உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் உறுதி


உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் உறுதி
x
தினத்தந்தி 29 Jan 2019 10:30 PM GMT (Updated: 2019-01-29T19:19:36+05:30)

தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 12,617 ஊராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள் இருக் கின்றன.

தற்போது தமிழகஅரசு, ‘கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்’ என்று அறிவித்தநிலையில், இனி மாவட்ட ஊராட்சிகளின் எண்ணிக்கை மேலும் ஒன்று அதிகரிக்கும். இந்த உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து ஏறத்தாழ 1 லட்சத்து 20 ஆயிரம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். கடந்த 2016–ம் ஆண்டு அக்டோபர் 24–ந்தேதியோடு உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகாலம் முடிவடைந்தநிலையில், அதற்கு முன்பே தேர்தலை நடத்தி புதிய உறுப்பினர்கள், தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கோர்ட்டில் வழக்கு, வார்டுகள் மறுவரையறை செய்யப் படவேண்டும் என்பதுபோன்ற காரணங்களை சுட்டிக் காட்டி, 2 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாத சூழ்நிலை இருக்கிறது. உள்ளூர் பிரச்சினை களை தீர்க்க உள்ளாட்சி அமைப்புகளால்தான் முடியும். எனவே, பல்வேறு குறைகளை தீர்க்கப்படாத நிலையில், அந்தந்த ஊர்மக்கள், அந்தந்த வார்டு மக்கள், திக்கு தெரியாத காட்டில் நிற்க வைக்கப்பட்டதுபோல திகைத்து நிற்கின்றனர். 

தற்போது தி.மு.க. சார்பில் 12,617 ஊராட்சிகளிலும், கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களின் குறைகள் கேட்கப்படுகின்றன. தி.மு.க. தலைவர் 

மு.க.ஸ்டாலின் தற்போதுகூட, கிராமசபை கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமசபை கூட்டங்களில் கலந்துகொள்ளும் கனிமொழி எம்.பி., அங்கேயே முகாமிட்டு இதுவரை 

39 கிராமசபை கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். ‘‘உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் தி.மு.க.தான் வெற்றிபெறும் என்று ஆளுங்கட்சிக்கு தெரியும். அதனால்தான் தேர்தலை தள்ளி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்’’ என்று நேற்று முன்தினம் நடந்த கிராமசபை கூட்டம் ஒன்றில் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார். இந்தநிலையில், உள்ளாட்சி தேர்தலை 2017–ம் ஆண்டு நவம்பர் 17–ந்தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை, மாநில தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்த வில்லை என்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் பட்டு, அதன் விசாரணை தற்போது நடந்து வருகிறது. 

நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணையின் போது, மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிக்கை மே 31–ந்தேதி வாக்கில் வெளியிடப்படும். அதிலிருந்து தேர்தல் நடத்த 

45 நாட்கள் தேவைப்படுகிறது என்று கூறியிருக் கிறார்கள். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உள்ளடக்கிய மறுவரையறை செய்யப்பட்ட புதிய வார்டுகள் முடிவு செய்யப்படும் பணி ஜனவரி 31–ந்தேதி முடிவடையும். அதிலிருந்து வாக்காளர் பட்டியலை தயாரிக்க 

90 நாட்கள் ஆகிவிடும். எனவே, மே 31–ந்தேதி தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டு, அதிலிருந்து 45 நாட்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்ற உறுதி மொழியை மாநில தேர்தல் ஆணையம் சென்னை ஐகோர்ட்டிலேயே தெரிவித்திருக்கிறது. எனவே, இனியும் உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட முடியாது. நீதிமன்றத்திலேயே உறுதிமொழி அளிக்கப்பட்டு விட்டதால், தமிழகஅரசும் இதற்கான பூர்வாங்க பணிகளை உடனடியாக தொடங்கிவிட வேண்டும். மக்களின் குறைகளை தீர்ப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகள் இல்லை என்ற ஒரு பெரிய குறைபாட்டை தவிர, மத்திய அரசாங்கத்தில் இருந்து வரவேண்டிய 3,776 கோடி ரூபாய் அளவில் நிதியும் வராமல் இருக்கிறது. 

Next Story