இந்த நிவாரணம் போதாது


இந்த நிவாரணம் போதாது
x
தினத்தந்தி 10 Jan 2019 10:30 PM GMT (Updated: 10 Jan 2019 1:15 PM GMT)

2018–ம் ஆண்டை எதிர்காலத்தில், இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து நினைத்துப்பார்த்தாலும் கஜா புயல் ஏற்படுத்திய சேதத்தை யாராலும் மறந்துவிட முடியாது.

கடந்த நவம்பர் 16–ந்தேதி நள்ளிரவில் 110 கி.மீ. வேகத்தில் வீசிய கஜா புயல் கரையைக் கடந்தபோது நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, கடலூர், கரூர், ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றினாலும், கனமழையாலும் அளவு கடந்த பாதிப்பையும் சொல்லொண்ணா துயரத்தையும் ஏற்படுத்தியது. 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களில் 32,706 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள், 30,100 ஹெக்டேர் தென்னைமரங்கள், 7,636 ஹெக்டேர் மக்காச்சோளம், 4,747 ஹெக்டேர் வாழை, 4 ஆயிரம் ஹெக்டேர் காபி பயிர், பருத்தி மற்றும் பலா மரங்கள் போன்றவையும், 3,253 ஹெக்டேர் முந்திரிபயிர்களும், 500 ஹெக்டேர் கரும்பு பயிர்களும், 945 ஹெக்டேர் மாமரங்களும், 2,707 ஹெக்டேர் காய்கறி பயிர்களும் சேதமடைந்துள்ளன. சாய்ந்து விழுந்த தென்னை மரங்களின் எண்ணிக்கை 68 லட்சம் என்று தமிழக அரசு கணக்கிட்டுள்ளது. வீடுகள், குடிசைகள், கால்நடைகளை இழந்து மக்கள் தவிக்கிறார்கள். மற்ற பயிர்கள் சேதத்திற்கு தேவையான நிவாரணத்தை கொடுத்துவிட்டால் ஒரு ஆண்டு அல்லது 2 ஆண்டுகளில் இந்தசேதத்தை ஓரளவு நிவர்த்தி செய்துவிடமுடியும். ஆனால் தென்னை, பலா போன்ற மரங்களை திரும்ப நட்டால் பலன்பெற குறைந்தது 5 ஆண்டுகளாவது ஆகும். இந்த 5 ஆண்டுகளுக்கும் அந்த விவசாயிகளுக்கு புதிதாக நடப்பட்ட மரக்கன்றுகளை பராமரிக்கத்தான் நேரம் சரியாக இருக்குமேதவிர, வேறு வேலைசெய்து பொருள் ஈட்டமுடியாது. ஆக, அவர்கள் நட்ட தென்னையும், பலாவும் பலன் கொடுக்கும்வரை அவர்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

கஜா புயல் பாதிப்பு ஏற்பட்ட சிலநாட்களில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமரை நேரில் சந்தித்து தற்காலிக புனரமைப்புக்காக ரூ.1,431 கோடியும், நிரந்தர புனரமைப்புக்காக ரூ.14,910 கோடியும் வேண்டும் என்று மனுகொடுத்தார். ஏற்கனவே கடந்த டிசம்பர் 3–ந்தேதி மாநில பேரிடர் நிவாரணநிதிக்கு மத்திய அரசாங்கம் ரூ.353 கோடியே 70 லட்சத்தை ஒதுக்கியிருந்தது. இப்போது தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.1,146 கோடியே 12 லட்சத்தைதான் ஒதுக்குவதற்கு மத்திய உள்துறை மந்திரி தலைமையிலான நிதி மந்திரி, விவசாய மந்திரி, நிதிஆயோக் துணைத்தலைவர் கொண்ட உயர்மட்டக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத்தொகை தவிர, மாநில பேரிடர் மீட்பு நிதியிலிருக்கும் ரூ.550 கோடியைத்தான் பயன்படுத்தமுடியும். தமிழக அரசுக்கு தேவைப்படும் நிதியில் இப்போது மத்திய அரசாங்கம் ஒதுக்கியிருக்கும் தொகை ‘யானைப்பசிக்கு சோளப்பொறி’ போன்றதுதான். இந்த நிதிஒதுக்கீடு தற்காலிக நிவாரணத்திற்காகத்தான், நிரந்தர மீட்பு பணிகளுக்கு மத்திய அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களிலிருந்து நிதி ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் சொன்னாலும், எதிர்பார்க்கும் பணம் நிச்சயம் கிடைக்காது. எனவே, தமிழக அரசுக்கு தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து கொடுக்கும் தொகையோடு, அந்தந்த அமைச்சகங்கள் மார்ச் மாதத்திற்குள் கூடுதலாக நிதி ஒதுக்கவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக கஜா புயல்பாதிப்பை ஒரு அசாதாரண நிகழ்வாக கருதி மத்திய அரசாங்கம் சிறப்பு நிதியை ஒதுக்கவேண்டும் என்று தமிழக அரசு கோரவேண்டும்.

Next Story