இந்த சுனாமி வருவதற்கு முன்பு மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டு மக்களுக்கு சுனாமி அலைகள் தாக்கும் முன்பாக அபாய எச்சரிக்கை கூறமுடிந்தது. அதனால் இதைவிட அதிகமான பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. ‘பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும்’ என்ற பழமொழிக்கேற்ப, 3 மாதத்தில் மீண்டும் நேற்று முன்தினம் இந்தோனேசியாவில் சுனாமி தாக்கியது. பொதுவாக சுனாமி வருவதற்கு முன்பு பூகம்பம் தாக்குவது வழக்கம். ஆனால், இந்தமுறை பூகம்பம் தாக்கவில்லை. அனக் கிரகட்டாவ் எரிமலை தொகுப்பில் உள்ள எரிமலை வெடித்து சிதறியது. அங்கிருந்து ஏராளமான எரிமலைக்குழம்புகள் அசுரவேகத்தில் வெளியேறியது. திடீரென்று தாக்கியதால் உயிர்தப்புவதற்கான முயற்சிகளில் யாரும் ஈடுபடமுடியவில்லை. 222 பேர் உயிரிழந்ததாகவும், 558 வீடுகள் இடிந்து விழுந்ததாகவும், 350 படகுகள் சேதம் அடைந்ததாகவும், 843 பேர் காயமடைந்ததாகவும், 3 ஓட்டல்கள் அடியோடு விழுந்ததாகவும், 60 உணவு விடுதிகள் பெரும் சேதத்திற்குள்ளானதாகவும் உடனடியாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது மீட்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில், இந்த எண்ணிக்கைகள் அனைத்தும் உயர்ந்துகொண்டே போகிறது.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பேரழிவிற்காக உலகமே கலங்குகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுகிறது. இன்னும் அதிக கவலைத்தரத்தக்க வகையில், இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பெய்யும் பெருமழையால் 13,466 குடும்பங்களைச் சேர்ந்த 44,959 பேர் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை மீட்க ராணுவத்தினரும், விமானப்படை ஹெலிகாப்டர்களும் முழுவீச்சில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். அண்டை நாடு என்று மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் தொப்புள் கொடி உறவு என்ற வகையில், தமிழர்களும் இந்த துன்பத்தில் பங்குகொள்கிறார்கள். தேவையான உதவிகளை மத்திய அரசு  வழங்க வேண்டும். 

Next Story