இலவசங்கள் வேண்டாம்; வருமானம்தான் வேண்டும்


இலவசங்கள் வேண்டாம்; வருமானம்தான் வேண்டும்
x
தினத்தந்தி 30 Jan 2019 10:30 PM GMT (Updated: 2019-01-30T20:34:38+05:30)

ஏப்ரல்-மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற முனைப்பில், பிரதமர் நரேந்திரமோடியும், எங்களை விட்டுப்போன ஆட்சியை அடைந்தே தீருவோம் என்ற உத்வேகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் தீவிர சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள தொடங்கி விட்டனர்.

 பா.ஜ.க. தரப்பில் தேர்தல் அறிக்கையை தயாரிக்க உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் ஒரு குழு அமைக்கப் பட்டுள்ளது. உங்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்ற உறுதியில் காங்கிரஸ் கட்சியும், பிருதிவிராஜ் சவான் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் உள்ளிட்டோர் அடங்கிய 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவும் தங்கள் பணியை தொடங்கிவிட்டது. 

சமீபத்தில் நடந்த மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநில சட்டசபை தேர்தல்களில், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்களை ரத்து செய்வோம்’ என்று காங்கிரஸ் தரப்பில் அளித்த தேர்தல் வாக்குறுதிதான், பா.ஜ.க.விடமிருந்து ஆட்சியை காங்கிரசால் தட்டி பறிக்க முடிந்தது என்ற ஒரு எண்ணம் அரசியல் கட்சிகளிடையே இருக்கிறது. ஆனால் இதுவரையில் நடந்த விவசாய கடன் ரத்து அறிவிப்பு களின் பின்விளைவுகளை பார்த்தால், அது விவசாயி களுக்கு பயன் அளிக்கவில்லை. ஏனென்றால், சமீபத்தில் நபார்டு வங்கி வெளியிட்ட ஒரு ஆய்வில், விவசாயிகளில் 30.3 சதவீதம்பேர்தான் வங்கிகளில், கூட்டுறவு சங்கங்களில் விவசாயக்கடன் பெற்றிருக் கிறார்கள். ஏறத்தாழ 70 சதவீதம்பேர் தங்கள் அவசர அவசியத்திற்காக தனியாரிடமும், தனியார் நிதி நிறுவனங்களிடமிருந்துதான் கடன் வாங்கியிருக் கிறார்கள் என்று தெள்ளத்தெளிவாக தெரிவித்துள்ளது. அரசாங்கம் விவசாயக்கடனை ரத்து செய்யும் முடிவை நடைமுறைக்கு கொண்டுவரும்போது, இந்த 30 சதவீத விவசாயிகளுக்குத்தான் கடன் ரத்து ஆகுமே தவிர, 

70 சதவீத விவசாயிகளுக்கு தீராத கடன்தான் இருக்கும். விவசாயிகளை பொறுத்தமட்டில், கடன் தொல்லையால் மட்டுமல்ல, இடுபொருட்களின் விலை உயர்வாலும், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததாலும் தான் அல்லல்படுகிறார்கள். 

எந்த அரசாங்கம் என்றாலும் சரி, இலவசங்கள், மானியங்களை கொடுத்து ஒரு பெரிய காயத்திற்கு ஒரு பிளாஸ்திரியை ஒட்டுவதுபோல் இல்லாமல், நிரந்தரமாக நல்ல வருமானம் கிடைக்கும்நிலையை விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல், நாட்டில் உள்ள அனைவருக்கும் உருவாக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய கோரிக்கையுமாக இருக்கிறது. இதை நிறைவேற்றும் வகையில், ராகுல்காந்தி சத்தீஷ்கார் மாநிலத்தில் ஒரு நல்ல அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ‘‘எங்களுக்கு வாக்களித்தால், எங்கள் அரசாங்கம் நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழைக்கும் குறைந்தபட்ச வருமானம் கிடைப்பதை உறுதிசெய்வோம். அதாவது, ஒவ்வொரு ஏழை இந்தியனின் வங்கிக்கணக்கிலும் குறைந்தபட்சம் வருமானம் இருப்பில் இருக்கும். இதன்பொருள் இந்தியாவில் யாரும் பசியோடு இருக்கமாட்டார்கள், ஏழைகளாகவும் இருக்கமாட்டார்கள்’’ என்று அறிவித் துள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் இதேபோன்ற ஒரு ஆலோசனையை வழங்கினார். அவர் வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையில், இதேபோன்ற ஒரு திட்டம் வெளியிடப்பட்டு, அதை நிறைவேற்றினால் இப்போது உள்ள மானியங்கள், இலவசங்கள் எல்லாவற்றுக்கும் விடைகொடுத்து விடலாம் என்று தெரிவித்திருந்தார். ஆக, பா.ஜ.க., காங்கிரஸ் இரு கட்சிகளுமே இலவசங்கள், மானியங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிப்பதை பெருமளவில் தவிர்த்து, வேலைவாய்ப்பை பெருக்கி எல்லோருடைய வருமானத்தையும் உறுதிசெய்யும் அறிவிப்புகளை வெளியிடுவது சாலச்சிறந்ததாகும்.

Next Story