வேலைவாய்ப்புகள் பெருமளவில் உருவாகட்டும்


வேலைவாய்ப்புகள் பெருமளவில் உருவாகட்டும்
x
தினத்தந்தி 22 Jan 2019 10:00 PM GMT (Updated: 2019-01-22T19:06:15+05:30)

தமிழ்நாட்டில் படித்து முடித்த இளைஞர்களிடையும், படிக்காத இளைஞர்களிடையும் தற்போது வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக இருக்கிறது. இவர்களுக்கெல்லாம் வேலைவாய்ப்பு வழங்கவேண்டுமென்றால் தொழில்வளர்ச்சி, விவசாய வளர்ச்சி, முறைசாரா தொழில்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கவேண்டும்.

தமிழ்நாட்டில் தொழில்வளர்ச்சியை பெருக்க தமிழக அரசு இன்றும், நாளையும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துகிறது. இந்த மாநாட்டில் 6 வெளிநாடுகளிலிருந்தும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழில்நிறுவனங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் கலந்துகொள்கிறார்கள். இந்த மாநாட்டையொட்டி, தொழில் கண்காட்சியும் நடைபெறுகிறது. இதில் 250 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்குகளில் தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் தயாரிப்பு பொருட்களும் காட்சிக்காக வைக்கப்படுகின்றன. இந்த 2 நாள் மாநாட்டை சிறப்பாக நடத்தி முடிக்க ரூ.98 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்தநேரத்தில், 2015–ம் ஆண்டு செப்டம்பர் 9, 10–ந் தேதிகளில் முதல்முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. அப்போது 9 நாடுகள் பங்குதாரர் நாடுகளாக பங்கேற்று ரூ.2.42 லட்சம் கோடி மதிப்பிலான 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஆனால், ரூ.62,738 கோடி மதிப்பிலான 61 நிறுவனங்களின் முதலீடுகள்தான் தற்போது பல்வேறு கட்டங்களில் செயலாக்கத்தில் உள்ளன. இதன்மூலம் 96,341 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வளவு தொகைக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, அதில் பெரும்பாலான ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படவில்லை என்பது சற்று ஏமாற்றம் அளித்தாலும், அதற்கு காலஅளவு 7 ஆண்டுகள்வரை இருப்பதால் இன்னமும் அந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயலாக்கத்துக்கு வர வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த ஆண்டு 2,900 பேர் பங்குகொண்டு ரூ.2.52 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அந்தவகையில் 2015–ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும், இந்த ஆண்டு கையெழுத்திடப்படவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் செயலாக்கத்திற்கு கொண்டுவர தமிழக அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

இந்த முயற்சியோடு தமிழ்நாடு அரசின் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மிகஅமைதியான புரட்சி ஒன்றை உருவாக்கும் வகையில், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கையை நிறைவேற்றியுள்ளது. தமிழக அரசு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறது. மத்திய அரசாங்கம் ‘ஸ்டார்ட் அப்’ என்று கூறப்படும் புதிய தொழில்நிறுவனங்களை உருவாக்குவதில் மிகுந்த அக்கறை காட்டிவருகிறது. அந்தவகையில், இந்த நிறுவனம் புத்தொழில், பொருள், சேவை, தொழில் தயாரிப்பு போன்றவற்றில் ‘இன்னோவே‌ஷன்’ என்று கூறப்படும் புத்தாக்கம் மற்றும் வளர்ச்சியின் மேம்பாட்டை அடிப்படையாகக்கொண்டு அபரிமிதமான வேலைவாய்ப்பு அல்லது செல்வத்தை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் 5 ஆயிரம் தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழிலை உருவாக்குவது மற்றும் 10 உலகளாவிய உயர்வளர்ச்சி புத்தொழில்களை உருவாக்குவது என்ற முனைப்போடு இருக்கிறது. இந்த புதியதொழில்கள் மூலம் குறைந்தது 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரேநேரத்தில் இந்த இருமுயற்சிகளையும் தொடங்கியுள்ள தமிழக அரசு இதை செயலாக்கத்துக்கு கொண்டுவந்து வேலைவாய்ப்புகளை மிகஅதிகமாக பெருக்கவேண்டும்.

Next Story