நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய வேண்டும்


நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய வேண்டும்
x
தினத்தந்தி 6 Feb 2019 10:30 PM GMT (Updated: 2019-02-06T18:36:35+05:30)

மின்சாரம் இல்லையென்றால் வாழ்க்கையே நிச்சயமாக இருண்டுபோய்விடும். சின்னஞ்சிறு குக்கிராமங்களில்கூட மின்சார பயன்பாடு ஊடுருவிவிட்டது.

மின்சாரம் இல்லையென்றால் வாழ்க்கையே நிச்சயமாக இருண்டுபோய்விடும். சின்னஞ்சிறு குக்கிராமங்களில்கூட மின்சார பயன்பாடு ஊடுருவிவிட்டது. மின்சார உற்பத்தியை பொறுத்தமட்டில், நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் அனல்மின்சார நிலையம், நீரை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் புனல்மின்சார நிலையம், எண்ணெய், இயற்கை எரிவாயு போன்றவற்றை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் மரபுசார்ந்த மின்உற்பத்தி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவையெல்லாம் இயற்கைதரும் அருட்கொடைகள். எவ்வளவு நாட்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கமுடியாது. இதுமட்டுமல்லாமல், உலகம் வெப்பமயமாகி கொண்டிருக்கும் நேரத்தில், அனல்மின்சார நிலையங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்ற குறைபாடும் இருக்கிறது. சுற்றுச்சூழல் பாதிக்காமல் மின்சாரம் தயாரிக்க வேண்டுமென்றால் மரபுசாரா மின்உற்பத்தி செய்யப்படும் சூரியசக்தி, காற்றாலை போன்ற திட்டங்களால் நிச்சயமாக முடியும்.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், சூரியசக்தி மின்உற்பத்திக்கும், காற்றாலை மூலம் மின்உற்பத்திக்கும் நல்லவாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் மழைக்கு பஞ்சம் இருக்குமேதவிர, சூரியவெப்பத்திற்கு ஒருநாளும் பஞ்சம் இருந்ததில்லை. ஆண்டுக்கு 300 நாட்கள் கடும்வெயில் அடிக்கும் நாட்களாகவே இருக்கிறது. இதை கருத்தில்கொண்டுதான் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா 2012–ம் ஆண்டு முதன்முதலாக சூரியமின்சக்தி கொள்கையை வெளியிட்டார். அப்போது அவர் 2015–ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் 3 ஆயிரம் மெகாவாட் சூரியமின்சக்தியை உற்பத்திசெய்யும் நிறுவுதிறன் இருக்கும் என்று இலக்கு நிர்ணயித்தார். இப்போது ஏறத்தாழ 6 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இன்னும் அந்த இலக்கு எட்டப்படவில்லை. தற்போதைய நிலவரப்படி 2,281 மெகாவாட் சூரியமின்சக்தி உற்பத்தித்திறன்தான் உள்ளது. 

இந்தநிலையில், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்போது 2–வது சூரியமின்சக்தி கொள்கையை வெளியிட்டுள்ளார். 2022–ம் ஆண்டில் இந்தியா முழுவதும் 1 லட்சம் மெகாவாட் சூரியமின்சக்தி உற்பத்தி செய்வதற்கான மின்திட்டங்கள் நிறுவப்படும் மத்திய அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், தமிழக அரசு 9 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை 2023–க்குள் உற்பத்தி செய்வதற்கான மின் உற்பத்தித்திறனை இலக்காக நிர்ணயித்துள்ளார். இந்த இலக்கை அடைவதற்கு நிச்சயமாக மிகத்தீவிரமாக செயல்திறனை காட்டவேண்டும். கடந்த 6 ஆண்டுகளில் 2,281 மெகாவாட்தான் சூரியமின்சக்தி உற்பத்தித்திறன் என்ற நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் 6,719 மெகாவாட் உற்பத்தி செய்தால்தான் இலக்கை அடையமுடியும். கடந்த ஆண்டுகளில் வீடுகளின் மேற்கூரைகளில் ‘சோலார் பேனல்கள்’ என்று அழைக்கப்படும், சூரியமின்சக்தி தகடுகள் அமைக்கும் இலக்கு முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. தற்போது இந்தகொள்கையில் வீடுகளின் மேற்கூரைகளில் அமைக்கப்படும் மின்சார பேனல்கள் மூலமாக 40 சதவீத சூரியசக்தி மின்சார உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோல தொழிற்சாலைகள், ரெயில் நிலையங்கள், தனியார் தொடங்கும் சூரியசக்தி உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றுக்கும் நல்ல ஊக்கம் அளிக்கவேண்டும். ஏற்கனவே சிலமாதங்களுக்கு முன்பு குஜராத் மற்றும் கேரளா மாநிலங்களைப்போல, தமிழ்நாட்டிலுள்ள நீர்நிலைகளில் இருக்கும் தண்ணீர் ஆவியாகாமல் தடுக்கவும், மின்சாரம் தயாரிக்கவும், ரூ.1,125 கோடி மதிப்பில் மிதக்கும் சூரியசக்தி மின்சாரதகடுகள் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதுபோன்ற நவீனதிட்டங்களை மிகவேகமாக செயல்படுத்தவேண்டும். இத்தகைய சூழ்நிலையில், சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க நல்லவாய்ப்புள்ள தமிழ்நாட்டில் இலக்குகளை தாண்டுவதற்கு சீரிய திட்டங்களை செயல்படுத்தி நல்ல ஊக்கசலுகைகளை அளித்தால், 9 ஆயிரம் மெகாவாட் என்ன?, அதற்கு மேலேயே உற்பத்தி செய்யமுடியும்.

Next Story