இதுதான் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும்


இதுதான் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும்
x
தினத்தந்தி 2 Jan 2019 10:00 PM GMT (Updated: 2 Jan 2019 2:28 PM GMT)

சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி செய்த மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தோல்வி அடைந்தது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் கடன் ரத்து என்ற வாக்குறுதி கூறப்பட்டதே வெற்றிக்கு காரணமாக கூறப்படுகிறது.

பொருளாதார நிபுணர்களை பொறுத்தமட்டில் விவசாயிகளின் கடன் ரத்து என்பது எந்த வகையிலும் பயன் தராது. மாநிலங்களின் நிதி நிலைமை மோசமாக்கிவிடும் என்று எச்சரிக்கை விடுக்கிறார்கள். மாநில அரசுகள் விவசாய கடன்களை ரத்து செய்யும்போது, கூட்டுறவு வங்கிகள், பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் வாங்கும் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கிறது. வங்கிகள் விவசாயிகள் வாங்கிய கடன்களை ரத்து செய்யும்போது, மாநிலஅரசுகள் அந்த பணத்தை தங்கள் நிதியில் இருந்தே வங்கிகளுக்கு கொடுத்தாக வேண்டும். 

இந்த பணத்தை திருப்பி செலுத்தாவிட்டால், விவசாயிகளுக்கு மீண்டும் கடன் கொடுக்க வங்கிகள் மறுக்கும். அந்தநிலையில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய துயரம் நேரிடும். இந்தநிலையில், பிரதமர் நரேந்திரமோடி விவசாயிகள் கடனை ரத்து செய்வதை தவிர்த்து, அவர்களுக்கு வேறு வகைகளில் உதவி செய்ய முடிவெடுத்துள்ளார். விவசாயிகளுக்கு பொதுத்துறை வங்கிகளில் 9 சதவீத வட்டியில் விவசாய கடன்கள் வழங்கப்படுகின்றன. இதில் 2 சதவீத வட்டியை மத்திய அரசாங்கம் வழங்கி வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை வழங்கும் கடன்களை ஒரு ஆண்டுக்குள் திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு மேலும் 3 சதவீத கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. எனவே 4 சதவீதம்தான் வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்த விவசாய கடன்களை உரியகாலத்தில் திருப்பிச்செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்யவும் மத்திய அரசாங்கத்தால் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.  

மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, விவசாய மந்திரி ராதா மோகன் சிங் ஆகியோரை பிரதமர் சில நாட்களுக்கு முன்பு சந்தித்து 3 மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினார். இதில் தெலுங்கானா மாநிலம் நடைமுறைப்படுத்தி வருவதைபோல, விவசாயிகளுக்கான நிவாரண உதவித்தொகைகளை நேரடியாக அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தலாம் என்று திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இந்த தொகை சிறு, குறு விவசாயிகள் விதைகள், உரம், பூச்சிக்கொல்லி மருந்து வாங்குவதற்கும் மற்றும் அவர்கள் பணிக்காகவும் ஒரு தொகையை ஒவ்வொரு விவசாயிக்கும் வழங்கலாமா என்று ஆலோசனை நடந்துள்ளது. இதற்கு ஏறத்தாழ ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கோடி செலவாகும் என்றும், இதை மத்திய அரசும், மாநில அரசாங்கங்களும் 70:30 என்ற சதவீதத்தில் பிரித்து கொள்ளலாம் என்றும் ஆலோசனை செய்யப்பட்டது. இதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு பயிருக்கும் மத்திய அரசாங்கம் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்துள்ளது. சந்தையில் அந்த விளைபொருளின் விலை குறைந்தபட்ச ஆதார விலையைவிட குறைவாக இருந்தால், அந்த வித்தியாச தொகையை விவசாயிகளுக்கு வழங்க மத்திய பிரதேசத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் ‘பவந்தர்’ திட்டத்தை பின்பற்றுவது குறித்தும் ஆராயப்பட்டது. இதுகுறித்த முடிவுகள் அடுத்த சில தினங்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளுக்கு கடன் ரத்து என்பதற்கு பதிலாக இதுபோன்ற திட்டங்கள் நிச்சயமாக நீண்டகாலம் பயன் அளிக்கும்.

Next Story