விண்வெளி ஆராய்ச்சியில் சிறப்பிடத்தை பெறப்போகும் இந்தியா


விண்வெளி ஆராய்ச்சியில் சிறப்பிடத்தை பெறப்போகும் இந்தியா
x
தினத்தந்தி 7 Jan 2019 8:47 PM GMT (Updated: 7 Jan 2019 8:47 PM GMT)

கடந்த ஆண்டு இறுதியில் நடந்த மத்திய–மந்திரி சபை கூட்டத்தில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் மிக முக்கியமானது, விண்வெளி ஆராய்ச்சியில் மிக வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கும் இந்தியா சார்பில், ‘ககன்யான்’ விண்வெளி திட்டத்தின் அடிப்படையில், 2022–ம் ஆண்டுக்குள் விண்வெளிமண்டலத்துக்கு 3 விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளதுதான்.

பொதுவாக மக்களிடையே ஒரு பேச்சு, ‘‘விண்ணில் செலுத்தும் ராக்கெட்டுக்காக இத்தனை கோடி ரூபாயை வீணாக்குகிறோமே, இதை வேறு வளர்ச்சித்திட்டங்களுக்கு பயன்படுத்தலாமே’’ என்றுதான் பரவலாக இருக்கிறது. ஆனால், இந்தியாவிலிருந்து விண்ணில் ஏவப்படும் ராக்கெட்டுகள் சுமந்து செல்லும் செயற்கைகோள்களால் பல பெரிய பலன்கள் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, இன்று எல்லோருமே ஜி.பி.எஸ். வசதியை பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். எந்த வண்டி எங்கே போய்க்கொண்டிருக்கிறது, எந்த இடத்திற்கு எந்த வழியாக போகவேண்டும் என்பதையெல்லாம் செல்போனிலேயே ‘மேப்’ மூலம் அறிந்துகொண்டிருக்கிறோம். இந்த வசதி, இந்தியா பறக்கவிட்டு இப்போது விண்வெளியில் பறந்துகொண்டிருக்கும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கைகோள்கள் மூலமாகத்தான் கிடைக்கிறது. 

இதுபோல, ஒவ்வொரு செயற்கைகோள் மூலமாகவும் ஏதாவது ஒரு நன்மை நாட்டுக்கு கிடைத்துக்கொண்டிருக்கிறது. புயல்எச்சரிக்கை, பருவநிலை மாற்றம் போன்ற ஆய்வுப்பணிகளுக்கும், ராணுவத்தில் போர் விமானிகளுக்கிடையே தகவல் பரிமாற்றம் செய்வதற்கும் செயற்கைகோள்தான் உதவியாக இருக்கிறது. இந்தநிலையில், அடுத்த மாதத்தில் இந்திய விண்வெளி அமைப்பான இஸ்ரோ, சந்திரனுக்கு ‘சந்திராயன்–2’ என்ற விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டிருக்கிறது. இதுவரை சந்திரனில் இறங்கிய விண்கலங்கள் எல்லாம் சந்திரனின் மத்தியபகுதியில் தான் போய் இறங்கியிருக்கிறது. ஆனால், ‘சந்திராயன்–2’ தான் முதலில் தென் துருவப்பகுதியில் போய் இறங்கப்போகிறது. இறங்குவது புதுஇடம் என்பதால் இதுவரை ஆராயப்படாத இடம் என்ற வகையில், சந்திராயன்–2 அங்கு இறங்கி புதுவகையான விஞ்ஞான தகவல்களை தெரிவிக்கலாம் என்று உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் பெரும் எதிர்பார்ப்போடு இருக்கின்றனர்.

தற்போது தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்க்கும் வகையில், இஸ்ரோ தலைவராக கே.சிவன் பதவியேற்றிருக்கிறார். இவருடைய தலைமையின்கீழ் பல விண்வெளி ஆய்வுகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்போது மத்திய அரசாங்கம் ரூ.10 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ள ‘ககன்யான்’ திட்டத்தின்கீழ், 2021–ம் ஆண்டு 3 விண்வெளி வீரர்களை டிசம்பர் மாதத்தில் விண்வெளிமண்டலத்துக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 3 வீரர்களும் 7 நாட்கள் விண்வெளிமண்டலத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்வார்கள். இந்த விண்கலத்திற்கு முன்னோடியாக 2020–ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும், 2021–ம் ஆண்டு ஜூலை மாதத்திலும் ஆளில்லாத விண்கலங்கள் விண்வெளிமண்டலத்தில் இறங்கும். 3 விண்வெளி வீரர்களையும், இந்திய விமானப்படையும், இஸ்ரோ நிறுவனமும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சியளிக்கப்படும். 3 பேரில் ஒரு பெண் விண்வெளி வீரரையும் தேர்ந்தெடுக்க திட்டமிருக்கிறது. இந்த சாதனையை வெற்றிகரமாக முடித்துவிட்டால், அமெரிக்கா, ரஷியா, சீனா போன்று விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்து உலகத்தையே வியக்கவைக்கும். மொத்தத்தில், ‘ககன்யான்’ திட்டம் உலக அரங்கில் இந்தியாவுக்கு பெரிய பெருமையை அளிக்கப்போகிறது. விண்வெளிமண்டலத்தில் 3 இந்திய வீரர்கள் பறக்கப்போகிறார்கள் என்ற செய்தி, ஒவ்வொரு இந்தியனையும் நெஞ்சை நிமிர்த்து பூரிப்படைய செய்கிறது.

Next Story