பட்ஜெட்டில் நிதி மேலாண்மை


பட்ஜெட்டில் நிதி மேலாண்மை
x
தினத்தந்தி 8 Feb 2019 10:30 PM GMT (Updated: 8 Feb 2019 1:28 PM GMT)

2019–20–ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார்.

2019–20–ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலும், அதோடு 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் வரவாய்ப்புள்ள சூழ்நிலையில், மத்திய அரசாங்கத்தைபோல, வடமாநில பட்ஜெட்களைப்போல, தமிழக அரசும் விவசாயிகளுக்கு ரொக்க உதவிகள் வழங்கும், பல புதிய இலவசங்கள், மானியங்கள் ஏராளமாக அறிவிக்கப்படும் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் தேர்தலை மனதில் வைத்து அந்தவகையிலான கவர்ச்சி அறிவிப்புகள் எதுவும் நேற்றைய பட்ஜெட்டில் இல்லை. 

தமிழக அரசு தற்போது நிதிச்சுமையில் தத்தளித்துக் கொண்டிருப்பது இந்த பட்ஜெட்டில் தெளிவாக தெரிகிறது. கடந்த நிதிஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.19 ஆயிரத்து 319 கோடியே 2 லட்சமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு மொத்த வருவாய் வரவு ரூ.1 லட்சத்து 97 ஆயிரத்து 721.17 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப் பட்டுள்ளது. வருவாய் செலவினங்கள் ரூ.2 லட்சத்து 

12 ஆயிரத்து 35.93 கோடியாக இருக்கும் என்றும், இதனால் வருவாய் பற்றாக்குறை ரூ.14,314.76 கோடியாகத்தான் இருக்கும் என்றும் கணக்கிடப் பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறை குறைந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேநேரத்தில் நிதிப்பற்றாக் குறை ரூ.44,176.36 கோடியாக இருக்கும். அரசின் வருவாயில் அரசு ஊழியர்கள் சம்பளத்திற்காக 

ரூ.55 ஆயிரத்து 399.75 கோடியும், பிற ஓய்வுகால பலன்களுக்காக ரூ.29 ஆயிரத்து 627.11 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

அரசு ஊழியர்கள் சம்பளம் மற்றும் ஓய்வு ஊதியத்திற்காக மட்டும் ரூ.85 ஆயிரத்து 26.86 கோடி போய்விடுகிறது. இதுதவிர உதவித்தொகைகள், உணவு மானியம், மின்சாரமானியம், கல்வி உதவித் தொகைகள், வீட்டுவசதி திட்டங்கள், சமூகபாதுகாப்பு ஓய்வு ஊதியங்கள் மற்றும் விவசாயக்கடன் தள்ளுபடி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களுக்கான செலவினங்களை உள்ளடக்கிய நிதி மாற்றங்களுக்காக ரூ.82 ஆயிரத்து 673.32 கோடி போய்விடுகிறது. தமிழக அரசு இவ்வாறு இதுபோன்ற செலவுகளுக்காக அரசின் வருவாயில் பெரும்பாலான நிதி போய்விடுவதால், வளர்ச்சித்திட்டங்களுக்கு கடன் வாங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது. வாங்கிய கடன்களுக்காக கடந்த ஆண்டு மட்டும் செலுத்தப்பட்ட வட்டி ரூ.29 ஆயிரத்து 624 கோடி என்று மதிப்பிடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு வட்டி செலுத்துவதற்கான செலவினம் ரூ.33 ஆயிரத்து 226.27 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட அளவைவிட குறைவாக ரூ.43 ஆயிரம் கோடி அளவிலேயே கடன்பெற உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதை சேர்த்தால் 2020–ம் ஆண்டு மார்ச் 31–ந்தேதி அன்று நிகர கடன் நிலுவைத் தொகை தமிழக அரசுக்கு ரூ.3 லட்சத்து 97 ஆயிரத்து 495.96 கோடியாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், எந்தவித புதிய சலுகைகளையும், இலவசங்களையும், மானியங்களையும் அறிவிக்கவேண்டும் என்றால் கடன் வாங்கித்தான் அரசு அறிவிக்கவேண்டும். மாநில மொத்த உற்பத்தியில் இப்போதைய மொத்த கடன் மதிப்பு 23.02 சதவீதம் மட்டுமே இருக்கிறது. 25 சதவீதம் வரை வாங்கலாம் என்றநிலையில், தேர்தலை மனதில் வைத்து இன்னும் கடன்வாங்கி இலவசங்களை அறிவிக்காமல் நிதி மேலாண்மையில் தமிழக அரசு அக்கறை காட்டியிருப்பது பாராட்டத்தக்கதாகும். இதுபோல, மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப்பற்றாக் குறை 3 சதவீதம்வரை இருக்கலாம் என்றாலும், 2.56 சதவீதமாக இருக்கும் என்பதும் வரவேற்கத்தக்கதாகும். எனவே, வளர்ச்சித்திட்டங்களை நிறைவேற்றவேண்டும் என்ற குறிக்கோளாடு அரசின் செலவுகளை குறைத்து வருவாயை பெருக்கவேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு இருக்கிறது. மொத்தத்தில், புதிய அறிவிப்புகளுக்கு தடையாக இருப்பது நிதிப்பற்றாக்குறைதான். 

Next Story