வாழ்வு இழந்து நிற்கும் சிவகாசி


வாழ்வு இழந்து நிற்கும் சிவகாசி
x
தினத்தந்தி 3 Feb 2019 10:30 PM GMT (Updated: 3 Feb 2019 11:27 AM GMT)

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்புவரை வேலைதேடி வருவோரையெல்லாம் வாழவைக்கும் இடமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி திகழ்ந்தது.

டந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்புவரை வேலைதேடி வருவோரையெல்லாம் வாழவைக்கும் இடமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி திகழ்ந்தது. சிவகாசிக்குள் நுழைந்தால் கண்டிப்பாக ஏதாவது ஒரு பட்டாசு தொழிற்சாலையிலோ அல்லது அதுசார்ந்த உபதொழிலிலோ வேலை கிடைக்கும். பசி என்பதே இங்கு கிடையாது என்ற பெயரை பெற்றிருந்தது சிவகாசி. 1,070 பட்டாசு தொழிற்சாலைகளும், அந்த தொழிலை சார்ந்த 106 உபதொழில்களும் சிவகாசியில் இருந்தது. பட்டாசு தொழிற்சாலை மட்டும் நேரடியாக 4 லட்சம் பேருக்கும், மறைமுகமாக 4 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு அளித்து வந்தது. இந்தியா முழுவதிலும் உள்ள பட்டாசு தேவையில் ஏறத்தாழ 95 சதவீத அளவு சிவகாசி பட்டாசுதான் பூர்த்தி செய்துவந்தது. 

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு பட்டாசு தொழிலில் ஒரு பெரிய அடியாக பசுமை பட்டாசுதான் உற்பத்தி செய்யவேண்டும். பேரியம் நைட்ரேட் மற்றும் சாம்பல் கலந்த பட்டாசுகளை உற்பத்தி செய்யக்கூடாது என்ற ஒரு தடையை கொண்டுவந்தது. பசுமை பட்டாசு என்றால், என்ன என்று யாருக்கும் தெரியாது? சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கேற்ப, தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிலையம் (நீரி), பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளும் பசுமை பட்டாசை எப்படி உற்பத்தி செய்வது? என்ற ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. சிவகாசி பட்டாசை பொறுத்தமட்டில், பேரியம் நைட்ரேட் இல்லையென்றால் எந்த பட்டாசையும் உற்பத்தி செய்யமுடியாது. கம்பி மத்தாப்பு உள்ளிட்ட 75 சதவீத பட்டாசுகள் பேரியம் நைட்ரேட் மூலம்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. எனவே இப்போதைய சூழ்நிலையில், எந்த பட்டாசையும் தயாரிக்க முடியாது என்ற நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் வாரத்திலிருந்து காலவரையற்ற கதவடைப்பை பட்டாசு நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தி உள்ளன. இதனால் சிவகாசியே வாழ்வு இழந்து நிற்கிறது. பட்டாசு தொழிற்சாலைகளில் வேலைபார்த்த மக்களுக்கும், அதை சார்ந்த உபதொழில்களில் வேலைபார்த்த மக்களுக்கும் வேறுதொழிலும் தெரியாது. அந்த ஊரில் அவர்களுக்கு வேறு வேலைவாய்ப்பு அளிக்கும் எந்தத்தொழிலும் கிடையாது. அன்றாடம் வேலைபார்த்து வாரம் ஒருமுறை கூலிவாங்கி வாழ்க்கை நடத்திவந்த மக்கள் என்ன செய்வது?, எப்படி வாழ்வது? என்று தெரியாமல் திக்குமுக்காடிப்போய் நிற்கிறார்கள். அவ்வப்போது கஞ்சித்தொட்டிகள் திறக்கப்படும் கவலைக்கிடமான நிலைமை சிவகாசி பகுதியில் தொடங்கிவிட்டது. 

ரே‌ஷன் கடைகளில் தமிழக அரசு கொடுத்துவரும் 20 கிலோ விலையில்லா அரிசி ஒன்றுதான் சாப்பாட்டுக்கு வழி என்ற நிலையில் இருக்கிறார்கள். இந்த மக்கள் மட்டுமல்லாமல், அந்த ஊரில் உள்ள கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கும் வியாபாரமே இல்லாமல், ஏதோ கடையை திறந்துவைத்தோம், இரவில் மூடுகிறோம் என்ற பரிதாபகரமான நிலை இருக்கிறது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் சிவகாசி, இப்போது அமைதி நகரமாக இருக்கிறது. பட்டாசு தொழில் தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் மார்ச் 1–ந்தேதி வர இருந்தது. இப்போது சிவகாசியில் நிலவும் நிலையை கருத்தில்கொண்டு, அவசர வழக்காக விரைவில் விசாரணை தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. தமிழக அரசும், மத்திய அரசாங்கமும் இந்த மக்களுக்கு மீண்டும் புனர்வாழ்வு கொடுக்கும் வகையில் இந்தத்தொழில் வீழ்ந்து கிடந்த நிலையிலிருந்து, எழுந்து நிற்கும் வகையில் வலுவான வாதங்களை சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துவைத்து, பட்டாசு தொழில் மீண்டும் தொடங்குவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கவேண்டும்.

Next Story