படிப்புக்கு ஏற்ற வேலை


படிப்புக்கு ஏற்ற வேலை
x
தினத்தந்தி 7 Feb 2019 10:30 PM GMT (Updated: 2019-02-07T19:00:58+05:30)

பள்ளிக்கூடத்திற்கு செல்லாத குழந்தைகளே இல்லை என்ற இலக்கை தமிழ்நாடு நெருங்கிவிட்டது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ‘கனவு காணுங்கள்’ என்பார்.

ள்ளிக்கூடத்திற்கு செல்லாத குழந்தைகளே இல்லை என்ற இலக்கை தமிழ்நாடு நெருங்கிவிட்டது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ‘கனவு காணுங்கள்’ என்பார். அதை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே நெஞ்சில் நிறுத்தி வைத்துதான் தங்கள் கல்வியை தொடர்கிறார்கள். பள்ளிக்கூடங்களில் படிக்கும் போதிலிருந்தே பிற்காலத்தில் இந்த வேலைக்குத்தான் போவேன் என்பதை தன் இலக்காக வைத்து அந்த விருப்பம் நிறைவேற வேண்டும் என்பதில்தான் கனவுகண்டு கொண்டிருக்கிறார்கள். 

படித்து முடித்து வெளியே வந்தவுடன் நிலைமையே வேறாக இருக்கிறது. முதலில் தான் விரும்பிய வேலையை அடைந்தே தீரவேண்டும் என்ற ஆசையில், அந்தவேலைக்கான முயற்சியை மேற்கொள்கிறார்கள். காலப்போக்கில் அந்தவேலை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டவுடன் தோல்வியால் துவண்டுபோய்விடுகிறார்கள். நான் நினைத்த வேலைதான் கிடைக்கவில்லை. ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் வாழ்க்கையை ஓட்டிக்கொள்ளலாம், படிப்புக்கான கடனை அடைத்துவிடலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் படிப்புக்கு சம்பந்தமே இல்லாத சாதாரண வேலையில்கூட சேர மனதை தயார்படுத்திக்கொள்கிறார்கள். அதனால்தான் இப்போதெல்லாம் கீழ்மட்ட பணிகளில்கூட பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, என்ஜினீயர்கள் போன்ற உயர்படிப்புகளில் படித்தவர்கள் சேரும் நிலைமை உள்ளது. போலீஸ்காரர்கள் படிப்புக்கு குறைந்த கல்வித்தகுதி 10–ம் வகுப்புதான். ஆனால் சமீபகாலங்களில் தேர்வு பெற்றோர் பட்டியலை பார்த்தால் பெரும்பாலும் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, ஏன் என்ஜினீயர்கள் கூட இருக்கிறார்கள். ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் சமீபத்தில் 2, 3 வழக்குகளில் ஐகோர்ட்டில் ரூ.6,500 சம்பளத்தில் துப்புரவு பணிகளுக்குக்கூட என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளனரே என்று மிக கவலையுடன் தெரிவித்தார். 

இப்போது அதேபோல சட்டமன்ற செயலகத்தில் தரை பெருக்குவோர், துப்புரவு பணியாளர் வேலைக்கு 14 பேர் வேண்டும். ஆனால் 50 என்ஜினீயரிங் படித்தவர்கள், 4 எம்.சி.ஏ. படித்தவர்கள், எம்.டெக். படித்த ஒருவர், எம்.காம். படித்தவர்கள் 13 பேர், பி.காம். பட்டப்படிப்பு படித்த 88 பேர், பி.ஏ. படித்தவர்கள் 60 பேர், பி.எஸ்சி. படித்தவர்கள் 41 பேர், பாலிடெக்னிக் படித்தவர்கள் 26 பேர் என்று குறைந்தபட்ச கல்வித்தகுதி 8–ம் வகுப்பு என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த வேலையில் சேர ஏராளமானவர்கள் போட்டியிடுகிறார்கள். இதுபோன்ற நிலைமை தமிழ்நாட்டில் வளர்வது நல்லதல்ல. பொதுவாக ஆண்டுக்கு ஒவ்வொரு படிப்பிலும் படித்துமுடித்து எத்தனை பேர் வெளியே வருகிறார்கள்?, அவர்களுக்கேற்ற வேலைவாய்ப்புகள் எத்தனை தயாராக இருக்கிறது?, எவ்வளவு பேர் ஒவ்வொரு படிப்பிலும் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்?, அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க என்னென்ன திட்டங்கள் இருக்கின்றன? என்பதை அரசு விரிவாக கணக்கெடுத்து வெளியிடவேண்டும். அப்படி ஒரு கணக்கெடுப்பை நடத்தினால், அதற்கு ஏற்றவகையில் உற்பத்தி துறையிலும், வேளாண் துறையிலும், அரசு பணிகளிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கமுடியும். தனியாரையும் ஊக்குவிக்கவேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். ஊக்குவிப்பு சலுகைகள் நிறைய வழங்கவேண்டும். முதலீடுகள் பெருமளவில் வந்து குவிந்தால்தான் தொழில்கள் வளரும், வேலைவாய்ப்பு பெருகும். எல்லோருக்கும் அவரவர் படிப்புக்கு ஏற்ற வேலை, அவரவர் கனவுக்கு ஏற்ற வேலை கிடைப்பதை உறுதிசெய்யும் வகையிலான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கவேண்டும்.

Next Story