தலையங்கம் பயன்பெறும் விவசாயிகள் யார்-யார்?


தலையங்கம் பயன்பெறும் விவசாயிகள் யார்-யார்?
x
தினத்தந்தி 10 Feb 2019 8:41 PM GMT (Updated: 10 Feb 2019 8:41 PM GMT)

விவசாயியின் வாழ்வில் எப்போதும் இடுபொருட்களின் விலை அதிகம், விளைபொருட்களுக்கு விலைகுறைவு என்ற நிலைதான் இருந்து கொண்டிருக்கிறது.

இந்தநிலையில், விவசாயிகளின் ஓட்டுகளை வாங்கவேண்டுமென்றால் அவர்களுக்கு ஏதாவது செய்தால்தான் பலன் கிடைக்கும் என்ற நிலைமை தொடங்கியிருக்கிறது. அதனால்தான், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச வருமானத்தை அனைவருக்கும் உறுதி செய்யும் திட்டத்தை செயல்படுத்துவோம் என அறிவித்தார்.

பிரதமர் நரேந்திரமோடி 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் சிறு, குறு, நடுத்தர விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரத்தை அவர்களுடைய வங்கிக்கணக்கில் செலுத்தும் திட்டத்தை இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்க செய்துவிட்டார். 3 தவணைகளில் விவசாயிகளின் கணக்கில் தலா ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்படும். இதற்காக அடுத்த ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கவும், இந்த ஆண்டு எஞ்சியுள்ள ஒரு தவணைக்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான ரூ.2 ஆயிரம் ஏப்ரல்-மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தலை நடத்தும் முன்பு மார்ச் 31-ந்தேதிக்குள் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்க வேகமாக வேலைகள் நடந்து வருகின்றன. இதற்காக 5 ஏக்கருக்கும் குறைவான நிலத்தை வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள் பட்டியலை தயாரிக்க அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும், வேளாண்மைதுறை முதன்மை செயலாளர்களுக்கும், மத்திய அரசாங்கத்தால் கடிதம் எழுதப்பட்டுள்ளது. விவசாயிகளின் பெயர், அவர்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் யார்-யார்?, யார்-யாரெல்லாம் பயன் அடைகிறார்கள்? என்ற பட்டியலை அந்தந்த கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில் ஒட்டவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், ஒரு ஹெக்டேர் நிலத்திற்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை 2015-2016-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி 62.24 லட்சமாகும். ஒரு ஹெக்டேர் முதல் 2 ஹெக்டேர்வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை 11.19 லட்சமாகும். சில தினங்களுக்கு முன்பு மத்திய வேளாண்செயலாளர் இந்த மாதம் 1-ந்தேதி வரை நிலம் வாங்கியவர்கள் அனைவரும் இந்த உதவியை பெற தகுதி படைத்தவர்கள் என்று கூறியுள்ளார். இந்தநிலையில் 2 ஹெக்டேருக்கு குறைவான நிலம் வைத்திருந்தாலும் சிலர் இந்த தொகையை பெறமுடியாது என்று மத்திய அரசாங்கம் ஒரு விளக்கத்தை இப்போது வெளியிட்டுள்ளது. எனவே தமிழக அரசு இந்த அடிப்படைகளில் புதியபட்டியலை தயாரிக்க பிப்ரவரி 1-ந்தேதியை ‘கட்-ஆப்’ தேதியாக வைத்து நிலப்பதிவேட்டை வங்கிக்கணக்குகளுடன் இணைத்து முழுமையாக டிஜிட்டல் மயமாக்கிவிட்டால், அடுத்த நாளே யார்-யார் இந்தத்திட்டத்தின்கீழ் ரூ.6 ஆயிரம் பெறுவார்கள் என்ற பட்டியலை துல்லியமாக எடுத்துவிடமுடியும். எனவே, நிலப்பதிவேட்டை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கி அதனடிப்படையில் அடுத்த சிலநாட்களில் பயன்பெறுவோர் பட்டியலை கிராம பஞ்சாயத்துகளில் ஒட்டவேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது. மேலும் இந்தத்திட்டத்தின்கீழ் நிலஉரிமையாளர்களுக்குத்தான் உதவிதொகை கிடைக்கும். அதை குத்தகைக்கு எடுத்து பயிரிடுவோருக்கோ, நிலமில்லாமல் விவசாய தொழிலாளர்களாக பணியாற்றுபவர்களுக்கோ எந்தப்பயனும் கிடைக்காது. அவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்தத்திட்டத்தை விரிவுபடுத்தவேண்டும். பயிரிடும் செலவு மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது என்ற கருத்தும் இருக்கிறது. எனவே, இதையெல்லாம் பரிசீலித்து அடுத்த சில மாதங்களில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யும்போது அனைத்து விவசாயிகளுக்கும் அள்ளித்தரும் திட்டங்களை அறிவிக்கவேண்டும்.


Next Story