மரம் வளர்ப்பில் மாணவர்கள்


மரம் வளர்ப்பில் மாணவர்கள்
x
தினத்தந்தி 11 Feb 2019 9:30 PM GMT (Updated: 2019-02-11T20:40:02+05:30)

கடந்த ஆண்டு தமிழகஅரசு, ‘தமிழ்நாடு மாநில வனக்கொள்கை’யை வெளியிட்டது.

மாநிலத்தில் மொத்தம் உள்ள நிலப்பரப்பில் 3–ல் ஒரு பங்கு நிலப்பரப்பிலும், மொத்த மலைப்பகுதியில் 3–ல் 2 பங்கு நிலப்பரப்பிலும் மரங்களை வளர்த்து, அவற்றை வனப்பகுதியாக உருவாக்குகிற அல்லது அடர்த்தியான மரவளர்ப்பு சாதனையை அடைவது ஆகியவை இந்த வனக்கொள்கையின் முக்கிய நோக்கமாகும். மரவளம் இருந்தால்தான் மழைவளம் பெருகும். ஆனால் தமிழ்நாட்டில் மரவளம், வனவளம் மிகக்குறைவாக இருக்கிறது. மழைவளம் குறைந்து வருவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். ஏராளமான மரங்கள் இருந்தால்தான் மழைவளம் மட்டுமல்லாமல், மனிதகுலத்திற்கும் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். எப்படியென்றால், பெட்ரோல்–டீசல் போன்ற எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்களால் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளால் ஏராளமான கார்பன்–டை–ஆக்சைடை வெளியிடுகின்றன. தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் வாயுகள், தூசுகள் உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதலை ஏற்படுத்துகின்றன. இதையெல்லாம் வடிகட்டி காற்றை சுத்தப்படுத்துபவை மரங்கள் மட்டுமே. 

மரங்கள் பொதுவாக கார்பன்–டை–ஆக்சைடை தனக்குள் கிரகித்து மனிதன் மூச்சுவிடுவதற்கு தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது. இதுமட்டுமல்லாமல், காற்றில் மிதக்கும் தூசுகளை உறிஞ்சிக்கொள்கிறது. சூரியவெப்பம் நிலத்தில் பட்டு சுட்டெரிக்காதவகையில் நிழல்தந்து, வெப்பம் பரவாமல் சுற்றுப்புறத்தை குளிர்ச்சியாக வைக்கிறது. இப்படி ஏராளமான நன்மைகளை அள்ளித்தரும் மரவளம் இப்போது குறைந்துவருகிறது. உலகம் வெப்பமயமாகி கொண்டிருக்கும் சூழ்நிலையில், மரக்கன்றுகளை வளர்ப்பது இன்றியமையாதது என்ற விழிப்புணர்வு உலகம் முழுவதும் பரவிவிட்டது. மரக்கன்றுகளை நடும்பணி இன்னும் தீவிரமாக்கப்படவேண்டும். கடந்த வாரம் டெல்லி உயர்நீதிமன்றம் 2ஜி வழக்கில் பதில்அளிக்க அவகாசம் கேட்டவர்கள் 15 ஆயிரம் மரக்கன்றுகளை நடவேண்டும். தெற்கு டெல்லி வனப்பகுதியில் இந்த மரக்கன்றுகளை நட்டு மழைக்காலம் வரை பராமரிப்பதையும் உறுதி செய்யவேண்டும் என்று புதுமையான தீர்ப்பை அளித்துள்ளது. இந்த மரக்கன்றுகள் ஒவ்வொன்றும் 3½ ஆண்டுகள் வயது உடையதாகவும், 6 அடி உயரம் கொண்ட பாரம்பரிய வகைகளை சேர்ந்தவையாகவும் இருக்கவேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறியிருக்கிறார். பதில் அளிக்க அவகாசம் கேட்டவர்களும் இதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர். 

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் ஒரு நல்ல திட்டத்தை தீட்டியுள்ளார். 6, 7, 8, 9–ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் ஆளுக்கொரு மரக்கன்று நட ஊக்குவிக்கப்படுவார்கள். இதில் கிடைக்கும் அனுபவத்தைக்கொண்டு 10, 11, 12–ம் வகுப்புகள் படிக்கும்போது தலா 3 மரக்கன்றுகள் நட்டு ஒரு ஆண்டு தண்ணீர் விட்டு பராமரித்தால் ஒரு பாடத்துக்கு 2 மதிப்பெண் வீதம் 6 பாடங்களுக்கும் சேர்த்து 12 மதிப்பெண்கள் கிடைக்கும். இந்த மரக்கன்றுகளை அவர்கள் பள்ளிக்கூட நிலத்திலேயோ, தங்கள் சொந்த இடத்திலேயோ, பொது இடங்களிலேயோ நடவேண்டும். இந்தத்திட்டம் மிகவும் வரவேற்கத்தக்கது. கோடிக்கணக்கான மரக்கன்றுகள் வளர வழிவகுக்கும். கல்வி அமைச்சர் இந்தத் திட்டத்தை முதல்–அமைச்சர் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளார். அவர் ஒப்புதல் அளித்தவுடன், வரும் கல்வி ஆண்டிலேயே அமலுக்கு வந்துவிடும். இயற்கை சூழலை பாதுகாக்க மாணவர்கள் எடுக்கும் முயற்சிகளில் தண்ணீர் ஊற்றி பராமரிக்க தேவையான உதவிகளை பள்ளிக்கூட நிர்வாகம், கல்வித்துறை, உள்ளாட்சி அமைப்புகள் வழங்க வேண்டும்.

Next Story