மக்களை மகிழ்விக்குமா மத்திய பட்ஜெட்!


மக்களை மகிழ்விக்குமா மத்திய பட்ஜெட்!
x
தினத்தந்தி 23 Jan 2019 10:00 PM GMT (Updated: 23 Jan 2019 1:01 PM GMT)

இந்த பட்ஜெட் தேர்தலை கண்வைத்து விவசாயிகள், இல்லத்தரசிகள், நடுத்தர வர்க்கத்தினர், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், இளைஞர்கள் என்று எல்லா தரப்பினரையும் மகிழ்விக்கும் பட்ஜெட்டாக இருக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல்–மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கும் சூழ்நிலையில், மத்திய அரசாங்கம் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியுமா?, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யுமா? அல்லது ஏப்ரல் மாதம் தொடங்கும் நிதி ஆண்டிற்காக முதல் 3, 4 மாதங்கள் மத்தியஅரசாங்கம் மேற்கொள்ளவேண்டிய செலவுகளுக்காக ‘ஓட் ஆன் அக்கவுண்ட்’ என்று கூறப்படும் முன்பண மானியத்தொகையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுமா? என்று எல்லோருமே குழம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தயாரிக்கும் பணியை தொடங்குவதற்காக, நிதி அமைச்சகம் சார்பில் அல்வா கிண்டி எல்லோருக்கும் கொடுக்கும் நடைமுறையைப்போல அல்வா கிண்டப்பட்டது. நிதி மந்திரி அருண்ஜெட்லி வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு போயிருப்பதால், மத்திய நிதித்துறை இணை மந்திரிகள் சிவபிரதாப் சுக்லா, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பெரிய கடாயில் அல்வா கிண்டவேண்டிய பணிகளை தொடங்கி, அதிகாரிகள், பட்ஜெட் தயாரிக்கும் ஊழியர்கள் அனைவருக்கும் வழங்கி பட்ஜெட் தயாரிக்கும் பணிகளை தொடங்கி வைத்தனர். முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. இது இடைக்கால பட்ஜெட்தான் என்று நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த பட்ஜெட் தேர்தலை கண்வைத்து விவசாயிகள், இல்லத்தரசிகள், நடுத்தர வர்க்கத்தினர், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், இளைஞர்கள் என்று எல்லா தரப்பினரையும் மகிழ்விக்கும் பட்ஜெட்டாக இருக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இதை ஒரு கவர்ச்சிகரமான விளம்பர பட்ஜெட்டாக கருதக்கூடாது. ஏழை–எளிய மக்கள், வேலையில்லாதவர்கள், விவசாயிகள் என்று அனைத்து தரப்பினரும் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையிலான அறிவிப்புகள் நிச்சயமாக இடம்பெற்றிருக்கும் என்று பா.ஜ.க. தலைவர்கள் கூறுகிறார்கள். அதற்கான அறிகுறிகள் மத்திய அரசாங்க துறைகளில் தென்படுகிறது. மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. வலுவாக இருந்து வந்தநிலையில், அந்த மாநிலங்களில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததை கணக்கில்கொண்டு, இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு கணிசமான சலுகைகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக மானியத்தொகையை சேர்க்கும் அறிவிப்பு நிச்சயமாக இடம்பெறும். இந்தமுறை தெலுங்கானா மாநிலத்திலும், ஒடிசாவிலும் அமலில் இருக்கிறது. தற்போது முதியோர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.200–லிருந்து ரூ.800 ஆக உயர்த்தவும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது மாதம் ரூ.500 வழங்கப்படுவது, ரூ.1,200 ஆக வழங்கவும் ஊரக அமைச்சகம் ஒரு திட்டத்தை தயாரித்து நிதி அமைச்சகத்துக்கு வழங்கியிருக்கிறது. இதுதொடர்பான அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெறப்போகிறது. மேலும், நடுத்தர மக்கள் எல்லோரும் எதிர்பார்க்கும்வகையில், வருமான வரி கட்டும் வரம்பை ரூ.2½ லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தவும், இதே விகிதப்படி 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் உயர்த்தவும், 80சி பிரிவின்கீழ் சேமிப்பு முதலீடுகள் செய்பவர்களுக்கு விலக்கு ரூ.1½ லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தவும் ஒரு திட்டம் பட்ஜெட்டில் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. இதுபோல, பிராவிடண்ட் பண்ட், பென்‌ஷன் தொகையை உயர்த்துவது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, தொழில் வளர்ச்சி என அறிவிப்புகளை வெளியிடுவது என்று எல்லோரையும் திருப்திப்படுத்தும் ஒரு பட்ஜெட்டாக இருக்கும் என்பதுதான் இப்போதைய எதிர்பார்ப்பாகும்.

Next Story