ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது எப்போது?


ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது எப்போது?
x
தினத்தந்தி 30 Dec 2018 8:24 PM GMT (Updated: 30 Dec 2018 8:24 PM GMT)

‘நான் எப்போது வருவேன்? எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனால் வரவேண்டிய நேரத்தில் கரெக்டாக வருவேன்’ என்று ஒரு திரைப்படத்தில் ரஜினிகாந்த் கூறுவார். அது அவரது அரசியல் பிரவேசத்துக்கும் சரியாக பொருந்தும்.

1995-ம் ஆண்டில் இருந்தே அவர் இப்போது வருவார், அப்போது வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் யார் சொல்வதும் நடந்துவிடவில்லை. 1995-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி நடந்து கொண்டிருந்த நேரத்தில் தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் பரவிவிட்டது என்று சொன்னது ஆளுங்கட்சி வட்டாரத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. அந்த விழாவில் கலந்து கொண்ட ஆர்.எம்.வீரப்பனின் அமைச்சர் பதவியையும் பறித்துவிட்டது. அதுமட்டுமல்லாமல், 1996-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நேரத்தில், ‘ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது’ என்றுகூறி தி.மு.க-த.மா.கா. கூட்டணியை ஆதரித்தார். அந்த கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றது. அப்போது முதல் ரஜினிகாந்த் அரசியலுக்குள் நுழைந்து விடுவார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் ரஜினிகாந்த் யாருக்கும் பிடிகொடுத்து பேசவில்லை. இப்படியே ஆண்டுகள் பல உருண்டோடின.

எப்போது நீங்கள் அரசியல் கட்சி தொடங்குவீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேட்கும் நேரங்களிலெல்லாம் அது ஆண்டவனுக்குத்தான் தெரியும் என்று பதில் அளித்து வந்தார். இந்தநிலையில் 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி சென்னையில் ரசிகர்கள் மத்தியில் பேசும்போது, ‘அரசியலுக்கு வருவதை பகிரங்கமாகவே அறிவித்தார். “நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வருகிற சட்டமன்ற தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்போம். அதற்கு முன்னால் உள்ளாட்சி தேர்தல் வருகிறது. நாட்கள் ரொம்ப குறைவாக இருப்பதால் அதில் போட்டியிட போவதில்லை. நாடாளுமன்ற தேர்தல் வரும்போது அந்தநேரத்தில் நான் முடிவெடுப்பேன்” என்று பிரகடனம் செய்தார். இப்போது அடுத்த சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றிவிட்டார். எனவே நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அரசியல் கட்சி தொடங்கி விடுவார் என்றும், அந்த கட்சி பா.ஜ.க.வோடு கூட்டணி அமைக்கும் என்றும் அரசியலில் பரப்பாக பேசப்பட்டது.

ஆனால் 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்தவுடன் பா.ஜ.க. செல்வாக்கை இழந்து இருப்பதை நன்றாக காட்டுகிறது என்று கூறியதும், காலா படத்தில் அவர், ‘வேங்கையன் மகன் ஒத்தேல நிக்கேன், தில் இருந்தால் மொத்தமா வாங்கலே’ என்று சொன்னதில் இருந்தும் அவர் அரசியல் கட்சி தொடங்கும்நேரத்தில் தனியாகத்தான் நிற்பார் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். மேலும் அரசியலுக்கு வருவது உறுதி உறுதி என்று சொன்னபிறகு காலா, 2.0, பேட்ட படத்தில் நடித்துவிட்டார். இப்போது மேலும் ஏ.ஆர். முருகதாஸ் டைரக்‌ஷனிலும், வினோத் டைரக்‌ஷனிலும் நடிக்கப் போகிறார் என்று சினிமா வட்டாரத்தில் பேச்சாக இருக்கிறது. ஆகவே நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அவர் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை, அரசியல் பிரவேசம் பற்றி முதல் அறிவிப்பு வெளியிடும்போது சொன்னதுபோல தமிழக சட்டசபை தேர்தலின்போதுதான் தனிக்கட்சி தொடங்குவார், பாட்ஷா படத்தில் சொன்னதுபோல, அவர் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி என்பதைத்தான் இதுவும் காட்டும் என்பதுதான் அவரது நெருங்கிய வட்டாரங்களின் கூற்றாக இருக்கிறது.

Next Story