விளைச்சல் இருந்தால் விலை இல்லை; விலை இருந்தால் விளைச்சல் இல்லை


விளைச்சல் இருந்தால் விலை இல்லை; விலை இருந்தால் விளைச்சல் இல்லை
x
தினத்தந்தி 20 Jan 2019 10:30 PM GMT (Updated: 2019-01-20T17:45:46+05:30)

இந்தியா ஒரு விவசாய நாடு. 50 சதவீதத்துக்கு மேல் உள்ள மக்கள், அதிலும் குறிப்பாக கிராமப்புற மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்க்கையை ஓட்ட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

ந்தியா ஒரு விவசாய நாடு. 50 சதவீதத்துக்கு மேல் உள்ள மக்கள், அதிலும் குறிப்பாக கிராமப்புற மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்க்கையை ஓட்ட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்திலும் விவசாயத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாகவே கிராமத்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களை விட்டுவிட்டு நகர்ப்புறங்களுக்கு செல்ல தொடங்கிவிட்டனர். நகர்ப்புறங்களில் இருந்து யாரும் கிராமத்தை நோக்கி பெரும் எண்ணிக்கையில் வருவதாக தெரியவில்லை. இதற்கு காரணம் விவசாயம் பெரிய வீழ்ச்சியை கண்டது தான். விளைச்சல் இருந்தால் விலை இல்லை; விலை இருந்தால் விளைச்சல் இல்லை என்பதுதான் விவசாயிகளின் தலைவிதியாக இருக்கிறது. மழை பெய்தால் தான் விளைச்சல் இருக்கும். மழை பெய்யவில்லை என்றால் விவசாயம் பொய்த்துவிடுகிறது. இதுமட்டுமல்லாமல், கடந்த பல ஆண்டுகளாகவே விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. ஆனால், அவர்களுக்கு தேவையான இடுபொருட்களான விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து, விவசாய தொழிலாளர்களின் கூலி எல்லாமே உயர்ந்துள்ள நிலையில், சிறிய விவசாயி என்றாலும் சரி, பெரிய விவசாயி என்றாலும் சரி விவசாயத்தில் வருமானத்தை ஈட்ட முடியவில்லை. 

பா.ஜ.க.வின் 2014–ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூட விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று உறுதிமொழி கூறப்பட்டது. ஒரு சில விவசாய பொருட்களின் குறைந்தபட்ச ஆதாரவிலை உயர்த்தப்பட்டாலும், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படவில்லை. இந்தநிலையில், கடந்த 18 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு கடுமையான விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மொத்த விற்பனை விலை பணவீக்கம் 3.80 சதவீதமாக இருக்கிறது. விலைவாசிகள் குறைந்தால் பொதுமக்களுக்கு மகிழ்ச்சி. ஆனால், விளைபொருட்களின் விலை குறைவால், விவசாயிகளுக்கு துயரம். பாரத ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகளை பணவீக்கம் தான் நிர்ணயிக்கிறது. பணவீக்கம் குறைவு என்பது விலைவாசி குறைவு தான். இதனால், விவசாயிகளின் வருமானம் கடுமையான வீழ்ச்சியை அடைந்துள்ளது. ஏற்கனவே மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் போன்ற மாநிலங்களில் விவசாயிகளின் துயரத்தால் தோல்வியை சந்தித்த பா.ஜ.க. அரசாங்கம் அடுத்த சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையில், விவசாயிகள் நலனுக்காக சில திட்டங்களை நிறைவேற்ற உள்ளது. வரும் வாரங்களில் இவை அறிவிக்கப்படும். இதற்காக வேளாண் அமைச்சகம், மந்திரிசபை கூட்டத்தில் தாக்கல் செய்வதற்காக ஒரு நகல் திட்டத்தை தயாரித்துள்ளது. 

விவசாயிகளுக்கு நேரடியாக அவர்கள் வங்கிக் கணக்கிலேயே பணத்தை மாற்றம் செய்யும் திட்டம், குறிப்பிட்ட காலத்தில் கடனை செலுத்தினால் வட்டியை தள்ளுபடி செய்யும் திட்டம், வங்கிகள் மூலமாக வட்டியில்லாத கடன்களை வழங்கும் திட்டம் என்பது போன்ற பல திட்டங்களை பட்ஜெட்டுக்கு முன்பாகவோ, பிப்ரவரி மாதம் 1–ந்தேதி தொடங்கும் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அறிவிக்க பரிசீலனை நடக்கிறது. மத்திய வேளாண்துறை மந்திரி ராதாமோகன் சிங்கே பெரிய அறிவிப்புகள் வருகிறது என்று சூசகமாக அறிவித்துள்ளார். இதற்கு பணச்சுமை அதிகமாக அரசாங்கத்துக்கு இருக்கும் என்றாலும், ரிசர்வ் வங்கி விரைவில் ரூ.40 ஆயிரம் கோடி லாப பங்குத்தொகையை மத்தியஅரசுக்கு கொடுக்கும் நிலையில் நிச்சயமாக இந்த நிதிச்சுமையை தாங்கிக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. 

Next Story