வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு


வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு 50 சதவீத  இடஒதுக்கீடு
x
தினத்தந்தி 9 Jan 2019 10:30 PM GMT (Updated: 2019-01-09T19:55:37+05:30)

எல்லா வழிகளும் ரோமபுரியை நோக்கி என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அதுபோல, தமிழ்நாட்டில் எல்லோருடைய பார்வையும் 23, 24–ந்தேதிகளில் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நோக்கித்தான் இருக்கிறது. இது 2–வது மாநாடாகும்.

முதலில் கடந்த 2015–ம் ஆண்டின்போது ஜெயலலிதாவின் முயற்சியால் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் ஏறத்தாழ 5 ஆயிரம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதில் 62 திட்டங்கள் செயலாக்கத்துக்கு வந்துள்ளன. ரூ.62,738 கோடி தமிழ்நாட்டுக்கு முதலீடு கிடைத்துள்ளது. இதன் மூலம் 96 ஆயிரத்து 341 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், ஜெயலலிதாவின் மரணம் மற்றும் பல்வேறு காரணங்களால் இந்த மாநாடு நடப்பது தள்ளிப்போடப்பட்டு, இப்போது 2019–ல் நடக்கிறது. இப்போது நடக்கும் மாநாட்டில் ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து முதலீட்டாளர்கள் கலந்து கொள்கிறார்கள். 250 நிறுவனங்களுக்குமேல் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில், முதல் மாநாட்டைவிட கூடுதலாக முதலீடுகளை ஈர்க்கவும், 200 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய நிறுவனங்களைத் தொடங்குவதற்காக சிப்காட் நிறுவனம் 1,500 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி தயாராக வைத்திருக்கிறது. 

ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் 24–ந்தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ரூ.16 ஆயிரம் கோடி முதலீட்டிலான 13 நிறுவனங்கள் தொடங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. மீண்டும் கடந்த 3–ந்தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ரூ.36 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீட்டில் 14 தொழிற்சாலைகள் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆக, இனி புதிதாக தொடங்கப்படும் தொழிற்சாலைகள் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தயாராக இருக்கிறது. இவ்வாறான புதிய வேலைவாய்ப்புகளில் 50 சதவீத பணியிடங்களை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே ஒதுக்க வேண்டும் என்ற குரல் சட்டசபையில் எதிரொலித்தது. சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் நிறுவனங்கள் இங்குள்ளவர்களுக்கு 50 சதவீத பணியிட ஒதுக்கீடு செய்வதாக ஒப்பந்தம் போடுவார்கள், ஆனால் வழங்க மாட்டார்கள் என்று கூறினார். இதற்கு பதில் அளித்த தொழில்துறை மந்திரி, புதிதாக தொழில் தொடங்குபவர்கள் 50 சதவீத பணியிடங்களை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்துவோம் என்று உறுதியளித்துள்ளார்.

பல மாநிலங்களில் இப்போது புதிதாக தொழில் தொடங்குபவர்கள் அந்த மாநில மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கட்டாயம் இருக்கிறது. மத்தியபிரதேசத்தில் முதல்–மந்திரியாக பொறுப்பேற்றுள்ள கமல்நாத், அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு 70 சதவீத பணிகளை வழங்கும் தொழில் நிறுவனங்களுக்குத்தான் முதலீட்டு சலுகைகள் வழங்கப்படும் என்று பதவியேற்றவுடன் அறிவித்து விட்டார். குஜராத் முதல்–மந்திரி அங்குள்ள தொழில் நிறுவனங்கள் 85 சதவீத இடங்களை அந்த மாநில மக்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்போவதாக அறிவித்திருக்கிறார். தமிழ்நாட்டிலும் வேலைஇல்லாத் திண்டாட்டம் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில், இங்கு தொழில் தொடங்கும் நிறுவனங்களும் கீழ்மட்டத்தில் மட்டுமல்லாமல், உயர் பதவிகளிலும் 50 சதவீத தகுதிவாய்ந்த தமிழக இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் என்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஒரு முக்கிய நிபந்தனையாக சேர்க்க வேண்டும்.

Next Story