தலையங்கம்

சிறு, குறு வர்த்தக நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள் + "||" + Thalaiangam Small and small businesses Tax Breaks

சிறு, குறு வர்த்தக நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள்

சிறு, குறு வர்த்தக நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள்
பொதுவாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அதிகளவில் தொடங்கப்பட்டால்தான் கீழ்மட்டத்தில் வேலைவாய்ப்புகளை பெருக்கமுடியும், உற்பத்தியும் பெருகும்.
ஆனால் ஏற்கனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருந்த சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்மீது 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி போடப்பட்ட சரக்கு சேவைவரி பேரிடியாக விழுந்தது. இந்த சுனாமியால் எதிர்நீச்சல் போடமுடியாத பல நிறுவனங்கள் மூடப்பட்டன. தமிழ்நாட்டில் மட்டும் 50 ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டதாக அரசு தரப்பிலேயே கூறப்படுகிறது.


இந்தநிலையில், மத்திய நிதிமந்திரி அருண்ஜெட்லி தலைமையில் மாநில நிதி அமைச்சர்களை கொண்ட சரக்கு சேவைவரியின் 32-வது கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்தக்கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சற்று இதமளிக்கும் வகையில் ஜி.எஸ்.டி. வரிவிலக்கு வரம்புக்கு ஆண்டு விற்றுமுதல் ரூ.20 லட்சமாக இருந்ததை, இப்போது ரூ.40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இத்தகைய நிறுவனங்களை வைத்து தொழில் செய்பவர்களுக்கு ஆண்டு விற்றுமுதல் ரூ.40 லட்சம்வரை இருந்தால் அவர்கள் ஜி.எஸ்.டி. கட்டவேண்டிய தேவையில்லை. ஆனால், இதுகுறித்த முடிவை மாநில அரசுகள் ஒருவார காலத்துக்குள் முடிவுசெய்து அறிவிக்கவேண்டும். மேலும் இணக்க முறையில் வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் ஒரு சதவீதம் வரி செலுத்துவதற்கான உச்சவரம்பு ரூ.1 கோடியில் இருந்து ரூ.1½ கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சிறு சேவைகள் வழங்குபவர்களின் ஆண்டு வருமானம் ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்குள் இருக்கும்பட்சத்தில் இணக்க வரியின்கீழ் 6 சதவீதம் வரி செலுத்திடமுடியும். இதன்மூலம் தற்போது காலாண்டுக்கு ஒருமுறை கணக்கு தாக்கல் செய்வதற்கு பதிலாக, ஆண்டுக்கு ஒருமுறை கணக்கு தாக்கல் செய்தால்போதும். அவர்கள் காலாண்டுக்கு ஒருமுறை வரி செலுத்தவேண்டும். இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டநிலையில், மத்திய நிதி மந்திரி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஜி.எஸ்.டி. குறித்து மிக பெருமிதமாக சில கருத்துகளை வெளியிட்டுள்ளார். நுகர்வோர்களுக்கு பலனளிக்கும் நடவடிக்கை இது என்றும், இதனால் ஏராளமான பொருட்களுக்கு வரிவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது என்றும், விலைவாசி குறைந்துள்ளது என்றும், பல வரிவிகிதங்கள் சீரமைக்கப்பட்டபிறகு இதுவரையில் 350 பொருட்களுக்கும், 66 சேவைகளுக்கும் வரிவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. 97.5 சதவீத பொருட்கள் 18 சதவீத வரிவிதிப்பின் கீழ்தான் இருக்கிறது. 28 பொருட்கள் மட்டுமே 28 சதவீத வரிவிதிப்பில் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

கடந்த 32 கூட்டங்களில் இந்த வரிகுறைப்பு நடந்திருக்கிறது. தேர்தலுக்கு முன்பு இன்னமும் வரிசலுகைகள் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. தமிழகத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டும். அடிக்கடி நடந்த வரி குறைப்புகளால் வரிவசூல் செய்பவர்களுக்கு நிர்வாகத்தில் சற்று சிரமம் ஏற்பட்டாலும், வியாபாரிகள், சிறுதொழில் நிறுவனங்களை நடத்துபவர்களுக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக இந்த வரிவிதிப்பு குறைவினால் பயன்பெறும் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பலன் கிடைக்கும். இது நிச்சயமாக வரவேற்கவேண்டிய ஒன்றாகும். மேலும் சமுதாயத்தின் வேண்டுகோளை ஏற்று, இதுவரையில் இவ்வளவு பொருட்கள், சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. சரக்கு சேவைவரி குறைத்திருப்பது பாராட்டுக்குரியது. ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரையில் வரி குறைக்கப்பட்டதே தவிர, வரி உயர்த்தப்படவில்லை என்பது நிச்சயமாக வரவேற்கத்தக்கதாகும்.


தொடர்புடைய செய்திகள்

1. பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!
இன்று பொங்கல் திருநாள். தமிழர்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருவெள்ளமாக பெருக்கெடுத்து ஓடும் நன்னாள்.
2. வாஜ்பாய் வழியில் கூட்டணி
ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கும்நிலையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறப்போகின்றன?, பா.ஜ.க. கூட்டணியில் எந்த கட்சிகள் எல்லாம் இடம்பெறப்போகின்றன? என்ற பரபரப்பில் தமிழக மக்கள் இருக்கிறார்கள்.
3. இந்த நிவாரணம் போதாது
2018–ம் ஆண்டை எதிர்காலத்தில், இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து நினைத்துப்பார்த்தாலும் கஜா புயல் ஏற்படுத்திய சேதத்தை யாராலும் மறந்துவிட முடியாது.
4. வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு
எல்லா வழிகளும் ரோமபுரியை நோக்கி என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அதுபோல, தமிழ்நாட்டில் எல்லோருடைய பார்வையும் 23, 24–ந்தேதிகளில் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நோக்கித்தான் இருக்கிறது. இது 2–வது மாநாடாகும்.
5. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு; நீதிமன்றத்தில் நிற்குமா?
சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. தோல்வி அடைந்தது.