பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு; நீதிமன்றத்தில் நிற்குமா?


பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு; நீதிமன்றத்தில் நிற்குமா?
x
தினத்தந்தி 8 Jan 2019 10:30 PM GMT (Updated: 8 Jan 2019 2:14 PM GMT)

சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. தோல்வி அடைந்தது.

அடுத்த ஏப்ரல்–மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கும் சூழ்நிலையில், பா.ஜ.க. பல அதிரடி முடிவுகளை எடுக்க தொடங்கி இருக்கிறது. இதுவரையில் மத்திய அரசாங்கம், கல்வி நிறுவனங்களிலும், வேலைவாய்ப்புகளிலும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதமும், தாழ்த்தப்பட்டோருக்கு 15 சதவீதமும், மலைவாழ் மக்களுக்கு 7.5 சதவீதமும் ஆக மொத்தம் 49.5 சதவீதம் இடஒதுக்கீடு இருக்கிறது. மீதமுள்ள 50.5 சதவீதம் பொதுப்பட்டியலில் இருக்கிறது. இந்த பொது பட்டியலில்தான் இடஒதுக்கீட்டில் வராத உயர்சாதியினர் இருக்கிறார்கள். 

இப்போது மத்தியஅரசாங்கம் அவர்களை இடஒதுக்கீட்டு வளையத்திற்குள் கொண்டுவரும் வகையில், பொதுபட்டியலில் உள்ளவர்களுக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும்வகையில் முடிவெடுத்து, அதற்கான மசோதாவை நேற்று மக்களவையில் தாக்கல் செய்தது. இதுபோன்ற இடஒதுக்கீட்டிற்கான சட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றால், அரசியல் சட்டத்தின் 15 மற்றும் 16–வது பிரிவில் திருத்தம் கொண்டுவரவேண்டும். அதற்கு மக்களவையிலும், மாநிலங்களவையிலும் 3–ல் 2 பங்கு ஆதரவு வேண்டும். இந்த பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு பலனை அடைபவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும். 5 ஏக்கருக்கு குறைவான விவசாய நிலம் வைத்திருப்பவர்களாக இருக்கவேண்டும். 1,000 சதுரடிக்கு குறைவான பரப்பளவு கொண்ட வீடுகளை வைத்திருக்கவேண்டும் என்பதுபோன்ற சில நிபந்தனைகள் கூறப்பட்டிருக்கிறது. பொதுப்பிரிவில் பிராமணர், தாகூர், ஜாட், படேல், மராத்தார், பூமிகர், கப்பூ, கம்மா, வைசியா, தியாகிஸ் போன்ற உயர்சாதி என்று கருதப்படும் பல சாதிகளும், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் போன்ற மத சிறுபான்மையினரும் இந்த சட்டத்தின் மூலம் பலன் அடையமுடியும். 

உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் பொதுப்பிரிவில் வரும் உயர் சாதியினர் கணிசமான அளவில் இருப்பதால், அவர்களின் ஓட்டுகள் தங்களுக்கு கிடைக்கும் என்று பா.ஜ.க. நினைக்கிறது. இந்த ஓட்டுகளை விட்டுவிடக்கூடாது என்ற நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் பெரும்பாலான கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட இந்த அரசியல் சட்ட திருத்த மசோதா, மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக நேற்றோடு முடிவடையவேண்டிய மாநிலங்களவையின் கூட்டம் இன்று ஒருநாள் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றியபிறகு, ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுவிட்டாலும், நீதிமன்றத்தில் இந்த சட்டம் நிற்குமா? என்பது சந்தேகம்தான். ஏனெனில், பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்பதால் மட்டும் ஒருவரை பின்தங்கியவராக கருதிவிட முடியாது. அவர்கள் சமூகரீதியாகவும், கல்வியிலும் பின் தங்கியிருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கடைசியாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் 2014–ம் ஆண்டு ஜாட் சாதியை, இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க முயற்சி செய்தது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டு இதை தள்ளுபடி செய்துவிட்டது. இதுபோல, 1992–ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சினால் வழங்கப்பட்ட தீர்ப்பில், இடஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மேல் போகக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற தீர்ப்புகள் நிச்சயமாக இந்த சட்டத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும்.

Next Story