மகத்தான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்


மகத்தான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்
x
தினத்தந்தி 17 Jan 2019 10:30 PM GMT (Updated: 2019-01-17T18:26:52+05:30)

கடந்த ஆண்டு ஆகஸ்டு 15–ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி டெல்லி செங்கோட்டையில் கொடியை ஏற்றிவிட்டு, ஆற்றிய உரையில், ‘ஏழை–எளிய மக்களுக்கான மருத்துவ காப்பீட்டுத்திட்டம் தொடங்கப்படும்’ என்று அறிவித்தார்.

ந்த ஆண்டு ஏப்ரல்–மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இருக்கும் நிலையில், அதற்கு முன்பான சுதந்திர தின உரை என்ற முறையில், கடந்த ஆண்டு ஆகஸ்டு 15–ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி டெல்லி செங்கோட்டையில் கொடியை ஏற்றிவிட்டு, ஆற்றிய உரையில், ‘ஏழை–எளிய மக்களுக்கான மருத்துவ காப்பீட்டுத்திட்டம் தொடங்கப்படும்’ என்று அறிவித்தார். ‘தேசிய மருத்துவ காப்பீட்டுத்திட்டம்’ என்ற மகத்தான மருத்துவ திட்டத்தில் இந்தியாவில் உள்ள 10 கோடியே 74 லட்சம் ஏழை–எளிய குடும்பங்களை சேர்ந்த 50 கோடி மக்கள் பயன்பெறும்வகையில் இந்தத்திட்டம் உருவாக்கப்பட்டது. 

ஒவ்வொரு குடும்பத்திலும் 5 பேர் பயன்பெறவும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ சிகிச்சை அளிக்கவும் இந்தத்திட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு இதற்காக பட்ஜெட்டில் ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்க நாடு முழுவதிலும் உள்ள 16 ஆயிரத்து 134 அரசு மருத்துவமனைகளும், 8 ஆயிரத்து 807 தனியார் மருத்துவமனைகளும் இணைக்கப்பட்டன. 1,350 வகையான நோய்களுக்கு இந்தத் திட்டத்தின்கீழ் சிகிச்சை அளிக்கமுடியும். இந்தத்திட்டம் தொடங்கப்பட்ட 100 நாட்களிலேயே, 6 லட்சத்து 85 ஆயிரம் மக்கள் இதன்கீழ் சிகிச்சை பெற்றுள்ளனர். இது நிச்சயமாக பெரிய சாதனையாகும். இதனால் பெருமிதம் கொண்ட நிதிமந்திரி அருண் ஜெட்லி, தன்னுடைய ‘பேஸ்புக்’ பக்கத்தில் மருத்துவ சிகிச்சையில் இந்தத்திட்டம் பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. நலிந்தபிரிவில் உள்ள ஏராளமான மக்கள் தங்களால் பெரும் பணச்செலவை தாங்கிக்கொள்ள முடியாது என்றவகையில், மருத்துவமனைக்கு சிகிச்சை பெற செல்லாமல் இருந்தார்கள். ஆனால் இன்று ஏழை மக்களுக்கு அரசு செலவிலேயே மருத்துவமனையில் சிகிச்சை பெற முடிகிறது என்று தெரிவித்திருக்கிறார். தமிழகத்தை பொறுத்தமட்டில், தேசிய மருத்துவ காப்பீட்டுத் திட்டமும் இருக்கிறது. 

தமிழக அரசின், ‘முதல்–அமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்டமும்’ இருக்கிறது. இந்த இரு திட்டங்களையும் இணைத்து ஒரு கோடியே 58 லட்சம் தமிழக மக்கள் மருத்துவ சிகிச்சை பெற வாய்ப்பு இருக்கிறது. இவர்களுக்கான மருத்துவ காப்பீடு ரூ.2 லட்சமாக இருந்தது, இப்போது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தை எடுத்துக்கொண்டால், தனியார் மருத்துவமனைகளில் மிகப்பெரிய மருத்துவமனைகளெல்லாம் இந்தத் திட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படாததால், இதுபோன்ற பெரிய மருத்துவமனைகளுக்கு அவர்களால் சிகிச்சைக்கு செல்ல முடியவில்லை. கட்டாய கல்வித்திட்டத்தில் பெரிய, பெரிய பள்ளிக்கூடங்களில் எல்லாம் ஏழை–எளிய மக்கள் சேரமுடியும் நிலையில், மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் மட்டும் பெரிய மருத்துவமனைகளுக்கு ஏழைகளெல்லாம் செல்ல முடியவில்லை. இதற்கு காரணம், இந்தத்திட்டத்தில் ஒவ்வொரு நோய்க்கும் மருத்துவ சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி அந்த பெரிய மருத்துவமனைகளின் கட்டணத்திற்கு ஏற்றவகையில் இல்லை. அவர்கள் கோரிக்கை என்னவென்றால், மத்திய அரசாங்க ஊழியர்களுக்கு இதுபோன்ற மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கும்போது எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது அந்தளவாவது இருக்கவேண்டும் என்பதுதான். மருந்து செலவுகள், மருத்துவ உபகரணங்கள் விலை, உயர் சிகிச்சைகளுக்கான செலவுகள் உயர்ந்துள்ள நிலையில், இந்த தொகையை உயர்த்தவேண்டும் என்ற அந்த கோரிக்கையையும் ஏற்று, இன்னும் அதிகமான அளவில் பெரிய தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுவதற்கு மத்திய அரசாங்கம் வழிவகை காணவேண்டும்.

Next Story