பிரியங்கா வருகிறார் ‘பராக்’


பிரியங்கா வருகிறார் ‘பராக்’
x
தினத்தந்தி 24 Jan 2019 9:30 PM GMT (Updated: 2019-01-24T19:43:58+05:30)

அரசியலில் எந்தநேரத்திலும் எதுவும் நடக்கலாம், ‘முடியாது என்று எதுவுமே இல்லை’ என்று சமுதாயத்தில் ஒரு வழக்குமொழி உண்டு. அது காங்கிரஸ் கட்சியில் இப்போது நடந்துவிட்டது.

இவர் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? பாட்டி இந்திராகாந்தி தோற்றத்திலேயே இருக்கிறாரே, நடை, உடை, பாவனை என எல்லாமே இரும்பு பெண்மணியைப்போன்றே உள்ளது. இவர் வந்தால் நன்றாக இருக்குமே, ‘பிரியங்கா காந்தி வருகிறார் பராக்’ என்று நாங்கள் மகிழ்வோடு குரல் எழுப்பலாமே, என்றெல்லாம் பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசம் குறித்து காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதை நிறைவேற்றும்வகையில் சரியாக தனது 47 வயது முடிந்துள்ளநிலையில், பிரியங்கா காந்தி பொதுச்செயலாளர் என்ற பெரிய பொறுப்போடு தீவிர அரசியலில் நுழைந்துவிட்டார். 

நேரு குடும்பம் காங்கிரஸ் கட்சியில் பொறுப்புகளை ஏற்று சரியாக 100–வது ஆண்டில் 11–வது தலைவராக பிரியங்கா காந்தி பொறுப்புகளை ஏற்கப்போகிறார். அரசியலில் பொறுப்பை ஏற்றது மட்டும்தான் புதிதே தவிர, தனது 17–வது வயதிலேயே, அதாவது 1989–ம் ஆண்டிலேயே தன் தந்தை ராஜீவ்காந்தி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது தேர்தல் பிரசாரம் செய்தார். காங்கிரஸ் கட்சியில் நேரு குடும்பத்தை சேர்ந்த 2 பேர் ஒரேநேரத்தில் முக்கிய தலைமை பொறுப்புகளில் இருப்பது இது புதிதல்ல. நேரு 1959–ம் ஆண்டு பிரதமராக இருந்தபோதுதான் இந்திராகாந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆனார். இந்திராகாந்தி தலைவராக இருக்கும்போதுதான் ராஜீவ்காந்தி, சஞ்சய்காந்தி பொதுச்செயலாளர்களாக இருந்தார்கள். சோனியாகாந்தி தலைவராக இருந்தபோதுதான் ராகுல்காந்தி பொதுச்செயலாளராக இருந்தார். அதேபோல்தான் இப்போது ராகுல்காந்தி தலைவராக இருக்கும்போது, அவரது சகோதரி பிரியங்கா காந்தி பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்காவுக்கு உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதியில் தேர்தல் பொறுப்புகளை கவனிக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது. இனிமேல் இந்த பொறுப்பு காரணமாக காங்கிரஸ் கட்சியின் உயரிய முடிவுகளை எடுக்கும் அமைப்பான காரிய கமிட்டி உறுப்பினராகவும் பிரியங்கா இணைத்துக்கொள்ளப்படுவார். 

உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்குப்பகுதி என்பது பா.ஜ.க. மிகவும் வலுவுள்ள பகுதியாகும். இந்த பகுதியில்தான் பிரதமர் நரேந்திரமோடியின் வாரணாசி தொகுதியும், உத்தரபிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியிட்ட கோரக்பூர் தொகுதியும் இருக்கிறது. பிரியங்கா காந்தி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் இருக்கிறது என்பதை ராகுல்காந்தி சூசகமாக தெரிவித்துவிட்டார். நாடாளுமன்ற தேர்தலில் பிரியங்கா போட்டியிடுவாரா? என்று ராகுல்காந்தியிடம் கேட்டபோது, ‘இல்லை என்று சொல்லவில்லை. அதை அவர்தான் முடிவு செய்யவேண்டும். காங்கிரஸ் கட்சி குஜராத் என்றாலும்சரி, உத்தரபிரதேசம் என்றாலும்சரி பின்னால் நிற்காது. முன்னால் நின்றுதான் போராடும்’ என்றார். பிரியங்கா ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவார் என்பது காங்கிரஸ் தொண்டர்களின் நம்பிக்கையாகும். பிரியங்காவின் வரவு காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் இருந்தே அவரது பிரசாரம் உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதியோடு முடிந்துவிடுமா? அல்லது நாடு முழுவதும் இருக்குமா? என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பாகும். தோற்றத்தில் இந்திரா காந்தியைப்போல இருக்கும் பிரியங்கா காந்தி அரசியலிலும் தனது பாட்டியைப்போல ஜொலிப்பாரா? என்பது அவர் ஆற்றப்போகும் வேகமான பணிகளில்தான் தெரியும்.

Next Story