பாலாற்றில் தடுப்பு அணைகள்


பாலாற்றில் தடுப்பு அணைகள்
x
தினத்தந்தி 6 Feb 2019 4:00 AM IST (Updated: 5 Feb 2019 7:28 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் நீர்வளம் மிகவும் குறைவு. இந்த மாநிலத்தில் உற்பத்தியாகி, இங்கே ஓடி கடலில் கலக்கும் ஆறு என்றால், அது நெல்லை மாவட்டம் பொதிகை மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி தான்.

மிழ்நாட்டில் நீர்வளம் மிகவும் குறைவு. இந்த மாநிலத்தில் உற்பத்தியாகி, இங்கே ஓடி கடலில் கலக்கும் ஆறு என்றால், அது நெல்லை மாவட்டம் பொதிகை மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி தான். மற்றபடி கர்நாடகம், ஆந்திரா, கேரளாவில் இருந்து ஓடிவரும் தண்ணீரை வைத்துத்தான் தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக விவசாயம் நடக்கிறது. குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது. நமது நாட்டின் சட்டத்திட்டங்களின்படி, நதிகள் உற்பத்தியாகும் மாநிலங்களில் அந்த நதிநீரை அடிப்படையாக வைத்து எந்தத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவேண்டுமென்றாலும், அந்த நதி ஓடிவரும் கடைமடை மாநிலத்தின் ஒப்புதலையும் பெறவேண்டும். இதைத்தான் அண்டை மாநிலங்களோடு நாம் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் வலியுறுத்தி கூறுகின்றன. கர்நாடக மாநிலம், சிக்பெல்லாபூர் மாவட்டம் நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் பாலாறு கர்நாடக மாநிலத்தில் 93 கி.மீட்டரும், ஆந்திராவில் 33 கி.மீ. தூரமும் ஓடிவந்து தமிழ்நாட்டில் 222 கி.மீ. தூரம் பயணித்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாயலூரில் கடலில் கலக்கிறது. வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களும், சென்னை பெருநகரும் விவசாயம், குடிநீருக்காக பாலாற்றையே நம்பியிருக்கிறது. வேலூர் மாவட்டத்தில் மட்டும் 4 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனத்திற்காக பாலாற்றின் நீரை நம்பிக்கொண்டிருக்கிறது. இதுதவிர, ஒரு கோடிக்கும் மேலான மக்களின் குடிநீர் தேவையை தீர்க்கும் நீராதாரம் பாலாறுதான். 

இந்தநிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி, ஆந்திர அரசு 21 தடுப்பு அணைகளை கட்டிவிட்டது. இதனால், தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீரின் அளவு பெரிதும் குறைந்தது. கிளை நதிகளைகூட ஆந்திர அரசு விட்டுவிடாமல், கிளைநதிகளிலும் தடுப்பு அணைகளை கட்டிக்கொண்டிருக்கிறது. இந்த 21 தடுப்பு அணைகளை தமிழக அரசின் எதிர்ப்பையும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகளையும் மீறி ஆந்திர அரசு கட்டியதால், பாலாறு வறண்டு போய்விட்டது. வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போல இந்த 21 தடுப்பு அணைகளின் உயரத்தை மேலும் அதிகரிக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆந்திர அரசாங்கம் ரூ.41.70 கோடி ஒதுக்கியதால் அந்த பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. மழை காலங்களில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் இந்த 21 தடுப்பு அணைகளையும் தாண்டிவரும்போது, கொஞ்சமாவது பாலாற்றில் தண்ணீர் கிடைத்து வந்தது. இப்போது அதற்கும் ஆப்பு வைப்பதுபோல 500 மீட்டருக்கு ஒரு தடுப்பு அணை என்ற விகிதத்தில் மேலும் 30 தடுப்பு அணைகளை கட்டுவதற்கான நடவடிக்கைகளை ஆந்திர அரசாங்கம் எடுத்து வருகிறது. இந்த தடுப்பு அணைகள் கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கு பாலாற்றிலிருந்து ஒருசொட்டு தண்ணீர்கூட கிடைக்காது.

ஆந்திர அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த முதல்–அமைச்சர், பிரதமரை நேரில் சந்தித்து ஆந்திர அரசின் இந்த முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டுகோள் விடுக்கவேண்டும். உடனடியாக ஆந்திரா சென்று சந்திரபாபு நாயுடுவையும் நேரில் சந்தித்து பேசி நமது கோரிக்கைகளை நட்புரீதியிலேயே வலியுறுத்தி தடுப்பணைகளை கட்டினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகளை எடுத்துக்கூறவேண்டும்.  தடுப்பணைகள் கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால் பாலாறு பாலைவனமாகி, வேலூர் உள்பட பல வடமாவட்டங்கள் பெரும் பாதிப்புள்ளாக்கப்பட்டுவிடும் என்பதால் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Next Story