எளிய பாடத்திட்டம்


எளிய பாடத்திட்டம்
x
தினத்தந்தி 25 Jan 2019 10:00 PM GMT (Updated: 2019-01-25T17:37:12+05:30)

இந்தியா முழுவதும் ‘பிரதம்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கடந்த 2006–ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வருடாந்திர கல்விநிலை தொடர்பான அறிக்கையை தயாரித்து வருகிறது.

நடப்பு ஆண்டு இந்த அறிக்கையை தயாரிப்பதற்காக நாடு முழுவதிலும் உள்ள 596 மாவட்டங்களில் 3 லட்சத்து 54 ஆயிரத்து 944 குடும்பங்களையும், 3 வயது முதல் 16 வயது வரையுள்ள 5 லட்சத்து 46 ஆயிரத்து 527 மாணவ–மாணவிகளையும் சந்தித்து ஆய்வு நடத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கிராமப்புறங்களிலுள்ள பள்ளிக் கூடங்களில் 522 தொடக்கப்பள்ளிகளிலும், 228 உயர் நிலைப்பள்ளிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இந்தியா முழுவதிலும் உள்ள பள்ளிக் கூடங்களில் அடிப்படை கணக்கு பாடத்தில் 14 வயது முதல் 16 வயது வரையுள்ள மாணவர்களில் 50 சதவீதம் பேர்களும், 45 சதவீதம் மாணவிகளும் வகுத்தல் கணக்குகளை எளிதாக போட்டுவிடுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இதில் நேருக்குமாறாக இருக்கிறது. மாணவர்களைவிட, மாணவிகளே கணக்கு பாடத்தில் சிறந்து விளங்குகிறார்கள். 

தமிழ்நாட்டில் 9.7 சதவீத பள்ளிக்கூடங்களில் குடிநீர்வசதி இல்லை. மேலும் உள்ள 10.1 சதவீத பள்ளிக்கூடங்களில் அதற்கான வசதிகள் இருந்தாலும் குடிநீர் வழங்கப்படவில்லை. ஆக, மொத்தம் 80.2 சதவீத பள்ளிக்கூடங்களில் குடிநீர் வசதி இருக்கிறது. கிராமப் புறங்களில் உள்ள 90.2 சதவீத பள்ளிக்கூடங்களில் கழிப்பறை வசதிகள் இருக்கின்றன. 83.8 சதவீத பள்ளிக்கூடங்களில் நூலகங்கள் இருக்கின்றன. 97.9 சதவீத பள்ளிக்கூடங்களில் மின்சாரவசதி இருக்கிறது. ஆக அடிப்படை வசதிகளில் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிக்கூடங்கள் சிறந்து விளங்குகின்றன. ஆனால் 8–ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 72.8 சதவீத மாணவர்கள்தான் 2–ம் வகுப்பு பாடப்புத்தகத்தை வேகமாக படிக்கும் ஆற்றல் கொண்டிருக்கிறார்கள். 919–ஐ 6–ஆல் 43.9 சதவீத மாணவர்களால்தான் சரியாக வகுக்க முடிகிறது. கிராமப்புறங்களில் 5–ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 59 சதவீதம் பேரும், 3–ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 89 சதவீதம் பேர்களாலும், 2–ம் வகுப்பு பாடப்புத்தகத்தை படிக்க முடியவில்லை. 2–ம் வகுப்பு மாணவர்களில் 96 சதவீதம் பேர் தங்கள் பாடப்புத்தகத்தை படிக்கமுடியாமல் திணறுகிறார்கள். 

அரசு பள்ளிக்கூடங்களில் 5–ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 72.9 சதவீதம் பேர்களால் வகுத்தல் கணக்குகளை போட முடியவில்லை. தனியார் பள்ளிக்கூடங்களில் 77 சதவீதம் பேர்களுக்கு அதே வகுத்தல் கணக்குளை போடமுடியவில்லை. இதேபோல அரசு பள்ளிக்கூடங்களில் 5–ம் வகுப்பு மாணவர்களில் 53.7 சதவீதம் பேர்களுக்கும், தனியார் பள்ளிக்கூடங்களில் 71.2 மாணவர்களுக்கும் 2–ம் வகுப்பிலுள்ள கதைகளை படிக்கமுடியவில்லை. மொத்தத்தில், அரசு பள்ளிக்கூடங்களில் தொடக்க வகுப்பில் படிக்கும் மாணவர்களின் ஆற்றல் ஓரளவுக்கு சிறந்து விளங்கி இருந்தாலும், இன்னும் கல்வித்தரத்தை அனைத்து பாடங்களிலும் உயர்த்துவதில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்பதைத்தான் இந்த அறிக்கை காட்டுகிறது. 2017–ம் ஆண்டு பட்ஜெட் உரையில் நிதி மந்திரி அருண்ஜெட்லி, ‘நமது பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் கற்பதை ஆண்டுதோறும் மதிப்பிடுவதற் கான புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படும். அறிவியல் கல்விக்கும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் புதுமையான உள்ளூர் உள்ளடக்கத்துடன் கூடிய எளிய பாடத்திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்’ என்று அறிவித்ததை தமிழக அரசின் கல்வித்துறை நடைமுறைப்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது. 

Next Story