பொதுமக்களுக்கு பாதிப்பு இருக்கக்கூடாது


பொதுமக்களுக்கு பாதிப்பு இருக்கக்கூடாது
x
தினத்தந்தி 1 Jan 2019 10:00 PM GMT (Updated: 2019-01-01T21:29:48+05:30)

அடுத்த 4 அல்லது 5 மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளுமே இப்போதே தங்கள் முயற்சிகளை தொடங்கிவிட்டார்கள்.

பா.ஜ.க. அரசும், பொதுமக்களுக்கு நலன்பயக்கும் பல திட்டங்களை நிறைவேற்றுவதிலும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திய பல திட்டங்களில் மாற்றம் செய்வதிலும் தீவிரமாக உள்ளது. அந்தவகையில், 2017–ம் ஆண்டு ஜூலை 1–ந்தேதி கொண்டுவரப்பட்ட சரக்கு சேவைவரி விதிப்பினால் பொருளாதாரத்துக்கும், தொழில்அதிபர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக பொதுமக்கள் பல பொருட்களின் மீதான சரக்கு சேவைவரியால் விலையேற்றத்தை சந்திக்கவேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. 

தற்போது ‘ஜீரோ’ சதவீதம் என்று கூறப்படும் வரிவிலக்கு பெற்ற பொருட்கள், 0.25 சதவீதம் 3, 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என்று பல விகிதங்களில் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 1,214 பொருட்கள் சரக்கு சேவைவரி விதிப்பில் உள்ளன. இதில் 183 பொருட்களுக்கு வரி இல்லை. 308 பொருட்களுக்கு 5 சதவீதமும், 178 பொருட்களுக்கு 12 சதவீதமும், 517 பொருட்களுக்கு 18 சதவீதமும் கடந்த 22–ந்தேதி கூடிய சரக்கு சேவைவரி கவுன்சில் கூட்டத்தில் 17 பொருட்களுக்கு வரிகுறைப்பு மேற்கொள்ளப்பட்டபிறகு, தற்போது 28 பொருட்களுக்கு மட்டும் 28 சதவீதம் சரக்கு சேவைவரி விதிக்கப்படுகிறது. இந்த சரக்கு சேவைவரி அறிமுகப்படுத்தும்போதே, பல பொருளாதார நிபுணர்கள் இவ்வளவு எண்ணிக்கையிலான வரிவிகிதங்கள் தேவையில்லை. இதை குறைக்கவேண்டும் என்று கருத்து கூறியிருந்தனர். 

இந்தநிலையில், தற்போது நிதி மந்திரி அருண்ஜெட்லி, ‘28 சதவீத வரிவிதிப்பு அஸ்தமனத்தை காணப்போகிறது’ என்பதை குறிப்பிட்டுள்ளார். அதாவது, 28 சதவீத விரிவிதிப்பு என்பது இருக்காது. ‘ஜீரோ’ சதவீதம், 5 சதவீதம் மற்றும் 12, 18 சதவீதங்களுக்கு இடையில் நடுநிலையான சதவீதத்தில் வரிவிதிப்பு என்று மாற்ற சீர்திருத்தம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். அப்படியானால் இனி 12 சதவீதமும் இருக்காது. 18 சதவீதமும் இருக்காது. புகையிலை பொருட்கள், ஆடம்பர பொருட்கள், கரும்பு சர்க்கரை பாகு, ஏர் கண்டிசனர், குளிர்பானங்கள், பெரிய அளவிலான டெலிவி‌ஷன்கள், டிஷ் வா‌ஷர்கள் போன்ற பொருட்களை தவிர, இப்போது 28 சதவீத வரிவிதிப்பில் பல பொருட்கள் இனி கொண்டுவரப்போகும் 12 சதவீதம், 18 சதவீதத்திற்கு இடையிலான ‘ஸ்டேண்டர்டு ரேட்’டில் வரிவிதிப்பிற்கு உள்ளாகும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதற்கு சற்று பொருத்தமான காலமாகும். அதாவது கணிசமாக வரிவசூல் உயர்வு ஏற்பட்டபிறகு, இந்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார். அந்தநிலையில் 12 சதவீத வரி விதிப்பில் உள்ள 178 பொருட்களுக்கு வரி உயரும்நிலை ஏற்படும். இந்த 178 பொருட்களும் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் என்றவகையில், இதில் பெரும்பாலான பொருட்களுக்கு வரிஉயர்வு இல்லாமல், வரி குறைக்கப்படும் அளவில் 5 சதவீதத்திற்கு கொண்டுவர பரிசீலிக்கவேண்டும். மற்றபடி 28 சதவீதத்தில் உள்ள பொருட்களையும், 18 சதவீதத்தில் உள்ள பொருட்களையும் வரி குறைப்புக்கு கொண்டுவருவது நிச்சயமாக வரவேற்புக்குரியதாகும். ஆனால் இந்த சீர்திருத்தங்கள், உடனடியாக கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை மத்தியஅரசாங்கம் மேற்கொள்ளவேண்டும். இந்த மாதம் நடக்கும் சரக்கு சேவைவரி கூட்டத்தில் நிதி மந்திரி அறிவித்தவகையில், இந்த சீர்திருத்தத்தை உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவர மாநில நிதி அமைச்சர்கள், குறிப்பாக தமிழக அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தவேண்டும்.

Next Story