எதிர்பார்ப்புகள் மிகுந்த 2019 பிறந்தது


எதிர்பார்ப்புகள் மிகுந்த 2019 பிறந்தது
x
தினத்தந்தி 31 Dec 2018 9:39 PM GMT (Updated: 2019-01-01T03:09:25+05:30)

2018-ம் ஆண்டு முடிந்து இன்று 2019 புத்தாண்டு விடிகிறது. இருள் வடிந்துவிட்டது. கூட்டு பறவை கண் விழித்து பாட்டு பாட தொடங்கிவிட்டது. தமிழகம் முன்னேற்ற பயணத்திற்கு தயாராகிவிட்டது.

கடந்த ஆண்டு ஏற்றமும், இறக்கமும் கொண்ட ஆண்டு. நன்மைகளும், தீமைகளும் கலந்த ஆண்டு. இன்பங்களும், துன்பங்களும் நிறைந்த ஆண்டு. ஒவ்வொரு மாதமும், ஏதாவது ஒரு சம்பவம் நம் நெஞ்சைவிட்டு அகலாத நினைவாக இருந்தது. கடந்த ஆண்டில், அரசு பஸ் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டது. மத்திய பட்ஜெட்டில் 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் மருத்துவ உதவி பெறும் திட்டம் அறிவிக்கப்பட்டது. குரங்கணி மலையில் மலையேறும் பயிற்சிக்கு சென்ற 23 பேர் காட்டுத்தீயில் சிக்கி பலியானார்கள்.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் இருந்தனர். சென்னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த 100 நாள் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூடு மற்றும் கலவரம் காரணமாக 13 பேர் பலியானார்கள். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது. ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி மரணமடைந்தார். 2-வது ஆண்டாக தனது ஆட்சி பயணத்தை தொடங்கியுள்ள எடப்பாடி பழனிசாமி, பல திட்டங்களை அறிவித்தது 2018 தான். தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் இந்த 2018-ம் ஆண்டுதான். இந்த நிலையில், பெரும்பாலும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய 2018 முடிந்து, இன்று பிறந்த 2019-ம் ஆண்டை மக்கள் மிகவும் எதிர்பார்க்கிறார்கள். இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருகிறது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடக்க போகிறது. ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. யார் அடுத்த 5 ஆண்டுகள் இந்தியாவை ஆளப்போகிறார்கள் என்பது அப்போது தெரிந்துவிடும். தமிழ்நாட்டில் 20 சட்டசபை தொகுதிகளுக்கு நடக்கப்போகும் இடைத்தேர்தல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நீடிக்குமா? என்பதற்கு விடை காட்டிவிடும். கஜா புயல், மேகதாது, முல்லை பெரியாறு பிரச்சினை, ஹைட்ரோ கார்பன் திட்டம், ஸ்டெர்லைட் பிரச்சினை, விவசாயிகளின் நிலத்தில் மின் கோபுரங்கள் அமைக்கும் பிரச்சினை, சென்னை-சேலம் 8 வழிச்சாலை என்று பல பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வுகாணப் போகிறோம்? என்பதற்கு இந்த 2019-ம் ஆண்டு வழிகாட்டும். வட மாவட்டங்களில் பருவமழை பொய்த்த காரணத்தினால் குடிநீர் பிரச்சினை ஏற்படும் அச்சமும் ஏற்பட்டு இருக்கிறது. இப்படி, பல எதிர்பார்ப்புகளுடன் தொடங்கும் இந்த ஆண்டில், ‘இன்பமே பெருகும்’ என்ற நம்பிக்கையோடு நடைபோடுவோம். ‘வெயில் வேண்டும், வெப்பம் வேண்டாம். மழை வேண்டும், வெள்ளம் வேண்டாம், பூந்தென்றல் வேண்டும், புயல் வேண்டாம். அரசியல், கலை, பொருளாதாரம், கல்வி, சமூகம், தமிழர் மேம்பாடு, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி என எல்லாவற்றிலும் மேன்மையே கிட்டட்டும்’ என்று இந்த ஆண்டை வாழ்த்தி வரவேற்போம்.

Next Story