சிமெண்டுக்கு வரியை குறைக்க வேண்டும்


சிமெண்டுக்கு வரியை குறைக்க வேண்டும்
x
தினத்தந்தி 25 Dec 2018 10:30 PM GMT (Updated: 2018-12-25T17:08:15+05:30)

ஒரேநாடு, ஒரேவரி என்ற தத்துவத்தின் அடிப்படையில், 2017–ம் ஆண்டு ஜூலை 1–ந்தேதி முதல் நாடுமுழுவதும் வசூலிக்கப்பட்ட பல்வேறு வரிகளுக்கு பதிலாக, ஒரே வரியாக சரக்குசேவை வரி விதிக்கும்முறை அமலுக்கு வந்தது.

ரேநாடு, ஒரேவரி என்ற தத்துவத்தின் அடிப்படையில், 2017–ம் ஆண்டு ஜூலை 1–ந்தேதி முதல் நாடுமுழுவதும் வசூலிக்கப்பட்ட பல்வேறு வரிகளுக்கு பதிலாக, ஒரே வரியாக சரக்குசேவை வரி விதிக்கும்முறை அமலுக்கு வந்தது. மொத்தம் 1,216 பொருட்கள் மற்றும் 48 சேவைகளுக்கு 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என்ற அடிப்படையில் வரிகள் விதிக்கப்பட்டன. இந்த சரக்கு சேவைவரியால் நாட்டின் பொருளாதாரத்திற்கு மட்டுமல்ல, தொழில்அதிபர்கள், வியாபாரிகள், ஏன் பொதுமக்களுக்குக்கூட பெரும்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எந்தெந்த பொருட்கள் விலையை குறைக்கலாம், சரக்கு சேவைவரியால் ஏற்பட்டுள்ள தாக்கம் என்ன? என்பதை குறித்து ஆராய்ந்து முடிவுசெய்ய மத்திய நிதிமந்திரி அருண்ஜெட்லி தலைமையில், அனைத்து மாநில நிதி அமைச்சர்களையும் கொண்ட சரக்கு சேவைவரி கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொள்கிறார். கடைசியாக கடந்த சனிக்கிழமை அன்று நடந்த 31–வது சரக்கு சேவைவரி கவுன்சில் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 

சினிமா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக சினிமாத்தொழிலில் உள்ள தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள் பூரிப்படையும் வகையில் ரூ.100–க்கு மேல் உள்ள சினிமா டிக்கெட்டுக்கு 28 சதவீதம் விதிக்கப்பட்டு வந்த சரக்கு சேவைவரி 18 சதவீதமாகவும், ரூ.100–க்கு கீழ் உள்ள டிக்கெட்டுக்கான சரக்கு சேவைவரி 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. உடல் ஊனமுற்றோர் பயன்படுத்தும் வண்டிகளுக்கான வரி 28 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும் மற்றும் மேலும் சில பொருட்கள் சேவைகளுக்கு வரிகுறைப்பும், வரிவிலக்கும் அளிக்கப்பட்டது. இந்தக்கூட்டத்தில் மொத்தம் 17 பொருட்களுக்கும், 6 சேவைகளுக்கும் வரிகுறைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதனால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.5,500 கோடி இழப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இப்போது 28 சதவீத வரிவிதிப்பில் சிமெண்டு, ஏர்கண்டி‌ஷன் உள்பட இன்னும் 27 பொருட்கள்தான் இருக்கின்றன. இதில் எல்லோரும் எதிர்பார்ப்பது சிமெண்டு மீதான வரியை குறைத்தால் கட்டுமான தொழில் வளரும், வேலைவாய்ப்பும் பெருகும் என்பதுதான். 

தீப்பெட்டிக்கு இப்போது 18 சதவீதம் வரிவிதிக்கப்படுகிறது. ஆனால் கையால் செய்யப்படும் தீப்பெட்டிக்கு 5 சதவீதம் விதிக்கப்படுகிறது. இப்படி பாகுபாடு இல்லாமல் அனைத்து தீப்பெட்டிகளுக்கும் ஒரே மாதிரியாக வசூலிக்கப்படவேண்டும். வெட்கிரைண்டர்களுக்கு 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக வரியை குறைக்கவேண்டும். பிராண்டு அரிசியாக இருந்தாலும் அதற்கும் வரிவிலக்கு அளிக்கவேண்டும். சிறு குறு தொழில்களுக்கு ரூ.20 லட்சம் வருவாய் இருந்தால் வரிகிடையாது என்ற வரம்பை ரூ.75 லட்சமாக உயர்த்தவேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தி வருகிறார். உற்பத்தி மாநிலமான தமிழ்நாட்டிற்கு சரக்கு சேவைவரி விதிப்பால் நிச்சயமாக பெரும் இழப்பு ஏற்படுகிறது. ஏற்கனவே சரக்கு சேவைவரியை அமல்படுத்தும்போது, மத்திய அரசாங்கம் வரி இழப்பு ஏற்படும் மாநிலங்களுக்கு, 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. அந்தவகையில், தமிழ்நாட்டிற்கு இதுவரை ரூ.8,684 கோடி நிலுவைத்தொகையாக வரவேண்டியதிருக்கிறது. இந்தத்தொகையை மத்திய அரசாங்கம் உடனடியாக வழங்கவேண்டும். ஜனவரியில் நடக்கும் சரக்கு சேவைவரி கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசின் கோரிக்கைகளை மத்திய அரசாங்கம் நிறைவேற்றவேண்டும்.

Next Story