என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு ஒரு மறுமலர்ச்சி


என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு ஒரு மறுமலர்ச்சி
x
தினத்தந்தி 6 Jan 2019 10:30 PM GMT (Updated: 6 Jan 2019 5:36 PM GMT)

மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். ஆட்சி நடந்தபோது, அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் அதிகம் இல்லாதநிலை இருந்தது.

றைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். ஆட்சி நடந்தபோது, அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் அதிகம் இல்லாதநிலை இருந்தது. அப்போது என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு உருவாகிக்கொண்டிருந்த சமயம். இதன் காரணமாக தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் இடம் கிடைக்காதவர்கள், வெளிமாநிலங்களில் சென்று படிக்கவேண்டிய கட்டாயநிலை ஏற்பட்டது. தமிழக மாணவர்கள், ஏன் வெளிமாநிலங்களுக்கு செல்லவேண்டும்?, தமிழ்நாட்டிலேயே படிக்க வசதி செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமை என்ற வகையில், அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசில் போதிய நிதிவசதி இல்லாததால், தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளை தொடங்க எம்.ஜி.ஆர். தாராளமாக அனுமதி வழங்கினார். அவர் ஆட்சிக்காலத்திலும், அதைத்தொடர்ந்து தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிக்காலத்திலும் ஏராளமான தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. ஒரு என்ஜினீயரிங் கல்லூரியை தனியார் தொடங்குவது என்றால், அரசின் நிதிஉதவி கிடைக்காது. தங்கள் சொந்த பணத்தில் இருந்து கோடிக்கணக்கில் செலவழித்து அடிப்படை வசதிகளை செய்யவேண்டும். பேராசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கவேண்டும். 

தமிழ்நாட்டில் தற்போது 509 என்ஜினீயரிங் கல்லூரிகள் இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே என்ஜினீயரிங் கல்லூரிகளில் போதிய அளவு மாணவர் சேர்க்கை இல்லை. இந்த ஆண்டு என்ஜினீயரிங் கல்லூரிகளில் 1 லட்சத்து 73 ஆயிரம் இடங்கள் இருக்கின்றன. ஆனால் ஏறத்தாழ 74 ஆயிரம் இடங்கள்தான் நிரம்பியுள்ளன. கிட்டத்தட்ட 1 லட்சம் இடங்கள் காலியாக இருக்கின்றன. இந்த குறைவான மாணவர் சேர்க்கையினால் என்ஜினீயரிங் கல்லூரிகள் நடத்துபவர்கள் மிகுந்த நிதி நெருக்கடிக்கு ஆளாகி, நிறைய கல்லூரிகள் அடுத்த ஆண்டு மூடப்படும் சூழ்நிலையில் இருக்கிறது. இந்தநிலையை தவிர்க்க, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் ஒரு நல்லமுடிவை எடுத்துள்ளது. என்ஜினீயரிங் கல்லூரிகளின் வளாகத்திலேயே கலை மற்றும் அறிவியல் படிப்புகளை தொடங்க அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.எஸ்சி., பி.ஏ. போன்ற பட்டப்படிப்புகள் தொடங்க அனுமதிக்கப்படும் என்றும், இந்த படிப்புகள் தொடங்கும்போது விளையாட்டு மைதானம் போன்ற சில உள்கட்டமைப்பு வசதிகள் பொதுவானதாக இருக்கும். மற்றபடி புதிய அறிவியல் படிப்புகளை தொடங்கும்போது சோதனைக்கூடங்களை அமைக்கவேண்டும். அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் இந்த அனுமதியை வழங்கினாலும், மற்ற அனுமதிகளான பல்கலைக்கழக அனுமதிகள், கல்லூரி கல்வி இயக்குனரக அனுமதி போன்றவைகள் என்ஜினீயரிங் கல்லூரிகள் பெறவேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் சேர்மன் அனில் சகஸ்ரபுத்தே அறிவித்துள்ளார். இது நிச்சயம் நல்ல முடிவாகும். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களும், தமிழக அரசும், என்ஜினீயரிங் கல்லூரிகளில் இந்த படிப்புகளை தொடங்க உடனடியாக அனுமதி வழங்கவேண்டும். இதில் கெடுபிடி இருக்கக்கூடாது. என்ஜினீயரிங் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளை தொடங்கினால், மாணவர்களுக்கும் தாங்கள் விரும்பிய படிப்புகளை அந்தக்கல்லூரியில் பெறமுடியும். புதிய படிப்புகளை என்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்கும்போது, ‘ரோபோடிக்ஸ்’ போன்ற வேலைவாய்ப்பு தரும் அறிவியல் படிப்புகளை உடனடியாக தொடங்க முடியும். சுயநிதி கல்லூரி என்ற வகையில், என்ஜினீயரிங் கல்லூரிகளும் இன்றைய சூழ்நிலையில் மூடப்படும் நிலையை தவிர்த்து, கல்லூரிகளை தொடர்ந்து நடத்தமுடியும். மொத்தத்தில், இந்த புதிய முடிவு என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்.

Next Story